வகுதைக் கரையினிலே….. கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

mahmood naina
வகுதைக் கரையில்….. கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

நடப்புக் காலம் துன்முகி தமிழ் ஆண்டு…. கோடை கடந்தும் வெயில் ஏன் இப்படி சுட்டெரிக்கிறது? கனல் காலம் தொடங்கிய நாளிலிருந்தே தன் உக்கிரம் கூட்டி நம் உச்சி மண்டையை கொதிக்க வைத்த வெயில் , ரமலான் தலைப்பிறையில் வேதாந்தமாய் திடுமென சாந்தி அடைந்து, அப்புனித மாதம் முழுதும், நம் உள்ளத்தையும், உடலையும் இறைவன் அருளால் குளிர்வித்தது எதேச்சையானதா?… இல்லை

சீதோஷன நிலை சடுதியில் மாறிய இந்த விந்தையை குறித்து, , கடந்த வாரம் கிழக்குத்தெரு அப்பா பள்ளியில் வழக்கமாய் குத்பா பயான் பிரசங்கத்துக்கு காயல்பட்டினத்தில் இருந்து வரும் கதீப் சாகிப் அன்று வராத சூழலில் அரிதாய் என்றாவது மிம்பர் ஏறும் சம்சுதீன் ஆலிம், ஏன் இந்த மாற்றம் ? என விரிவான பயான் ஒன்றை சான்றுகளுடன் எடுத்துரைத்தார். இதெல்லாம் ஓவரு… என்று சொல்பவர்கள் சிலர் இருந்தாலும், சன்மார்க்கம் காட்டித்தந்த வழியில் உறுதியுடன் அன்று அவர் உன்மையை முழங்கியதாகவே எனக்குத் தோன்றியது…

இந்த வருடத்தின் பெயரான துன்முகிக்கு அகராதியில் கிடைந்த தமிழ் பெயர்தான் வெம்முகம் அல்லது கோர முகம், அட…. வெயிலின் கொடுமையைவிட …. இது பெரும் கொடுமையாக இருக்கிறதே…சித்திரை தொடக்கத்தில் தமிழ் வருட பிறப்பன்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் முக நூல் மற்றும் வாட்ச் அப் வாயிலாக பகிர்ந்து கொண்ட நாம் ஆண்டின் அகராதிப் பெயரை அப்பொழுது அறிந்தோமா? தமிழாண்டு வட்ட காலண்டரில் இப்படியும் பெயர்கள் இருக்கிறதோ?

தன் எழில் முகம் காட்டி பொன்னொளி வீசிய பகலவன், இங்கே நடக்கும் அவலங்களின் உச்சம் பார்த்து பொறுக்காமல், பொங்கி எழுத்து தன் வெம்முகம் காட்டி சோதனை செய்கிறான் போலும்… வல்ல இறைவன் இந்த ரமலானில் தட்பவெப்ப சூழலில் வசந்தம் தந்து நோன்பாளிகளிகளை உவகை கொள்ளச்செய்தான். இனிய ரமலான் இனிதே முடிந்து, ஆறு நோன்பு பெருநாள் கழித்த அடுத்த நிமிஷம் , தன் கோரமுகத்தின் திரையை உடனே விலக்கி…. அம்புலிமாமா கதையில் தலை கீழாய் தொங்கி வரும் வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு வினா போட்டு விடை தரும் முன் மீண்டும் முருங்கை மரமேறுவது … போல … தன் டெம்பரேச்சரை இஷ்டத்துக்கு ஏற்றி பழைய குருடி கதைக்கு மீண்டும் வந்து உக்கிரமாய் நம் தலையில் உட்கார்ந்து விட்டது , அம்புலிமாமாவில் வரும் வேதாளம் கதையில் நாளைக்குள் விடை சொல்லாவிடில் உன் தலை சுக்கு நூறாய் வெடித்து சிதறும்…. என வேதாளம்

விக்கிரமாதித்தனுக்கு சாபம் கொடுத்து பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் எதுவும் அப்படி எதுவும் நடந்தபாடில்லை? இந்த கேள்வி தந்த உந்துதலில், தமிழில் அம்புலிமாமா மற்றும் தெலுங்கில் சாந்தமாமா குழந்தைகள் இதழ்களை நடத்தி வந்த அய்யா நாகிரெட்டி காருவின் வடபழனி வாகினி ஸ்டூடியோவுக்கு …தன் 15 வயதில் 15 பைசா மஞ்சள் கார்டில் எப்போ… விக்ரமாதித்தன் தலை சுக்கு நூறாகும் என்று அப்பாவியாய்… கடுதாசி எழுதிக்கேட்ட சிவகாமிபுரம் நன்பன் நாகரத்தினம் 45 வயதுக்கு பிறகும் இன்னும் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுதான் இருக்கிராராம்!

ஒரு முன் அந்திப்பொழுதில் கிழக்குத்தெரு நாகேசு கடையிலிருந்து,, எதிரே… அப்பா பள்ளியினை ஒட்டிய ஆட்டோ ஸ்டாண்டும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவால், திறந்து வைக்கப்பட்ட கபாப் செண்டரையும் கடந்து கடல் நோக்கிய ஒரு பொடிசந்தான சே. நெ. தெரு வழியாக … பழைய குத்பா பள்ளியை முட்டி வலப்பக்கம் திரும்பி நடந்து… கடற்கரை புதுப்பாலம் சென்றடைவதற்கு சற்று முன்பாக, ஐஸ்பார்களுக்கு நடுவே பாங்காய் அடுக்கப்பட்டு எக்ஸ்போர்ட்டுக்கு தயாராக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மீன் கம்பெனிகளுக்கு அருகே கடற்கரைப்பள்ளி வாயிலை ஒட்டி செல்லும்பொழுதே… கனலின் உக்கிரத்தில் நமக்கு மனடை சுக்கு நூறாகி விடும்… இது வேதாளத்தின் கைவரிசையா? வினா போடும் வேதாளத்துக்கும், விடை கொடுத்து தப்பித்துக்கொண்டிருக்கும் விக்கிரமாதித்தனுக்கும் விடை தெரிகிறது தவிர, இங்கே நமக்கு வினா தொடுக்கத்தான் தெரிகிறதே…தவிர… விடை தெரியவில்லையே?

என்ன மீனை ஏத்தி அனுப்புறிய காக்கா? என மீன் கம்பெனி ஊழியர் நூர்முகம்மதுவிடம் விடை தொடுத்தேன்.. செய்யது பீடியை ஆழமாய் இழுத்து அதன் புகையை என் முகத்தில் ஊதித் தள்ளியவர்… பார்த்தா தெரியலையாக்கும் ”தம்பி… இது மத்தி மீனு” என்றார். மத்தி என்ற பேச்சாலை மீன்களுக்கு மன்னார் வளைகுடாவில் பரவி அமைந்திருக்கும் பவளப்பாறைகள் மீதான மோகம் அதிகம் போலும், கூட்டம் கூட்டமாய் வந்து டன் கணக்கில் கீழக்கரை மீணவர்கள் வலையில் வசமாய் சிக்கிக் கொள்கிறது….

fish 44தமிழகத்தில் சீண்டப்படாத மத்தி மீனுக்கு கேரளாவில் மவுசு ஜாஸ்தி… நம் கடல் பகுதியில் கிடைக்கு நீட்டு, மற்றும் உருளை மத்திகளில் அரும் மருத்துவ குணங்கள் இருப்பதாக கேரள மக்கள் கருதுவது மட்டுமின்றி ஒமேகா- 3 என்ற புரத சத்து அதிகமாக இருப்பதாகவும் அறிய முடிகிறது…

சீலா மீன் எதுவும் ஃப்ரஷ்ஷா வச்சிரிக்கீளா? எனக்கேட்டேன் சீலா மீனா… அதெல்லாம் நம்ம கடலுல கிடைக்குமா? என விடையில் வினாவை பதுக்கியவர்… அதெல்லாம் வந்து ரெம்ப காலமாச்சு தம்பி என்றார். நிலா சீ ஃபுட் கம்பெனி வேன்… இப்ப வந்துறுவான், மீனை ஏத்தி அனுப்பனும் …. எனக் கூறி நடையை விட்டார்…

தெற்கத்தி தமிழக கடல் புறத்து வாசிகளின் போஜன பட்டியல் வானளாவியது, அதிலும் பிரதானமானது கடல் மீன்கள், சுவை கூட்டி புசிக்க வல்ல மீன்களில் வாலி நோக்கம் , மாரியூர் மற்றும் கீழக்கரை கடற்பரப்பில் கிடைக்கும் சீலா மீன்கள்தான்…

seela meen8

இன்று….பாரிய மாசாக்க சூழலில் அருகி வரும் கடல் வாழ் இனங்களில் சீலாவும் சேர்ந்துவிட்ட நிலை… என் பால்ய பருவத்தில்… இந்த பகுதி கடலில் கிடைக்கும் தூண்டில் சீலாவில் சமைக்கப்பட்ட கெட்டியான மீன் ஆனமும், கொழுப்பு நிறைந்த மீன் தோலோடு பொறிக்கப்பட்ட பொறிச்ச சீலா மீனின் மணமும், சுவையும் தந்த அனுபவம் மீண்டும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என தோன்றியது, மாசாக்கப்பட்ட கடல்பகுதிக்கு சீலா இனம் வர விரும்புவது இல்லையோ? என்னவோ? நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர் செய்யது தனது படகில் முத்துப்பேட்டைக்கு சென்ற மீன‌வர்கள் அந்த பகுதியில் பிடித்த தூண்டில் சீலா மீனில் ஒரு பாகம் தந்தார், கன்மனியின் நளபாகத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து முத்துப்பேட்டை சீலாவில் மீன் ஆனம் காய்ச்சி சாப்பிட நேர்ந்தது.. அது தந்த சுவையில் இன்னும் அற்புத சுவை கொண்ட மீன்கள் கீழக்கரை பகுதி மக்களை கைவிடவில்லை என கொஞ்சம் நம்பிக்கை கூடியது. .

இது துன்முகி காலம்……இங்கே தரப்படும் விடையை எவரும் மதிப்பது இல்லை….. வினாவும், விடையும் தந்த வித்தகர்கள் ஓயா ஒலி தந்து, வெளிர் நுரை ததும்பும் மன்னார் குடா கடலோசையில், அலைவாயிலையொட்டிய கபுருகளில் உறங்கி கொண்டிருக்கிறார்கள்…. மகத்துவம் மிக்கதும், கீர்த்தி மிக்கதுமான ஊர் கீழக்கரை என்பதை பறைசாற்றியவர்கள் நம் முன்னோர்கள் என்பதை நாம் அறிவோம்.

sn st

குறுகலாய் கட்டமைக்கப்பட்ட சே. நெ. தெரு நமக்கு உணர்த்தும் தயாளகுன சீலர் சேகு நெய்னா மரைக்காயர்,… கடந்த நூற்றாண்டில் இந்த வகுதை கரையில் வாழ்ந்த வள்ளல் பெருமகன் ,பழைய குத்பா பள்ளி மையவாடியில் ஓய்வுறக்கமுறும் பெருந்தகை இவர், சமூக நலனில் மிகுந்த அக்கரை கொண்டு தன் ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழக்கரையின் அபிவிருத்திக்கும்,பொதுஜன நலனுக்கும் கொடையாக வாரிய வழங்கியவர் … மக்களின் மனதில் இவர் பெயர் இன்று வெகு குறைவாய் பதிந்திருப்பது போல பரந்த மனம் கொண்ட இவர் பெயர் தாங்கிய தெருவான. சே. நெ தெரு, மிகவும் குறுகலாய் அமைந்து போனதும்… எதேச்சையானதா? …….sn55

 

இல்லை ….ஜாதி வெண் முத்துக்களின் பேரொளியில் முகம் மலர்ந்தவனும், முகில் மறைந்து, நிலம் வறண்டு, தன் குலம் வாடிய காரிருள் பஞ்சத்திலும் நாட்டார் மனம் குளிர ஊனளித்தவனுமான வான் புகழ் வள்ளல் செய்தக்காதி மரைக்காயர், அவர் காட்டிய கொடைவழி நின்றவர்கள் வாழ்வும் அப்படித்தான் அமைத்திருக்கும்…. தொடரும்…..

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *