வகுதைக் கரையினிலே… பாகம்- 2 ….எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா..

வகுதைக் கரையினிலே… பாகம்- 2

எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா..mahmood naina

செ. நே. தெரு மிகக் குறுகலாய் அமைந்து போனதும் எதேச்சையானதா? இல்லை… ஜாதி வென் முத்துக்களின் பேரொளியில் முகம் மலர்ந்தவனும், முகில் மறைந்து, நிலம் வறண்டு, தன் குலம் வாடிய காரிருள் பஞ்சத்திலும் நாட்டார் மனம் குளிர ஊனளித்தவனுமான வான் புகழ் வள்ளல் செய்தக்காதி மரைக்காயர், அவர் காட்டிய கொடைவழி நின்றவர்கள் வாழ்வும் அவர்களின் கொடைத்தன்மைக்கேற்ப விசாலமாகத்தான் அமைந்திருக்கும். சேகு நெய்னா மரைக்காயரின் வாரிசுகளான அசன் மீரா லெப்பையும், அஹமது மீரா லெப்பையும் தம் தந்தை வழி நின்று கீழக்கரையின் வளர்ச்சிப்பனிக்கான நிலங்களை சமூகத்துக்கு கையளித்து இருப்பதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.

குறுகிய தெருக்களும், மிக நெருக்கமாக அமைந்திருக்கும் வீதிகளும், சந்துகளும், சந்துக்களின் ஊடே உட் கிளையாக அமைந்திருக்கும் மூலைகளும், முடுக்குகளும், ஓடைகளுமே வகுதை நகரான கீழக்கரையின் புரதான நகரமைப்பு வடிவமாக அறிய முடிகிறது, போக்குவரத்திலும், குடியுரிமையிலும், சட்டக்கட்டுப்பாடுகள் அவசியமற்ற, நாடு கடந்து பயணம் செய்ய கடவுச்சீட்டும், விசாவும் தேவைப்படாத நம் முந்தைய சமூகத்தில் ஆண் மக்கள் பொருள் ஈட்டும் பொருட்டு தூரக்கடல் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலில், தங்களின் குடும்பங்களின் பாதுகாப்பு காரணமாகவும், குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் உதவ வாய்ப்பு தரும் முகமாகவும் தத்தமது குடியிருப்புக்களை இத்தனை நெருக்கமாக ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி திட்டமிட்டு அமைத்ததால் வந்த நூற்றாண்டுகளுக்கு பிந்தைய விளைவு, இன்று மக்கள் தொகை அதிகரித்து, வீடுகளுக்குள் வீடுகட்டி, மேலும் நெருக்கமான தெருக்களில் விசாலமாக வாசல்படிகளை தொடர்ந்து அமைத்து, இன்று இந்த குறுகிய முடுக்குகளை மேலும் குறுக்கி கல்யானத்திற்கு வீடுகளுக்கு முன் ரிசப்ஷன் வைக்கவும், மற்ற நிகழ்ச்சிகளுக்கு வாசலில் இருக்கைகளை போடுவதற்கும் இன்னும் மரணம் நிகழ்ந்தால் சந்துக்கை ஏற்றி இறக்கவும், ஜனாஷாவை நல்லடக்கத்துக்கு மையவாடிக்கு கொண்டு செல்லவும் முடியாமலும் சிக்கல் உருவாகி பெரும் அவதிப்படுகிறோம்.

செ. நெ தெருவை ஒட்டிய பெத்திரித் தெருவும் , சங்குளிகார தெருவும் அதே போல குறுகலாகத்தான் அமைந்து சச்சரவை கொடுக்கிறது. சிக்கலும், சச்சரவும் கீழக்கரையுடன் ஒட்டிப்பிறந்த உறவாகத்தான் அமைந்திருக்கிறது போலும்…. இந்தப்பகுதியில் இருந்துதான் கீழக்கரை நகர்மன்றத்துக்கு சேர்மன்களும், துனை சேர்மன்களும் அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கவனித்திருப்போம்…அது எதேர்ச்சையானதாக இருக்கலாம். நடப்பு சேர்மனும் இந்த பகுதியை சேர்ந்தவர்தான்,

கடந்த காலங்களில் இவரை சுற்றிய சச்சரவுகள் தெருவமைப்பை போன்று குறுகியது அல்ல எனினும் கீழக்கரையின் வளர்ச்சி திட்டங்களுக்கான அனுமதி நாடி தொடர் பயணங்கள் மேற்கொண்டு அதிகமான மேம்பாட்டு நிதியை அரசிடம் பெற்று நகர் மன்ற கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்ததும் இவர்தான் என்பதையும் நம்பத்தான் வேண்டும்.

கீழக்கரையின் பிரதானதெருக்கள் மட்டுமின்றி, முட்டு சந்திலும், ஒடுங்கிய முடுக்குகளிலும் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலைகள் இன்னும் சில காலம் இவர் சேவையை பறைசாற்றலாம்.

நடுத்தெருவில் பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்து வரும் பாரம்பரிய காஜிகள் என அழைக்கப்படும் டவுன் காலியார்களே கீழக்கரையில் இன்று சேர்மன் என்ப்படும் நிர்வாக அதிகாரிகளாக முகலாயர் பேரரசிற்கும், அதற்குபின் வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கும்பெனி ஆட்சிக்கும் பிரதிநிதிகளான ஆற்காடு நவாப்களால் அங்கீகரிக்கப்பட்டு வந்தனர், முந்தைய தலைமுறை காஜிகளில் காஜி பஹாவுதீன், காஜி செய்ஹ் அப்துல்லா, காஜி கியாதுதீன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக அறிய முடிகிறது, காஜி பஹாவுதீன் அவர்கள் கீழக்கரையின் நகர காஜியாகவும் , ஊர் மன்ற தலைவராகவும் இருந்த 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி புரிந்த சக்கரவர்த்தி ஔரங்கசீப் அவர்கள் வழங்கிய திருக்குர் ஆனின் பிரதியினை இன்றும் காஜிக்களின் வாரிசுகளால் பாதுகாக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது. முகலாய சக்கரவர்த்தி ஷாஜஹானால் கி.பி.1630 இல் காஜியாக அங்கீகரிக்கப்பட்ட காஜி கியாதுதீன் முதல் 13 வது தலைமுறையாக இன்றும் காஜிகள் தொடர்ந்து மார்க்க சேவைகள் வருவதை ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

பழைய குத்பா பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் இமாம் மக்தூம் சின்னெய்னா லெப்பை ஆலிம் அவர்களும், ஞானக்கடல் மாதிஹ் ரசூல் சதக்கத்துல்லா அப்பா அவர்களும, காஜி கியாதுத்தீன் அவர்களும் மொகலாய பேரரசர்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். ஒளரங்கசீப் பாதுஷா ஆட்சியில் மதிப்புக்குரிய உலமாவாக இமாம் சதக்கத்துல்லா அப்பா கருதப்பட்டார்கள், கர்னாடக நவாப்புகள் என அழைக்கப்பட்ட ஆற்காடு நவாப்களின் முதலாமவரான ஜுல்பிகார் கானின் தொடர்பு மூலம் சதக்கத்துல்லா அப்பா பேரரசரின் நன்மதிப்பை பெற்றிருந்தார், அப்பா அவர்களின் வேண்டுகோலை ஏற்று நவாப் அவர்களால் கட்டப்பட்ட பள்ளிதான் சென்னை, மண்னடி அங்கப்ப நாயக்கன் தெருவில் இருக்கும் மஸ்ஜிதே- மாமூர் பள்ளியாகும், அது உருவான வரலாறு குறித்து கிளைக்கதை ஒன்றும் உள்ளது, அதன் மூலம் அப்பா அவர்களின் அளவுகடந்த ஞானத்தை அறிந்து கொள்ளலாம். வங்காளத்திற்கு கவர்னராக நியமிக்க அப்பாவை ஆற்காடு நவாப் மூலம் பேரரசர் வேண்டியபோது வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களை சதக்கத்துல்லா அப்பா பரிந்துரை செய்ததாகவும் , வள்ளல் அந்த பொறுப்பினை சிறிது காலம் வகித்து ஊர் திரும்பியதாகவும் தெரிகிறது…

இந்த நிகழ்வுக்கான சான்றுகளை உறுதிப்படுத்த முடியவில்லை எனினும் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்க கல்கத்தா சென்ற போது, தன்னை மதராஸில் இருந்து வரும் இரண்டாவது கவர்னர் என்று குறிப்பிட்டதாக ஆய்வாளர் கேப்டன் அமீர் அலி தனது நூலில் குறிப்பிடுகிறார்.

பந்தர் கிர்கிரி என மொகலாயர்களால் அழைக்கப்பட்ட கீழக்கரை துறைமுகம் கடந்த1887 ஆண்டு ஒரு ஊராட்சியாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு முதல் சேர்மனாக 1899 ஆம் ஆண்டு காஜி முகம்மது இப்ராஹிம் சாஹிப அவர்கள் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டதையும் அதன் பின் 1903 முதல் 1909 ஆம் ஆண்டுவரை நகர் மன்ற தலைவராக சீர்மிகு பனி ஆற்றியதையும் வரலாறு நமக்கு சாண்றுகளுடன் பகர்கிறது.

அது என்ன பெத்திரி? சிலருக்கு வினா எழலாம், பதில் அளிக்க விக்கிரமாதித்தன் வரப்போவதில்லை! பெத்திரி தெருவில் வசிக்கும் டெர்ரி மற்றும் வின்சியை அறிவேன், வர்ணம் பூசுவதில் பெத்திரி தெருவில் வசிக்கும் பெயிண்டர்கள் வித்தகர்கள் என்றால் மிகை இல்லை, பர்தவர் சமூக கிருத்துவர்கள் நிறைந்து வாழும் கடலோர குடியிருப்பு, இன்று சிதிலடைந்த நிலையில், திருச்சி சுங்கர்துறையால் கையகப்படுத்தப்பட்ட கடலோர மாடமான சீதக்காதியின் வசந்த மாளிகைக்கு பின் பகுதியில், முத்துகளை தேடி கோரமண்டல கடல்பகுதிக்கு வந்து, இங்கே நிலவிய வலிமையற்ற குழம்பிய அரசியல் சூழலில் தங்களுக்கு சாதகம்மய் மீன் பிடித்த போர்த்துகீயர்களால் 350 வருடங்களுக்கு முன் போர்த்துகீய கலை நயத்துடன் கட்டப்பட்ட கத்தோலிக்க கிருத்துவ ஆலயமான புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகே அமையப்பெற்ற கடலோர குடியிருப்புதான் தற்போதைய பெத்திரி தெரு.

churcடச்சுக்களின் அடாவடியை எதிர்த்து, அவர்களுக்கு சிம்மச்சொப்பனமாக விளங்கிய வள்ளல் சீதக்காதியின் மறைவை அடுத்து, டச்சுக்கள் தங்களின் மூர்க்கனத்தமான ஆதிக்கத்தை சேது கடல் பகுதி துறைகளில் வெறியுடன் செயல்படுத்த துவங்கிய நேரம் கீழக்கரையை தங்களின் பிரதான வணிக கேந்திரமாக பயன்படுத்தி வந்தனர். இங்கு டச்சு முதன்மை அலுவலர்கள் அவர்களின் கட்டளை தலைமயால் நியமிக்கப்பட்டிந்தனர். அந்த சமயம் வலிமையற்ற நிலையில் இருந்த சேதுபதி அரசரிடம் தங்களுக்கு ஜவுளி ஆலை ஒன்றை கீழக்கரையில் அமைக்க இடம் ஒதுக்க வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு ,

1742 ஆம் ஆண்டு கடல் குடியிருப்பின் கீழ்பகுதியில் இராமநாதபுரம் அரசர் முத்துக்குமார ரகுநாத சேதுபதியால் டச்சுக்காரர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் கீழக்கரையின் முதல் பேக்டரி நிறுவப்பட்டது, பின் அதுவே பேக்டரி தெரு என அழைக்கப்பட்டு காலப்போக்கில் பெத்திரி தெரு என உருமாறியதாக அறிய முடிகிறது, பேக்டரி அமைக்க இடம் வாங்கிய வன்மம் நிறைந்த பரங்கியர்கள் அதனை பேட்டரி எனும் வெடிமருந்து கிடங்காக (ஆயுத கிடங்காக) பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் , பேட்டரி தெரு என்பதே பெத்திரி தெரு என மறுவாக்கமாகி இருக்கலாம் எனவும் கருத முடிகிறது. காலத்தால் சிதைந்து, புதைந்து போன இந்த ஆலையின் எச்சங்கள் கிழக்குத்தெரு கல்குளத்துக்கு தெற்கே இருந்திருக்கிறது, கீழடியை போல் இருந்த பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினால் தொலைந்த தொன்மங்களில் சிலவற்றை மீட்க முடியும் என்றே தோன்றுகிறது..

நாசகார ஆயுதங்களின் வாடையும், வெடி மருந்துகளின் நெடியும, பேட்டரி தெரு என்ற பெத்திரி தெருவை சூழ்ந்த காலம் மனத்திரையில் விரிகிற்து…. என்ன மாற்றம் இன்று… நிகழ்காலத்தில் பெத்திரி தெருவிற்குள் நுழையும் எவருக்கும், தேங்காய் என்னையுடன் கலந்த பனக்கருப்பட்டியின் மிதமான வாசனை சுவாச மொட்டுக்களையும், சுவை மொட்டுக்களையும் கிளர்தெழ வைக்கும் அற்புதத்தை காணலாம்! அப்படியா? என்ற ஆச்சரிய வினாவுக்கு அர்த்தங்கள் இருக்கிறது,

துதலையும், அதன் சுவையையும் மறக்க முடியுமா? தொடரும்….⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *