வகுதைக் கரையினிலே – பாகம்15 வரலாற்று ஆய்வு .. எழுத்தாளர் .மஹ்மூத் நெய்னா

வகுதைக் கரையினிலே – பாகம்15 வரலாற்று ஆய்வு .. எழுத்தாளர் .மஹ்மூத் நெய்னா

முன்னெப்பெழுதும் போல்தான், சுற்றுவட்டாரம் எங்கும் மழை பொழியும் காலங்களில், கீழக்கரையில் பருவத்துக்கு மழை பொழிவதில்லை, மொத்த தமிழகமெங்கும் மழை பெய்து அடங்கிய பின்பு டிசம்பர் மாதத்தில் கீழக்கரையில் பெரு மழை காலம் துவங்கும் , இது போன்ற மழை காலம் சில வருடங்களுக்கு ஒரு முறை சூறாவளியுடன் பேய் மழையாக தொடர்ந்து பெய்து, கீழக்கரையின் நிலப்பகுதியை கடலுக்குள் சிறுக சிறுக இழுத்து செல்லும், அப்படியான ஒரு கடல் கோள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கீழக்கரைக்கு நேர்ந்து நிலப்பகுதிகளை பெருவாரியாக அழித்தது.

ponni5

அதுபோன்ற மற்றொரு பெரும் மழையை 1955 ஆம் ஆண்டிலும் கீழக்கரை சந்தித்தது, அதன் விளைவாக , கிழக்குத் தெருவில் கல்லுக்குளம் மற்றும் மண்ணுக்குளம் எனஅடுத்தடுத்து இருந்த இரட்டை குளங்கள் , 10 நாட்கள் பெய்த ஓயாத தொடர் மழையால் நீர் நிரம்பி, ஒரே குளமாக ஆகிவிட்டதாம். அந்த மழையில் கலை நயத்துடன் , அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்லுக்குளத்தின் பக்கவாட்டு சுவர்களும், பவளப்பாறைகளால் அமைக்கப்பட்ட குளத்தின் படித்துறைகளும் நீரில் மூழ்கிப்போனது. கல்லுக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்கள்

நூற்றாண்டுகளுக்கு முந்திய தொன்மையானது. கீழக்கரையின் பண்டைய கோட்டையினை ஒட்டிய அரசர்கள் அமைத்த குளமாகவே அதன் அமைப்பை கொண்டு அறிய முடியும். இது பண்டைய சோழர்கள் காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட அரச குளமாக இருக்கலாம் என கருதமுடிகிறது.

கல்லுக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்ட 300 வருடத்துக்கு முந்தைய பள்ளிவாயில் குளங்கரை பள்ளி என்றுதான் அழைக்கப்படுகிறது, அப்பொழுதெல்லாம் பள்ளிவாசலுக்கு தொழச் செல்பவர்கள் ஒலு செய்வதற்கு இந்த குளத்தை தான் பயன்படுத்த வேண்டும். இந்த இரட்டை குளங்களுக்கு பின் பகுதியில் இருக்கும் மணல்மேடு, திடல்வெளி, அதை ஒட்டி இருந்த ரூஹூல் ஒனிமா (ஆத்ம ஞானம்) வாலிபர் சங்கம் உட்பட்ட பகுதிகள் மொத்தமாக குளத்துமேடு என்று அழைக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் கல்யாண மாப்பிள்ளைகளை பைத்து சொல்லி இந்த வாலிபர் சங்கத்துக்கு அழைத்து சென்று பால் இறக்கி ( பால், பழம் கொடுத்து உபசரிப்பது) மகமை செய்வதும், செட்டுப்பனம் வாங்கிக்கொள்வதும் வழக்கமாக இருந்தது.

கடந்த காலங்களில் குளக்கரைகளை ஒட்டியும், பள்ளிவாசல் மற்றும் கோயில்களை ஒட்டியும் சவுக்கைகள் என்ற சதுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும், பெரும்பாலும் சிறு ஒய்வு எடுக்கவும், அரசியல் மற்றும் பொது விஷயங்கள் பேசவும், பஞ்சாயத்து செய்யவும் ஊர் பெரியவர்கள் இந்த சவுக்கைகளை பயன்படுத்துவார்கள். அதே போல் ஊர் பெரியவர்களின் வீடுகளுக்கும் முன் வராந்தா பகுதியில் அமைக்கப்படும் சதுக்கைகளை ஆசாரம் என்றழைத்தனர். இன்றும் ஆசாரத்து மூலை என அழைக்கப்படும் கிழக்குத்தெரு நால் முனை சந்திப்பில் சானா தானா அப்பா என்ற எஸ்.டி. நூர்முகம்மது அவர்களின் இல்லம் கல்லுக்குளத்தின் வடக்கு கரை முனையில் இருந்தது, அந்த வீட்டு வாயிலில், தூண்களுடன் கூடிய விஸ்தாரமாக அமைக்கப்பட்ட ஆசாரம் பெரியவர்களை ஒருங்கினைக்கும் மையமாகவும், சமூக பிரச்சனைகளை பேசி முடிவெடுக்கவும் பயன்பட்டது. நடுத்தெரு, கல்வீட்டு பகுதியில் இருந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் மாளிகைக்கு முன்பும் இது போன்ற ஒரு ஆசாரம் இருந்ததாகவும் , பார்வையாளர்கள் மரைக்காயரை சந்திக்க இந்த ஆசாரத்தில் காத்திருப்பார்கள் என்றும் சீதக்காதி நொண்டி நாடகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் சீருடன் வாழ்ந்த குடும்பங்களில் கிழக்குத்தெரு சானா. தானா குடும்பமும் ஒன்று, இதே போன்று வள்ளல் ஹபீப் அரசர் வழியில் கடல் வணிகத்தில் ஈடுபட்டு, கீழைக் கடலில் ஏழு கப்பல்கள் விட்டு பெருமதிப்புடன் வாழ்ந்த கிழக்குத்தெரு பானா ஆனா குடும்பமும் , அத்தர்குத்தி அப்பா, மொளலானா, பெரியதம்பி மரைக்காயர் போன்ற மற்ற பூர்வீக குடும்பங்களும் கிழக்குத்தெருவில் குறிப்பிடதக்கதாக விளங்கியது.

கல் மற்றும் மண் குளங்களை சுற்றி இருந்த மனம் மேடுகளில், அடர்ந்த வேப்ப மரங்களும், சானா தானா அப்பா ஆசாரத்துக்கு எதிரில் மிகப்பெரும் புளிய மரமும் மற்றும் பூவரச மரமும் இருந்திருக்கிறது, அது போக விழுதுகள் பரப்பி நின்ற ஆலமரங்களும், வாகை , வேங்கை மரங்களும் குளத்தை சூழ்ந்து திசைக்கு ஒன்றாக இருந்திருக்கிறது, அப்படியான ஒரு ஆலமரத்தின் அடியில் குளங்கரை பள்ளி நுழைவு வாயிலின் எதிரில் குஞ்சு முகம்மது அப்பா என்ற மகான் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மஹ்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களிடம் மார்க்க கல்வி நாடி கேரளாவில் இருந்து வந்த அவரது மாணவர்களில் ஒருவராக இவர் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர் ஏர்வாடி பாதுஷா நாயக்கத்தின் படையில் பட்டானி அப்பாவுக்கு துனையாக இருந்தவரா என்பதையும் ஆராயவேண்டும்.

குளத்து மேட்டு வாலிபர் சங்கத்தை ஒட்டி அந்திமறையும் வேளையில் நறுமனம் வீசும் பண்னீர் பூ மரங்களும், அசோக மரங்களும் சூழ்ந்து அரசர்கள் உலாவும் பூஞ்சோலைப்போல ஒரு குட்டி பிருந்தாவனமாக இந்த குளத்துமேடு பகுதி இருந்திருப்பதாக தெரிகிறது.

குளத்து மேட்டு பகுதியில், பெரிய காட்டை நோக்கிய மனல் பாதையில், பட்டானி அப்பா என்ற சேஹு பலுலுதீன் பத்தானி என்ற சுல்தான் செய்யது இப்ராஹிம் அவர்களின் சாமந்தர் ஒருவரின் அடக்க ஸ்தலத்தை
ஒட்டி இருக்கும் தென்னந்தோப்பை குண்டுதோப்பு என அழைப்பார்கள் , தென்னை மரங்கள் அடர்ந்த அந்த தோட்டம் பள்ளமான பகுதியில் இருந்ததால் அது குண்டுத்தோப்பு என கூறப்பட்டது. அந்த குண்டுதோப்பில் 500 வருடத்தைய புரதான பப்பரபுளி மரம் ஒன்றும் இருந்திருக்கிறது. விஸ்தாரமான அகலத்தில் , விஸ்வரூபமாய் வளர்ந்திருந்த மரத்தின் உள்பகுதியில், போரின் போது அரசர்கள் மறைந்து கொள்ள ரகசிய அறையினை குடைந்து குகை போல் உருவாக்கப்பட்டதையும் சமீப காலத்தில் பலரும் கண்டிருப்பதாக அறிய முடிகிறது, யானை புளிய மரம் என அழைக்கப்பட்ட இந்த மரத்தை நாடி
வித விதமான பறவைகள் தேடி வநது கூடு கட்டும். மைனா , கிளி, ஆந்தை ,பிதில் குருவி , கினத்தான் குருவி, காக்கை, கொண்டகலாச்சி போன்றவை மட்டுமின்றி சீசனுக்கு கீழ்திசை நாடுகளில் இருந்து கண்டம் கடந்து வரும் பறவைகளுக்கும் இந்த பப்பரபுளி மரம் ஒரு சரணாலயமாக இருந்திருக்கிறது.

ponni

டிசம்பர் மாத மழை காலத்தில், இடி முழங்கும் சமயங்களில் பயத்தில் கீழிறங்கி வகையாக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிக்கொள்ளும் ஒரு அப்பாவி பறைவை இனம்தான் பொன்னிக்குருவி இதனை காய்ச்சான் குருவி என்றும் அழைப்பார்கள். ரெயின்போ நிறங்களை உள்ளடக்கிய பொன்னிக்குவி ஆண்டுதோறும் தவறாமல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து , பசிபிக் கடல் தீவுப்பகுதிகளிலிருந்து கீழக்கரை வந்து சேரும், இந்த பறவை இப்பொழுதெல்லாம் அரிதான பறவை இனமாகி பிடிப்பதற்கான தடை உத்தரவு உள்ளது, கடந்த காலங்களில் ப்ராய்லர் கோழி இறைச்சியை பயன்படுத்துவதறகு முன்பு சிறவி, உள்ளான், கொக்கு, நாரை, கவுதாரி,புறா, பொன்னிக்குருவி , கின்னிக்கோழி ஆகியவைகள் கீழக்கரையை நாடி வருவதும் மக்களால் அந்த பறவைகள் உணவுக்காக பயன்படுத்தப்பட்டும் வந்தது, இப்பொழுது இந்த பறவைகள் அவ்வளவாக வருவதும் இல்லை,வந்தாலும் அதை பிடிக்க வனத்துறையினர் அனுமதிப்பதும் இல்லை.
கடந்த காலங்களில் வலைவிரித்து பிடிக்கப்படும் பொன்னிக்குருவியை அறுத்து, உறித்து என்னையில் , மசாலா சேர்த்து ரோஸ்ட் போல வசக்கியும், பொறித்தும் வைப்பார்கள, அதன் சுவை வெகு அலாதியானது, கீழக்கரையில் பொன்னிக்குருவிக்கு மிகப்பெரும் டிமாண்ட் இருக்கும், அதே போல அரிதாக கடலில் கிடைக்கும் சுவைமிகுந்த தடித்த தோல் கொண்ட ஆவுலியா மீனும் சுவைமிக்கது, தற்பொழுது இதுவும் தடைசெய்யப்பட்ட மீன் இனமாகி, கீழக்கரை தனது முந்தைய உணவு கலாச்சாரத்தில் இருந்த ஏகப்பட்ட வெரைட்டிகளை இழந்துதான் தவிக்கிறது.

17 ஆம் நூற்றாண்டில் , டச்சுக்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில் பறவைகளை வேட்டையாடுவதும், புறா வளர்ப்பிலும், புறாக்களை போட்டிக்கு தயார்படுத்துவதும் கீழக்கரையில் வெகுவான பொழுது போக்கு கேளிக்கையாக இருந்து வந்தது, இன்றும் புறா வளர்ப்போர் சங்கம் ஒன்று கீழக்கரையில் இருக்கிறது. இமாமுல் அர்ஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மேலத்தெருவில் தொடங்கிய அருஸியா தைக்காவின் மாடத்தில் ஆயிரக்கணக்கான புறாக்கள் வந்து தஞ்சமடையுமாம், அதற்கு தாணியங்கள் போடுவது தைக்காவாசிகளின் வழக்கமாகவும் இருந்திருக்கிறது.

அந்த நேரத்தில் மலேசியாவில் இருந்து தருவிக்கப்படும் ஊது குழல் துப்பாக்கிக்கு மவுசு ஜாஸ்தி, பாரம்பரிய கட்டைபோல்ட்டுகளுக்கு மாற்றாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஊது குழல் துப்பாக்கி வேட்டைபிரியர்களின் வார்ப்பிரசாதமானது. குண்டுத்தோப்புக்குள் நிற்கும் பப்பரபுளி மரத்துக்கு வந்து சேரும் பறவைகளை இந்த ஊது குழல் துப்பாக்கி கொண்டு ஊதிச் சுடுவதில் கிழக்குத் தெருவில் மூனாமூனா என்றழைக்கப்பட்ட முஹம்மது முகைதீன் பெரும் ஜாம்பாவனாக இருந்திருக்கிறார். களிமன்களை சிறு உருண்டைகளாக உருட்டி , காயவைத்து குண்டுகளாக்கி, ஒரே மூச்சில் 30 அடிக்கு மேலே மரத்தில் நிற்கும் பறைவைகளை குறி தவறாமல் ஊதிச் சுடும் திறன் மிக்கவர் மூனா மூனா .

இராமேஸ்வரத்திலிருந்து கீழக்கரைக்கு சங்குவியாபாரம் செய்ய இங்கு வந்தவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம். பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த அன்றைய காலத்தில் அவர் சங்குமாலைகளும் , எலந்தைகொட்டை மாலைகளும் செய்து வாரனாசி மற்றும் கல்கத்தாவிற்கு அனுப்பி வியாபாரம் செய்திருக்கிறார். அந்த மாலைகளை கோர்த்து கொடுப்பது கிழக்குத்தெருவை சேர்ந்த சில எளிய குடும்பத்து பெண்கள்தான். இலந்தை கொட்டை, சங்கு, சோழி போன்றவற்றை மாலையாக கோர்த்துக்கொடுப்பது ஒரு குடிசைத்தொழிலாக அந்த பகுதியில் மூனா மூனாவால் அறிமுகப்படுத்தப்பட்டு பல குடும்பங்களுக்கு உதவிக்கொண்டிருந்தது. மூனா மூனாவிற்கு பிறகு சமீப காலம் வரை கிழக்குத்தெரு வானா மூனா குடும்பத்தினர் அந்த தொழிலை தொடர்ந்து செய்து வந்தனர்.

தொடரும்…..

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *