வகுதை கரையினிலே- பாகம் 16 எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

சங்கத் தமிழ், சங்க இலக்கியம் என்ற சொற்களை நாம் வெகுவாய் அறிவோம். தெருவுக்கு ஒரு சங்கமோ அல்லது சபையோ அமைத்து மக்கள் சேவை செய்வது கீழக்கரை வாழ்வியலில் எக்காலத்திலும் முதன்மையாக இருந்து வருகிறது. கீழக்கரையில் மேலத்தெரு உஸ்வத்துல் ஹசனா முஸ்லீம் சங்கம், வடக்குத்தெரு இளம் பிறை வாலிபர் சங்கம், சின்னக்கடைதெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம், நடுத்தெரு ஜும் ஆ மஸ்ஜீத் முன்னேற்ற சங்கம், தெற்குத்தெரு முஸ்லீம் பொது நல சங்கம், பழைய குத்பா பள்ளி மஹ்தூமியா சங்கம், கிழக்குத்தெரு வாலிபர் சங்கம், 18 வாலிபர்கள் தர்கா சங்கம் ,கிழக்கு நாடார் உறவின்முறை சங்கம், மற்றும் கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபரகார சங்கம், உட்பட 25 க்கும் மேற்பட்ட சங்கங்களை இன்றும் இங்கு கானமுடியும், இந்த அமைப்புகள் பல சமூக சேவைகளில் தம்மை ஈடுபடுத்தியும் பல கல்விச்சாலைகள் தொடங்கவும் பெரும் பங்காற்றி வகித்திருப்பதையும் நாம் அறிவோம். அதேபோல ராத்திபுல் ஜலாலியா மொளலூது சபை உட்பட பல மெய்ஞான சபைகளும், முகைதீனியா , காதரியா, அரூசியா தரீக்கா உட்பட பல சூபி தைக்காக்களும் பல் வேறு நோக்கங்களில் சமூக கூட்டமைப்பாக கீழக்கரையில் செயல்பட்டு வருகிறது.

எனது பதின்ம வயதுகளில் எலக்‌ஷன் காலங்களில் திடீரென ஆங்காங்கே அமைக்கப்படும் சிறு
தேர்தல் பரப்புரை கட்சி அலுவலகத்தை சங்கம் என்றுதான் அழைப்போம். சங்கங்களுக்கு வெளியில் தலைவர்களின் சிறு அட்டை கட் அவுட்டுகள் வைப்பதும், கட்சி சின்னம் அச்சடிக்கப்பட்ட கொடிப் படங்களை, சனலில் பசைபோட்டு ஒட்டி தோரணம் விட்டு ஜோடிப்பதும், கட்சி கொடிகளை சங்கத்தின் வாயிலில் செறுகிவைப்பதும் வழக்கம். மச்சான் நடுத்தெரு முஸ்தபல் அமீன் இந்த அலங்காரங்களை வடிவமைப்பதில் திறன் மிக்கவராக திகழ்ந்தார். சங்கத்தை அலங்காரம் செய்வதற்கான பொருட்களை தலைமை தேர்தல் கமிட்டி அலுவலகத்தில் இலவசமாக வாங்கி வருவோம்.

சங்கம் என்றால் குழு , ஒருங்கினைப்பு என்பதாக விளக்கம் சொல்லப்படுகிறது. சங்கங்கள் அமைத்து ஒன்று கூடி சமூக சேவை ஆற்றுவது தமிழர்கள் மரபு, 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாண்டிய மன்னர்கள் மதுரையில் தமிழ் சங்கங்கள் அமைத்தனர், புரவலர்களும் , புலவர்களும் ஒருங்கினைந்து தமிழ் மொழியின் செம்மைக்கு சேவை செய்த முதல், இடை, கடை சங்களுக்கு பிறகு 4 ஆம் தமிழ் சங்கத்தை 1901 ஆம் ஆண்டு மதுரையில் தற்போது இருக்கும் மகாகவி பாரதியார் ஆசிரியராக பணி புரிந்த சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் துவங்கினார் வள்ளல் பாண்டித்துரை தேவர். வள்ளலின் உறவினரான இராமனாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட நாலாம் தமிழ் சங்கத்தில் ஆரிபு நாயகம் என்ற அற்புத காப்பியம் தந்த நாகூர் குலாம் காதிறு நாவலரும், கீழக்கரை  மகாவித்வான் செய்யது முகம்மது ஆலிம் புலவர் ஆகியோர் அங்கத்தினராக தங்களை இணைத்துக்க் கொண்டனர்.

naina555

ஆலிம் புலவர் அவர்கள் மதுரை தமிழ்ச் சங்கத்தில் நிர்வாக சபை வித்வானாகவும்,சென்னை தர்பியத்துல் அத்பால் தர்ம சங்கத்தின் ட்ர்ஸ்டியாகவும் இருந்து தனது இறுதி காலம் வரை தமிழ் இலக்கிய பணிகளை செவ்வனே செய்து வந்தார். சென்னைவாசிகள் தி. நகர் உஸ்மான் சாலையை அறியாதவர்கள் எவரும் இருக்க வாய்ப்பில்லை. இந்த சாலையின் பெயருக்கு உரியவரான, ஆற்காடு நவாப்களின் முகவராக இருந்த முகம்மது உஸ்மான் அவர்கள் 1934 ஆம் ஆண்டு மதராஸ் மாகாண கவர்னராக பணிபுரிந்த பொழுது மதுரை தமிழ் சங்கத்துக்கு வருகை தந்தார், அவரை வரவேற்கும் குழுவில் திருநெல்வேலி மகோமகாமத சாமிநாதய்யர், டாகடர். சுப்ரமனிய முதலியார், இராமநாதபுரம் வித்வான். ரா. ராகவைய்யங்கார் ,கீழக்கரை ஆலிம் புலவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அந்த விழாவில் தனக்கு கிடைத்த வெறும் ஒரு நிமிடத்தில் வாழ்த்துரை
நிகழ்த்த வேண்டிய இக்கட்டில், ஆலிம் புலவர் தனது புலமையின் விஸ்வரூபத்தை நிருபித்து கவர்னர் முகம்மது உஸ்மானை அசத்திவிட்டார்.

அப்படி என்ன பேசினார்?
கவர்னர் என்ற சொல் ஆங்கிலத்தில் ஆளுனர் என்று இருக்கலாம், ஆனால் தமிழ் அகராதியில் கவர்- நர் என்ற சொல் கவர்ந்தவர் என்றே பொருள்படுகிறது, ஆக நீங்கள் மாகாண மக்களின் உள்ளங்களை கவர்ந்தவர் என்ற ரீதியில் அன்று அவர் நிகழ்த்திய உரையை கண்டு அசந்து போன ரா. ராகவய்யங்கார் எக்ஸ்ட்ராவாக ஒரு பத்து நிமிட உரைக்கான நேரத்தை கவர்னரின் அணுமதியுடன் ஆலிம் புலவருக்கு
வழங்கினார்.
செ.மு. செய்யது முஹம்மது ஆலிம் புலவர் அவர்கள் அன்றைய பெரும் கடல் வணிகராக திகழ்ந்த , கீழக்கரை அம்பலக்காரத் தெரு ஹாபில் முகம்மது சதக்குத் தம்பி மரைக்காயர் மற்றும் ஆயிஷா உம்மா ஆகியோரின் புதல்வராக 1881 ஆம் வருடம் மே மாதம் 10 ஆம் நாள் கீழக்கரையில் பிறந்தார்கள். தனது இளமை முதற் கொண்டே எல்லாத் துறைகளிலும் விற்பண்னராக திகழ்ந்தார்கள். முத்து வணிகத்திலும், தமிழ், அரபு இரு மொழிகளில் பண்டிதம் பெற்றவராகவும், பன்னூலாசிரியாராகவும், இஸ்லாமிய மார்க்க நெறிகளில் ஞானம் பெற்றவராகவும் சிறந்து விளங்கியவர், மேலும் கீர்த்தனா மாளிகை, பதானந்த மாலை, ஏகதெய்வ ஸ்தோத்திர மாலை, பரிசுத்த இஸ்லாம், குத்பு நாயக மான்மியம், போன்று பலவகை நூல்களையும், ஒலிமார்கள், குத்புமார்கள் மெய் கீர்த்திகளும், முனாஜாத்துகளும், மவ்லீதுகளும் ராத்திபுகளையும் கோர்வை செய்து நூலாக படைத்தவர்.

செ.மு. செய்யது முஹம்மது ஆலிம் புலவர் அவர்கள் கீழக்கரை பெரிய வித்யாசாலை ( அரூஸியா தைக்கா) பண்டிதர் குத்புதீன் ஆலிம் புலவரிடம் கல்வி கற்று
அரபியில் புலமை பெற்று மொளலானா என்ற பட்டம் பெற்ற ஆலீம் பெருமகன், திருக் குர்ஆனை மனனம் செய்து ஹாஃபில் உல் குர் ஆன என்ற சனது பெற்றவர், தனது புனித ஹஜ்ஜுக் கடமையை இருமுறை நிறைவேற்றிய ஹாஜீல் ஹாரமைன், வர்த்தக நுட்பங்கள் அறிந்த சிறந்த முத்து வணிகர், தமிழ் இலக்கியத்தில் பண்டித்தியம் பெற்றும் பெரும் புலவர் என்று இந்த ஐந்து வகையில் சிறப்பு பெற்றதால் “ஆலிம் புலவர்” என்று அழைக்கப்பட்டார். ஐந்து துறைகளில் சிறப்பு பெற்ற தமிழ் இஸ்லாமிய புலவராக இருந்த ஆலிம் புலவர் அவர்கள் தனது 80 ஆவது வயதில் 25.07.1961 அன்று மறைந்தார்கள். அன்னாரின் ஒரே மகளான ஆயிஷா அவர்களின் புதல்வர்தான் மறைந்த முனைவர் பக்ருதீன் என்பது குறிப்பிடதக்கது.sathaka55

ஆலிம் புலவர் அவர்களின் அரும் முயற்சியால் 1928 ஆம் ஆண்டு
துவங்கப்பட்ட நடுத்தெரு சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளி தனது நூற்றாண்டை எட்ட காத்திருக்கிறது, நடுத்தெரு மத்ரஸத்துல் ஜாமி ஆ, சய்யிதில் மதாரிஸ், சய்யிதில் ஹசனாத் ஆகிய கல்விச்ச்சாலைகளின் ஸ்தாபராகவும் விளங்கியவர்.
இவர்களின் வாழ் நாள் சரிதை ” ஆலிம் புலவர் ஆன்ற ஒழுக்கம்” என்ற நூலாக கடந்த 1960 ஆம் ஆண்டு மதுரை ம.கா.மு. காதிர் முஹைதீன் மரைக்காயர் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டது. ஆலிம் புலவர் இய்ற்றிய பரிசுத்த இஸ்லாம் என்ற நூல் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது,

இந்த நூலை கீழக்கரை ஏ.எம்.எஸ் , எஸ்.வி.எம் கம்பெனி, சங்கு முகம்மது அபூபக்கர் கம்பெனி, அய்யம் பேட்டை நாட்டாமை முகம்மது அபூக்கர், அய்யம்பேட்டை ஜெய்னுக் ஆபிதீன் , மேலும் மதராஸ் வக்கீல் முகம்மது ஜான் ஆகியோரின் அனுசரணையுடன் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் வெளியிடப்பட்டது. திருச்சி ஜமால் முஹம்மது வள்ளலுடன் ஆலிம் புலவர் நெரு்ங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

தென் தமிழகத்தில் புகழுச்சியில் இருக்கும் மகளிர் கல்லூரியான கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் கல்லூரியை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது, சென்னை சீதக்காதி அறக்கட்டளையினரால் நடத்தப்படும் இந்தக் கல்லூரியை தொலை நோக்குப்பார்வையுடன், மகளிர்கள் எம்பவர் பெறும் நோக்கத்தின் அடிப்படையில் மறைந்த வள்ளல் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களால் 1989 ஆம் ஆண்டு கீழக்கரையில் நிறுவப்பட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, இந்த மகளிர் கல்லூரியின் முதல் பிரின்ஸிபாலாக இருந்து அரும்பெரும் கல்விச்சேவை செய்தவர் மறைந்த டாக்டர் மேரி நபீசா என்ற நபீசா காலிம் அவர்கள், இவர் ஆலிம் புலவர் அவர்களின் நெருங்கிய நன்பரான திருச்சி ஜமால் முகம்மது வள்ளலின் மருமகள் என்பது குறிப்பிடதக்கது.nain

ஆலிம் புலவர் அவர்கள் சதக்கத்துன் ஜாரியா பள்ளியை உருவாக்க அரும்பாடுபட்டார் என்பது வரலாறுகளின் மூலம் அறிய முடிகிறது. 1925 களில் பள்ளி தொடங்குவதற்கான நிலம் வாங்க தேவையான நிதியை திரட்டுவதிலும், திரட்டிய பின் ஏற்பட்ட சட்டப்பிரச்சனைகளை எதிர் கொண்டு பள்ளியை உருவாக்கி அர்பணித்த அவரின் தீரத்தினை சதக்கத்துன் ஜாரியா பள்ளி கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கலும் மாணசீகமாக சாண்று பகிரும்.

இந்த பள்ளியை உருவாக்க மிகப்பெரும் நிதியை கீழக்கரையை சேர்ந்த கொழும்பு மு.சி.மு.சதக்குத்தம்பி அவர்கள் வழங்கினார்கள் , அன்னாரை பள்ளிக்கூட கட்டடத்தின் தெற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே போல பள்ளிக்கான நிரந்தர நிதி உதவிக்கான சோர்ஸை ஏற்படுத்தும் முகமாக மேல்விஷாரம் நவாப் சி. அப்துல் ஹகீம் அவர்களை சென்னையில் வருமானம் வரக்கூடிய ஒரு கட்டடத்தை பள்ளி நிர்வாகத்துக்கு கையளிக்கவைத்தவர் ஆலிம் புலவர் அவர்கள். உதவி செய்யும் பெருந்தகைகளை ஊக்கிவித்து நிதி பெருவதும் மட்டுமின்றி தனது சொந்த நிதியையும் பங்களித்து ஆலிம் புலவர் அற்புத மார்க்க மற்றும் கல்வி சேவைகள் பல புரிந்தார். இன்று இராமனாதபுரம் இரயில்வே பீடர் ரோடில் ,

எஸ்.வீ.எம் பெட்ரோல் பங்கின் எதிரில் இருக்கும் ஈஸா பள்ளிவாசலின் விரிவாக்க கட்டுமான பணிகளுக்கான நிதியை தனது உறவினரான நடுத்தெரு ஏ.எம்.செய்யது இப்ராஹீம் (ஏ.எம்.எஸ்) அவர்களுடன் இணைந்து அளித்தது மட்டுமின்றி ஒரு அரபி மதராஸாவையும் பள்ளி வளாகத்தில் துவங்கினார், சாயல்குடியில் மஸ்ஜித் ஒன்றை அமைக்க விரும்பி கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த தயாளர்குன சீலர் ஹாஜூல் ஹரைமான் எஸ்.வி.எம் முஹம்மது ஜமாலுதீன் அவர்களிடம் எடுத்துச்சொல்லி முழு நிதியும்பெற்று இறை இல்லம் அமைக்க பெரும் பங்காற்றிய ஆலிம் புலவர் அவர்களை இன்று நாம் காலத்தால் மறந்தாலும், அவரின் சேவைகள் கீழக்கரையின் வரலாற்றின் உயிர் மூச்சில் கலந்து புவி உள்ளவரை என்றும் மறையாமல் மனம் வீசும்…. என்பதே நிதர்சனம்….⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *