கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில் வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ” ( காலம்; கி.பி 1650 -1698)

கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில்  வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ”  ( காலம்; கி.பி 1650 -1698)

ஆக்கம் – எம்.எம்.எஸ்.செய்யது இபுறாகிம்  – ஸ்டேசன் மாஸ்டர் (ஓய்வு)- உதவி செயலர்- இஸ்லாமி பைத்துல் மால், கீழக்கரை

seethakkathiசெத்தும் கொடை கொடுத்த சீதக்காதி . வரையாது வழங்கிய பெருவள்ளல். ஈந்து சிவந்த கரங்களுக்கு சொந்தமானவர். கார் தட்டிய காலத்தே மார்தட்டி வழங்கிய மால் சீதக்காதி. சேது நாட்டு செந்தமிழ் வள்ளல் என்று இலக்கிய பெருமக்களாலும், புலவர்களாலும் ஒருங்கே புகழப்பட்டு , ஈந்து அறவாழ்வு வாழ்ந்து , சேது நாட்டு அரசியலில் பெரும் பங்காற்றி, மக்கள் சேவையில் தன் வாழ்வை அர்ப்பணித்து தலைசிறந்த கடல் வாணிபத் திலகமாகத் திகழ்ந்து வங்காள விரிகுடாக்கடல், சுவர்ணத்தீவுகள், கடாரம், மேலை நாடுகள், கீழை நாடுகள் வரை வணிகக் கப்பலை  செலுத்தி செந்தமிழ் நாட்டின் தனிப்பெரும் தனவந்தராகவும் , வள்ளலாகவும் பரிணமித்து  தமிழக வரலாற்றில் நீக்காது இடம் பெற்ற சேகு அப்துல் காதர் என்ற சீதக்காதி இன்று அவரால் கட்டப்பட்ட கீழக்கரை ஜும்ஆ பள்ளியின் திறந்த வெளி அடக்கத்தலத்தில் அமைதியாக உறங்குகிறார்.

seethakkathi1 அந்துபார், அனிச்சமங்களம் , வச்சிரநாடு,  செம்பிநாடு , வகுதை , பவுத்திர மாணிக்கப்பட்டினம் , தென் காயல் , நினைத்ததை முடித்தான் பட்டினம் ,  என்ற பல சிறப்புப் பெயர்களைத் தாங்கிய கீழக்கரையில் கி.பி. 1650ம் ஆண்டு சேகு கண்டு மரைக்காயர் வாரிசு வழிவந்த பெரிய தம்பி மரைக்காயரின் தவப் புதல்வராக வள்ளல் சீதக்காதி பிறந்தார். கி.பி. 1698ம் ஆண்டு அகால மரணமடைந்த வள்ளல் சீதக்காதி இடைப்பட்ட 48 ஆண்டுகளில் மகத்தான அரிதான சாதனைகள் புரிந்து வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.

தமிழ் புலவர்களை ஆதரிக்கும் புரவலர்கள் குன்றிட்ட 17ம் நூற்றாண்டில் வள்ளல் சீதக்காதி  ஒருவர் மட்டுமே தமிழ் புலவர்களை ஆதரித்தார். கீழக்கரையில் மன்னர்களும், மகுடாதிபதிகளும் , தமிழ் மக்களும் ஒருங்கே பாராட்ட பெருவாழ்வு வாழ்ந்தது வந்தவர்  வள்ளல் சீதக்காதி. கடையேழு வள்ளல்களுக்குப்பின்  வள்ளல்களே இல்லையோ என்ற குறையைப் போக்கியவர் வள்ளல் சீதகாதி.அரபி நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் , நமது நாட்டில் அப்போது நிலை கொண்டு இருந்த்த ஆங்கிலேய ஆட்சியும் இவரைப் பெரிதும் மதித்தன.

வழங்கு மனமும் , வளமான செல்வமும், நிறைந்த கல்வியும் , நேர்மையும், அடக்கமும், இரக்கமும் , எளிமையும், ஞானமும், பொறையும், நயத்தகு உரையும் ஒருங்கே அவரிடம் அமைந்திருந்தன.

sethakathi2தாய்மொழி உணர்வு குன்ற ஆரம்பித்த காலகட்டத்தில் , ஆட்சியிலே தெலுங்கும் மராத்தியும் கொலுவீற்றிருக்கும் வேளையில் , தமிழ் மண்ணில் ஆங்கில , பிரெஞ்சு ,  டச்சு ,போர்சுகல் மொழிகள் சுடர்விட ஆரம்பித்த கால கட்டத்தில் வள்ளல் சீதக்காதி தமிழ் வளர்ப்பதில் வளமாக்குவதில் பெரும் கவனம் செலுத்தினார். புலவர்களை ஆதரித்தார், புலவர்களுடன் உறவு கொள்ள, உரையாட மகிழ விழைந்தார் வள்ளல் சீதக்காதி . அவர் நேசித்ததும்  போற்றியதும், வளர்த்ததும் , வளம் பெற வைத்ததும் தமிழ் மொழிதான் என்பது வெள்ளிடை மலையாகும்  அவருடைய தமிழ் பற்றுதல் தான் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது,

தலைமாலை கண்டத்தேவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், படிக்காசுத் தம்பிரான், நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர், எட்டயபுரம் உமறுப் புலவர் ஆகிய தமிழ்ப் புலவர்களின் கவிதைப் படைப்புகளும், சீதக்காதி திருமண வாழ்த்துப் பாடல்கள், நொண்டி நாடகம் போன்ற தமிழ் இலக்கிய படைப்புகளெல்லாம் சீதக்காதியின் வள்ளல் தன்மையையும் , சமய நல்லிணக்கத்தையும் பறைசாற்றுகின்றன.

பல இலக்கிய படைப்புகளுக்கு வள்ளல் சீதக்காதி கொடைநாயகராக  விளங்கினார் பாட்டுடைத் தலைவராக, பல படைப்புகள் மலர வளர வாய்ப்பாக வாழ்ந்தார்.

” இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் பரகசியமாகவும் தானம் செய்யுங்கள்”  என்ற இஸ்லாமிய  கோட்பாட்டின் அடிப்படையில் வள்ளல் சீதக்காதி வரையாது வழங்கினார்.

சேது மன்னர்கள், சீதக்காதி இடையில் ஏற்பட்ட தொடர்பின் முலம் சேது நாட்டின் சமய நல்லிணக்கமும் ஒற்றுமையும் வலுப்பெற்றன.

klkjumma வள்ளல் சீதக்காதி சிறந்த ராஜ தந்திரியாகவும் செயல்பட்டார். தனது 30ம் வயதில் சேது  நாட்டு மன்னர் விஜய ரகுநாத கிழவன் சேதுபதியைச் சந்தித்த காலத்தில் இருந்து இம்மன்னரின்  ஆட்சியில் நிகழ்ந்த முக்கியமான போர்களில் வெற்றி வாகை சூட தகுந்த ஆலோசனைகளையும், ராஜதந்திர நடவடிக்கைகளையும், உதவிகளையும் செய்து வந்தார். கி.பி. 1680ல் திருச்சி சொக்கநாத நாயக்கர் ஆட்சியை நிலை நிறுத்துவதிலும் , சேதுநாட்டு பாளையக்காரர்களின் கலவரங்களை ஒடுக்குவதிலும், மதுரை மீது படை எடுத்து வந்த மைசூர் படையெடுப்பை எதிர் கொண்டு வெற்றி வாகை சூடியதிலும் சேது மன்னரின் சாதனைகளுக்கு மூல பலமாக விளங்கியவர். சேது மன்னரின் நண்பரும், வணிகப் பெரு வள்ளலாகிய சீதக்காதியே ஆவார். எனவே வள்ளல் சீதக்காதிக்கு “விஜய ரகுநாத பெரிய தம்பி” என்ற பட்டத்தை சூட்டி கிழவன் சேதுபதி மன்னர் மகிழ்ந்தார். இராமநாதபுரம் கோட்டைக்குள்ளேயே சின்ன அரண்மனை என்று ஒரு இருப்பிடத்தையும் வள்ளல் சீதக்காதிக்கு அமைத்தார்.

பெரு வள்ளலாக, வணிகராக,  தமிழ் வளர்த்த பெருந்தகையாக சமய நல்லிணக்கத்தின் கருவூலமாக , தலைச் சிறந்த ராஜதந்திரியாக தமிழ் நெஞ்சத்தில் சென்ற நான்கு நூற்றாண்டுகளாக நீங்காது இடம் பெற்று  48 ஆண்டுகால பெரு வாழ்வு வாழ்ந்த வள்ளல் பெருமான் சீதக்காதியின்  நினைவாக அவர் பிறந்து வாழ்ந்து சாதனைகள்  புரிந்த புராதான துறைமுகப் பட்டினமான கீழக்கரையில் ஒரு சிறந்த மணி மண்டபம் அமைவது காலத்தின் கட்டாயமாகும்.

அவர்தம் சிறப்பை கீழக்கரை நடுத்தெரு குத்பா பள்ளி வளாகம் இன்றும் பறைசாற்றி வருகிறது.இலக்கியங்களில் அவர் புகழைக் கூறும் சில பிரசித்தி பெற்ற பாடல்களை கீழே காணலாம் .

படிக்காசுப்புலவர்  பாடியது

1.

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு
மார்தட்டிய துரைமால் சீதக் காதி வரோதயனே.

2.  

 ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம்
 காயதிருந் தென்ன காய்த்துப் பலன்என்ன கைவிரித்துப்
 போ(ய்)யாசகம் என்று(உ)ரைப் போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய்
 ஓயாமல் ஈபவன் மால்சீதக் காதி ஒருவனுமே.

3.

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில்பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே.

நன்றி: கீழக்கரை இஸ்லாமி பைத்துல்மால்  வெள்ளிவிழா மலர்.

பிற பாடல்கள் :

சீதக்காதி வள்ளல் இறந்தபோது 'படிக்காசுப்புலவர்' பாடிய 'கையறுநிலை'ப்பாடல்

மறந்தா கிலும்அரைக் காசுங் கொடா மடமாந்தர் மண்மேல்
இறந்(து)ஆவ(து)என்ன, இருந்(து)ஆவ(து) என்ன, இறந்து விண்போய்ச்
சிறந்தாளும் காயல் துரைசீதக் காதி திரும்பிவந்து
பிறந்தால் ஒழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே.
விண்ணுக்கும் மணணுக்கும் பேராய்விளங்கு தேவேந்த்ரன்(எ)னும்
கண்ணுக் கினிய துரைசீதக் காதி கமலநிகர்
தண்ணுக் கிசைந்த வதனசந்த் ரோதய சாமியிந்த
மண்ணுக்குளே யொளித்தான் புலவோர் முகம் வாடியதே.
தேட்டாளன் காயல் துரைசீதக் காதி சிறந்தவச்ர
நாட்டான், புகழ்க்கம்ப நாட்டி வைத்தான், தமிழ்நாவலரை
ஓட்டாண்டி யாக்கி அவர்கள்தம் வாயில் ஒருபிடிமண்
போட்டான், அவனும் ஒளித்தான் சமாதிக் குழிபுகுந்தே
பூமாது இருந்தென், புவிமாது இருந்தென், இப்பூதலத்தில்
நாமாது இருந்தென்ன, நாம்இருந் தென்ன,நன் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே.**

 சீதக்காதி வள்ளலை நமச்சிவாயப்புலவர் பாடியவை

   மைப்போ தகமும் வளநாடுஞ் செந்தமிழ் வாணர்க்கருள் 
   கைப்போ தகமனை யான்சீதக் காதியைக் காத்திருந்த 
   அப்போ தறிந்திலம் இப்பாழ்ம் பணத்தின் அருமையெல்லாம் 
    இப்போ தறிந்தனம் ஈயாத லோப ரிடத்திற்சென்றே. 

    தடக்கும்ப கிம்புரிக் கொம்ப சலப்பெருந் தந்திபட 
    நடக்குந் துரங்கத் துரைசீதக் காதிநன் னாட்டினல 
    வடக்குங் குமக்கொங்கை மின்னே யவனறெரு வாயிலிலே 
    கிடக்குங் கலியும் பரராச ரத்ன கிரீடமுமே. 

  தலைவன் பொருளீட்டற்குக் கப்பலேறிப் போயினானாக,   தலைவி அவன் பிரிவாற்றாது வருந்திக்கூறல் 

 தரைகண்ட மட்டும் படர்ந்தண்ட கோளமுந் தாவியெங்கும் 
 உரைகண்ட கீர்த்தி பெறுஞ்சீதக் காதி யுலகினில்
வெண்டிரைகண் டெழுங்கடன் மீதேதன் வங்கத்தைச் செல்லவிட்டுக் 
 கரைகண் டவனினங் காணானென் னாசைக் கடற்கரையே. 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *