வகுதை கரையினிலே .3 ஆம் பாகம்.. கடல் வழியே பரவிய‌ தித்திக்கும் தொதல் பற்றிய‌ வரலாற்று மடல்

mahmood nainathothal

கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா
தொதல் அல்லது துதல் என்ற அல்வா வகை பதார்த்தம் கீழக்கரையில் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைககளில் ஒன்று, மலேயாவில் இருந்து வந்த வணிக சமூகத்தால் தென் இலங்கை பிரதேசத்தில் வாழ்ந்த மூர்கள் என்றழைக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தினரிடம் இந்த துதல் அறிமுகப்படுத்தப்பட்டு பின் தென் தமிழக கடலோர இஸ்லாமிய நகரங்களுக்குள் குறிப்பாக கீழக்கரை, காயல்பட்டினம், வேதாளை, தொண்டி, பெரியப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் உணவு கலாச்சாரத்தில் நீங்கா இடம் பிடித்ததாக அறியப்படுகிறது.

இந்த மாஆபர் கடல் பகுதியில் , பவளப்பாறைகளில் வாழும் சுவை மிகுந்த மீன்களுக்கும், இயற்கை பழச்சாறான பதனீரின் அமுத சுவைக்கும், பனம் பழத்தில் நாறுகளை நீக்கி பிழிந்து எடுக்கப்படும் பனம்களியும் போர்த்திகீயர்களின் நாவை அடிமைப்படுத்தி இங்கேயே கூடாரம் அடிக்க விளைந்தது என்றால் அது மிகை இல்லை. பனை வெல்லம் அல்லது கித்தர் பனை கருப்பட்டி், வடித்தெடுக்கப்பட்ட கெட்டி தேங்காய் பால், கோதுமை மாவு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட துதலை போர்த்துகீயர்கள் தங்களின் தலைமையகமான கோவா வரை கொண்டு சென்று அதன் சுவையை கொண்டாடினார்கள். இன்றும் பூர்வீக கோவா மக்களின் விஷேச நாட்களில் துதல் முக்கிய இணிப்பு வகையாக இடம் பெறுவதை காணலாம்.

kilakarai thothal 1

துதலை எவரும் ஒருமுறையாவது டேஸ்ட் செய்ய வேண்டுமெனில் கீழக்கரைக்கு வரலாம், பெத்திரி தெருவில் ஒரு குறுகிய சந்தில் இருக்கும் துதல்கார வீட்டினை தேடி அடைய சற்று சிரமம்தான், துதல் மாஸ்டர் ஆன வயது முதிர்ந்த அந்த பென்மனியின் கைப்பக்குவத்தில் செய்யும் துதல்தான் உலக பிரசித்தி என்பதை அந்த பென்மனிகூட அறிந்திருப்பாரோ. என்னவோ? துதல் செய்யும் பக்குவம் அறிந்த , இதனை செய்து விற்பனை செய்யும் கைவிட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் பெத்திரி தெரு துதல்கார வீட்டு பென்மனியும் ஒருவர்.

இவர் வீட்டிலேயே துதல் செய்து கடைகளுக்கு கொடுக்கிறார் , துதல் அல்வா சுடச்சுட உங்கள் முன் வைக்கப்பட்டால் அதன் வாசம் பரவி நம்மை சுவைக்க தூண்டும், ஒரு வித இனிப்புடன் கூடிய தேங்காய் மணம் நம்மைச்சுற்றிப்பரவுவதை உணர முடியும், மைதா மாவு, பனங்கருப்பட்டி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணைய், ஏலக்காய், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிண்டி செய்யும் பதார்த்தம்தான் துதல். இது அலவா போன்று வழவழப்பு இல்லாமல் கொஞ்சம் மிருதுவாக இருக்கும் . ருசிக்கும் பொழுது பன்ங்கருப்பட்டியின் சுவையுடன் நாவில் கரைந்து ஒரு புதுவித சுவையை கொடுத்து நாக்கின் சுவை மொட்டுக்கள் இன்னும் மீட்டப்படும் . அதன் சுவை தேங்காய் எண்ணைய் மணத்துடன் ஒரு வித்தியாசமான ருசியை தரும் என்பதை உறுதியாக சொல்லலாம். ஒருமுறை டேஸ்ட் செய்யும் எவரும் அதன் சுவையில் அடிமையாகி மீண்டும் துதலை தேடி கீழக்கரை வருவார்கள் என்பது திண்ணம்.
raviyath55
கீழக்கரையில் நூற்றாண்டுகளாக ராவியத் ஸ்வீட் கடையிலும் துதல் விற்பனை செய்யப்படுகிறது. மாலை நேரங்களில் பரபரப்பாக இன்றும் விற்கப்படுவதையும் காணலாம், மைசூர் பாகுவுக்கும், அல்வாவுக்கும் கடந்த காலங்களில் பிரசித்தமான மெயின் ரோட்டில் ( வள்ளல் சீதக்காதி சாலை) இருக்கும் ராவியாத் கடையின் இன்றைய தலைமுறையினர, தமிழகமெங்கும் மார்க்கெட்டை பிடித்த அடையார் ஆனந்த பவனின் நெய் ஒழுகும் மைசூர் பாகுவின் போட்டிகளுக்கு ஈடு கொடுக்க கீழக்கரையின் பாரம்பரிய துதல், கலகலா, பனியம் என மூதாதையரின் தின்பண்டங்களை சமகாலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தி தஙகளின் விற்பனை களத்தை மெருகுபடுத்தி இருப்பதை காணமுடிகிறது.

போத்தீஸ், சென்னை சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், சரவனா ஸ்டோர் எல்லாம் வருவதற்கு வெகுகாலத்திற்கு முன் மதுரையில் இருக்கும் ஹாஜி மூசா ஜவுளிக்கடல் என்ற துனிக்கடை மிகப்பிரபலமாக இருந்ததை நாம் அறிவோம், 120 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய கடை அது, குஜராத்தின் சவுராஸ்ட்ரா பகுதியை பூர்வீகமாக கொண்ட கட்ச் முஸ்லீம்களுக்கு சொந்தமானது, இசைப்புயல் ஏ ஆர். ரஹ்மான் இந்த குடும்பத்தில்தான் திருமணம் செய்திருக்கிறார், கடல் போன்ற பரந்த இடத்தில் ஏராளமான ஆயத்த ஆடைகளையும், துனிமனிகளையும் குவித்து விற்பனை செய்துவந்ததால் ஹாஜி மூசா துனிக்கடையை, கடலில்லாத மதுரையின் ஜவுளிக்கடல் என அழைத்தனர்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியிலும் ஒரு ஹாஜி மூசா கடல் உள்ளது என்பதை அறிவீர்க்ளா? ஆனால் இது இனிப்புக்கடல் , ஆம் கீழக்கரையின் பாரம்பரிய ராவியத் ஸ்வீட் கடை போன்றே, ஹாஜி மூசா இனிப்புக்கடலும், தித்திக்கும் தனது பாரம்பரிய பதார்த்தங்களான, கட்டி மைசூர்பாக்குவையும், காவி கலரில் பூவந்திகளையும, பூசனி விதைகள் தூவப்பட்ட கலர் அல்வாவையும் பரபரப்புடன் விற்பனை செய்வதை கானலாம்.

raviyath01

கீழக்கரை பகுதியில் துதல் உணவு பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்றது போன்றே, பள்ளப்பட்டி இணிப்பு வகைகளும் மாவீரன் திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட காலம் முதல் அந்தப்பகுதி மக்களால் விரும்பி சுவைக்கப்படுவதாக அறிய முடிகிறது. கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் இருந்து கல்லூரி நன்பர் சித்தையன் கோட்டை ஜாஹிருடன் பொள்ளாச்சி செல்லும் வழியில் இந்த இனிப்புக்கடலில் சிறிது மூழ்கி பூவந்திகளையும், மைசூர்பாக்கையும் பிடித்துக்கொண்டு வீடு திரும்பினோம்.

12 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அரேபியர்களால் மாஆபர் என்றழைக்கப்பட்ட சோழமண்டல கடலோர பகுதியின் முக்கிய துறைமுகமான அந்துபார் என்ற பெயர் கொண்ட இந்த கீழக்கரை கடல்துறைக்கு வணிகம் நாடி வந்த எமனிகளும், மொராக்கோ மற்றும் பாரசீக அரபு வணிகர்களும் தங்களின் வாழ்விடங்களை தத்தமது நாடுகளின் அமைந்து இருப்பது போன்றே, நெருக்கமாகவும், அரணமைத்து பாதுகாப்பாகவும் உருவாக்கி இருப்பதே கீழக்கரையின் வீதி அமைப்புகளின் இன்றைய நிலைக்கான ஊற்றுக்கன்னாக இருந்திருக்கலாம்.

எமன் தேசத்தின் கடற்புர வாழ்விடங்களும். மொரோக்கோ, ஓமன் தேசங்களின் தெரு, மற்றும் இல்லங்களின் அமைப்புகளும், கீழக்கரையின் வாழ்விட அமைப்புகளை போன்றே இருப்பதை காணமுடியும் , கீழக்கரை இல்லங்களின் வாயிலில் போடப்பட்டிருக்கும் சிலாத்தி என சொல்லப்படும் திரைச்சீலையும, மரத்திலான வீட்டுக்கதவுகளின் அழகிய வேலைப்பாடுகளும், அதில் பிறையை வடிவமைத்து வைத்திருப்பதிலும் , மஹ்ரிப் நேரத்தில் ஒளிரவிடப்படும் வீட்டுக்கு முன் பொருத்தப்பட்ட டூம் விளக்குக்களும் அரேபிய வாழ்வியல் பண்பாட்டை பண்டைய கீழக்கரை உள் வாங்கியதற்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.
அதென்ன மாஆபர்? – தொடரும்⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *