வகுதை கரையினிலே…பாகம்- 17.. வரலாற்று ஆய்வு.. எழுத்தாளர்.மஹ்மூத் நெய்னா

வகுதை கரையினிலே…பாகம்- 17

இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கேரளாவின் கொடுங்கலூரில் நிர்மானிக்கப்பட்டதை அறிவோம், கி.பி ஆறாம் நூற்றாண்டில் கொடுங்கலூரை தலை நகராக கொண்டு திருச்சூர் பகுதியை ஆண்டு வந்த சேர மன்னன், சேரமான் பெருமான் என்ற
பாஸ்கர ரவி வர்மன் , இறைத்தூதர் முகம்மது நபியை சந்திக்க மெக்கா நகருக்கு சென்று நாடு திரும்பும் வழியில் ஓமான் நாட்டில் மரனித்து விடுகிறார், அங்கேயே அவரின் உடல் அடக்கமும் நடைபெற்ற நிலையில், சேரமான் பெருமானின் ஆணைக்கினங்க அவருடன் பயனித்த மாலிக் இப்னு தீனார் என்ற அரேபியரின் முயற்சியால் இந்தியாவின் முதல் பள்ளிவாயில் கேரளாவின் கொடுங்கலூரில் உருவாகியது என வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.

thuru0

இங்கே கீழக்கரையில் முதலில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாசல் எது? என்பதில் நமக்குள் இன்றும் குழப்பங்கள் நிலவி வருவதை காண்கிறோம். கீழக்கரை சுற்று வட்டாரத்தி்ல் அமைந்திருக்கும் தொன்மையான ஸ்தலங்களின் கட்டமைப்பை கூர்ந்து நோக்குவதன் வாயிலாக அதன் பழமையை கணக்கிட முடியும், கீழக்கரையில் இருந்து வடமேற்கே 8 மைல் தொலைவில் இருக்கும் 3000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை கொண்ட உத்தரகோசமங்கை மங்களேஸ்வரர் சைவ திருத்தலத்தை நோக்குவதன் மூலமும் , அங்கிருந்து கிழக்கே 7 மைல் தூரத்தில் இருக்கும் வைணவ கோயிலான திருப்புல்லானி ஆதி ஜெகனாதர் கோயிலின் அமைப்பும், 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்ட கீழக்கரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் சிவ ஆலயமும் ( சொக்கனாதர் கோயில்) மிக பழமையான ஆலய கட்டமைப்பை கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் , வர்த்தகம் நாடி தென் காயல் பகுதிக்கு வந்து சேர்ந்த அஞ்சுவண்னத்தார் என அழைக்கப்பட்ட அரேபிய சோனக சாமந்தர்கள், பாண்டிய மன்னர்களின் ஆதரவை பெற்று , கீழக்கரை கடற்பிரதேசத்தில் அரசியல் ஆதிக்கம் பெற்று சாமந்தர்களாக நியமிக்கப்பட்டனர். கறுப்பாறு காவலர்கள் என்றழைக்கப்பட்ட இந்த சோணக சாமந்தர்கள் 9 ஆம் நூற்றாண்டு முதல் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் வாழ்ந்த 17 ஆம் நூற்றாண்டு காலம் வரை தொடர்ந்து ரீஜெண்டுகளாக இந்த பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்ததை எட்டயபுரம் உமறு கத்தாப் புலவர் இயற்றிய சீதக்காதி திருமன வாழ்த்து பாடலின் வாயிலாக தெளிவாகிறது.

அவ்வாறு வந்த அரேபிய தேசத்தவரான அஞ்சுவன்னத்தார்கள் தாங்கள் குடியேறிய கீழக்கரை கடலோர பகுதியில் , குளக்கரையடியில், தென்னை மற்றும் பன ஒலைகள் வேய்ந்து, சாந்து மற்றும் சுன்னாம்பு கொண்டு உருவாக்கிய கூரைப்பள்ளிதான் இன்று கடற்கரை பள்ளி என அழைக்கப்படுகிறது. இந்த பள்ளியை உருவாக்கிய காலத்துக்குள் பவளப்பாறைகள் கொண்டு முதல் கல்லுப் பள்ளியாக பெரிய குத்பா பள்ளி என்ற தற்போதைய பழைய குத்பா பள்ளி நிர்மானிக்கப்பட்டிருக்கலாம் என கருதமுடிகிறது, எப்படி இருப்பினும் இரண்டு பள்ளிகளுமே 1000 வருட‌ங்கள் பாரம்பரியம் கொண்டது என்பது நிதர்சனமாகிறது.

வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நெருங்கிய உறவுகளான, கீழக்கரையில் வாழ்ந்த அம்பலக்காரர்கள் என்றழைக்கப்பட்ட அம்பலார்கள் பெரிய குத்பா பள்ளியை நிர்வகித்து வந்திருக்கிறார்கள். சுமார் 500 வருடங்களுக்கு முன் 15 ஆம் நூற்றாண்டில் பழைய குத்பா பள்ளியை ஒட்டிய அம்பலார் தெருவில் வாழ்ந்த கூழை செய்யது அஹ்மது நெய்னா அம்பலம் என்ற முந்தைய அம்பலக்காரர் அவர்களின் 20 ஆவது வழி சந்ததிகள் இன்றும் அம்பலார் குடும்பம் என்ற பெயரில் அதே பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்து வருவதாக அறிய முடிகிறது.

அம்பலார்கள் வரிசையில்18 ஆவது சந்ததியினரான மறைந்த ஏ.எஸ்.எஸ்.அஹ்மது சாஹிப் அம்பலார் அவர்கள் சமகாலத்தில் குறிப்பிடத்தக்கவர். கம்பீர தோற்றமும், சாந்த சொரூபமும் கொண்ட அஹ்மது சாஹிப் அம்பலார் அவர்கள் வட்டார சமூக மேம்பாட்டுச் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்.மேலும் கீழக்கரை இஸ்லாமிய பைத்துல் மாலின் நிறுவனர்களின் ஒருவராகவும், நடுத்தெரு ஜூம்ஆப் பள்ளியின் பொறுப்பு தலைவராகவும், உப தலைவராகவும் பல காலம் சமூக பனி செய்து வந்தார்கள். ஏ.எஸ்.எஸ். அஹ்மது சாஹிப் மரைக்காயர் அவர்களின் வாழ்வு மற்றும் காலத்தினை ஆவணப்படுத்துவது வரலாற்றுத் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அம்பலக்காரர்கள் என்பவர்கள் பொதுவாக ஊர் பன்னையார்களாக கருதப்படுகிறார்கள். தென் பாண்டி நாட்டில் அம்பலத்தார் என்பவரகள் கள்ளர் இனத்தவரை உள்ளடக்கிய தேவர் சமுதாயத்திலும், முத்தரைய இனத்திலும் குறுப்பிடத்தக்கவர்களாக அறியமுடிகிறது. கீழக்கரையின் பூர்வீக குடும்பங்களில் ஊர் நாட்டாமைகளான அமபலார்கள் குடும்பத்தினர் முதண்மை பெறுகின்றனர். பழைய குத்பா பள்ளியை ஒட்டிய பகுதியில் தச்சர் தெருக்கு அருகாமையில் பெரிய அம்பலம், சின்ன அம்பலம் மற்றும் மதார் அமபலம் என பல தெருக்கள் அம்பலார்கள் பெயரில் அமைந்திருப்பதை கீழக்கரை வாழ்வியலில் அம்பலார்கள் எத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை ஊகிக்க முடிகிறது.

thuru0666

கடந்த மாதம் , கண் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த கீழக்கரை தச்சர் தெருவில் வசிக்கும் கீழை அலிபாட்சா காக்காவின் இல்லத்துக்கு நலம் விசாரிக்க சென்ற போது , கேரளாவின், கண்ணனூர் தரவாட்டு வீட்டுக்குள் நுழைந்த உணர்வை பெற்றேன். கலை நயத்துடன், தொன்மை மாறாமல் , அழகிய போர்த்திகீய பாணியில் மர வேலைப்படுகளுடன், மாடி, மச்சு, மரத்திலான சுற்று ஜீடிப்படிகளை உள்ளடக்கிய அலிபாட்சா காக்கவின் மாளிகை, அம்பலார்களின் பூர்வீக ஜமீன் வீடு என்பதாக பிறகு அறிந்து கொண்டேன். கி.பி. 1880 இல் அம்பலார்கள் வழியில் கீழக்கரையில் வாழ்ந்த தளவாய் மரைக்காயர் என்ற அஹ்மது சுல்தான் அவர்களால் கட்டப்பட்டு பிறகு 1945 ஆம் ஆண்டில் , மதராஸ் மற்றும் வங்காளத்திலும் கடல்சார் வணிகத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆனா சீனா. சேகு மதார் அம்பலம் அவர்களால் இந்த வீடு மராமத்து செய்யப்பட்டதாக அம்பலார் குடும்பத்தை சேர்ந்த அலிபாட்சா காக்கா அவர்கள் குறிப்பிட்டார்.

“பூமலர்த்திருவும், பொருசய மடந்தையும்” என்ற மெய்கீர்த்திக்கு உடையவரான, பாண்டிய மன்னர் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவர், மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த கி.பி.1250 களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கருக்கும் மேலான காணிகளை, சைவ, வைனவ, புத்த மற்றும் ஜைன ஆலயங்களுக்கு தேவதானமாகவும், திருவிடைவட்டமாகவும், பள்ளிச்சந்தமாகவும் ஏகப்பட்ட நிலங்களை கொடையாக வழங்கிய நிலையில், திருப்புல்லானி கோவிலுக்கு கீழ்பால் சோனக சாமந்த பள்ளியான பிழாற் பள்ளிக்கு இறையிலியாக 6000 ஏக்கருக்கும் மேலான நிலங்களை வழங்கியதாகவும் திருப்புல்லானி கோயில் கல்வெட்டுக்கள் அறிவிக்கிறது.

கல்வெட்டு குறிப்பிடும் சோனக சாமந்த பள்ளியான பிழாற் பள்ளி என்பது பெரியப்பட்டினத்தில் இருக்கும் ஜலால் பள்ளிவாயில் என்பதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிலர் ஏர்வாடி தர்காவைத்தான் , கல்வெட்டில் சாமந்த பள்ளி என குறிப்பிடுவதாகவும் கூறுகிறார்கள். குழப்பங்கள் என்றும் ஓய்வதில்லை. மறைந்த வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.எம் கமால் அவர்கள் பவுத்திர மாணிக்கப்பட்டினம் என்பது பெரியப்பட்டினம்தான் என அறிதியிட்டு கூறி பல இடங்களின் ஆவணப்படுத்தியும் இருக்கிறார். ஆனால பவுத்திர மானிக்கப்பட்டினத்தின் அரச கோட்டை கீழக்கரையிலும், வர்த்தக சந்தை பெரியபட்டினத்திலும் இருந்ததாக வரலாற்றாசிரியர் ச.சி.நெ. அபுதுல் ஹகீம் குறிப்பிடுகிறார். பிழாற் பள்ளி எது என்பதிலும் குழப்பம் நீடித்தே வருகிறது.

மன்னர் சுந்தரபாண்டிய தேவரால் பிழாற் பள்ளிக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்கள் திருப்புல்லானி கோயிலை ஒட்டிய கிராமங்களை , வயல் வெளிகளை உள்ளடக்கிய பகுதியாகத்தான் இருந்திருக்கிறது. காலப்போக்கில் அந்த நிலங்கள் தனி நபர்கள் வசம் வந்திருக்கிறது. திருப்புல்லானி சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு இன்றும் கீழக்கரையை சார்ந்தவர்களுக்கு சொந்தமாக இருப்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.

திருப்புல்லானி ஆதி ஜெக நாதர் வைணவ ஆலயத்தில் உள்ள சக்கர தீர்த்த குளத்தில் பகவான் விஷ்னு சக்கரம் விட்டு குளித்ததாகவும், ராமர் இந்த தீர்த்ததில் குளித்ததாகவும் ஐதீகம், இந்த குளத்தில்
தன்னீர் வரண்டு, பக்தர்கள் குளிக்க முடியாத நிலையில் அருகிலுள்ள
நீரோடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்த போது கோயிலை ஒட்டிய பகுதியில் கீழக்கரை மரைக்காயர் ஒருவரின் வயல் வழியாக வரவேண்டிய சூழ்நிலையில். அந்த “ஊருக்கு நல்லது என்றால் வயல் பாழானாலும் பரவாயில்லை” என்று பெருந்தன்மையோடு சம்மதித்தார் என்பதை கோயிலின் குருக்களான தீட்சிதர் ஒருவர் பதிவு செய்கிறார். சமூக, மத நல்லிணக்கத்துக்கும், சமூக சேவைகளுக்கும் கீழைக்கரையின் பாரம்பரிய அருங்குனஙகள் என்றால் மிகையில்லை. பின் எதுதான் சோனக சாமந்தபள்ளியான பிழாற் பள்ளி? …. தொடரும்⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *