வகுதை கரையினிலே – 12 ஆம் பாகம் . கீழக்கரை வரலாற்று ஆய்வு… எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

வகுதை கரையினிலே – 12 ஆம் பாகம்
9 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த அரேபியர்கள் கீழக்கரையை , வகுதாபுரி என அழைத்து இஸ்லாமிய கலீபா ஆட்சி முறையை அமல் படுத்தி , அரேபிய நகரங்கள் போல் ஊர் பெயர்களை மாற்றி அரபு தேசம் போன்றே அச்சுப்பிசகாமல் ஆட்சி செய்வதாகத்தான் பல்சந்த மாலையில் கீழ்கண்ட பாடலின் மூலம் அறிய முடிகிறது..

பிறையார் நறுநுதற் பேதை தன் காரணத்தால் பெரும
மறைநாள் இரவில் வருவது நீயொழி வச்சிரநாட்டு
இறையாகிய கலுபா முதலானவர் யானைகள் நின்று
அறை வாழும் விஞ்சத் தடவிகள் சூழுமணிவரையே….
இந்த பாடல் என்ன சொல்கிறது…

பிறைபோன்ற நெற்றிப் புருவம் கொண்ட உன் காதலியை கான மறை நாள் எனப்படும் நோன்பு கால இரவில் நீ வகுதை நகருக்கு வருவதை நிறுத்தி விடு, அந்த இரவுகளில், வச்சிர நாட்டு தலைவனாகிய கலூபா என்ற கலீபா தனது படை பரிவாரங்களுடன் ,புடை சூழ, முரசு முழங்கி, யானையில் ஏறி நகர் வலம் வருவார்…. நீ அவர்ட்ட மாட்டுனா தொலைஞ்சே… என எச்சரிக்கை ரீதியில்தான் அந்தப் பாடல் அமைந்துள்ளது.

இந்த பாடலை , தென்னாடு வந்து அரசியல் ஆதிக்கம் பெற்ற கலீபா அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் சந்ததிகளுடன் தொடர்பு கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் அப்பாசிய கலீபாக்களின் ஆட்சி காலத்தில் பாக்தாத், கெய்ரோ பகுதியில் இந்த குடிகள் எதிர்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக நாடு பெயர்ந்து தென் தமிழகம் வந்த அஹ்மது கில்ஜி வகையறாக்களில் ஒருவரோ அல்லது ஏமனில் இருந்து வந்த கலீபா அபூபக்கர் சிந்திக் ரலி வழி வந்த 7 ஆம் தலைமுறையினரில் ஒருவரோ, பாண்டிய மன்னர்களின் ஆதரவு பெற்று கீழக்கரை பகுதியை அரசாண்டு கலீபா மகுடம் சூட்டி இருக்கலாம்.

ஆக பல்சந்த மாலை குறிப்பிடும் கலுபா இவர்கள்தான். அவ்வாறு ஆண்ட பொழுது, தங்களின் தலை நகரை பகுதாது ( பாக்தாத்) என அழைத்து அது வகுதாது ( வகுதாபுரி, வகுதை) என மருவி இருக்கலாம். தாங்களின் அரேபிய நகரங்களில் நோன்பு கால இரவில் யானை, மற்றும் ஒட்டகங்களில் முரசு அறைந்து நகர்வலம் வருவது போன்ற சடங்கை இங்கே நடத்தி இருக்கலாம் இதுவே பல்சந்த மாலையில் மறை நாள் , மற்றும் கலுபா , யானைகள் நின்று அறை…. போன்ற சொற்கள் மூலம் குறிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ள முடிகிறது.

அதெல்லாம் இல்லை.. பல்சந்தமாலை 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த நூல்தான், அது இந்த பவுத்திரமாணிக்கப்பட்டினமாகிய கீழக்கரை பகுதியை 12 ஆண்டு காலம் ஆண்ட ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தைதான் கலீபா என்றும் அவர் காலத்தில் வாழ்ந்த 5 அரபுதேசங்களை சார்தவர்களைதான் அஞ்சு வண்ணத்தார், யவனர் என்றழைத்ததாகவும் , வச்சிர நாடு என்பது 25 மைல் சுற்றளவு கொண்ட பாம்பன் தீவு முதல் வாலி நோக்கம் வரை ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் ஆட்சிக்கு உட்பட்ட தென்மதுரை பகுதியாக இருக்கலாம் என்றும் சேது நாட்டு சீமையிலே நூலாசிரியர் கவிஞர் ச.சி.நெ. அப்துல் ரசாக் தெரிவிக்கிறார், இதனையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

idris

சமகாலத்தில் கீழக்கரையின் புதைந்த வரலாற்றினை ஆய்வு செய்து விளக்கம் தந்தவர்கள் பலர். அதில் முதன்மையானவராக இருந்து மறைந்தவர் வரலாற்று ஆய்வாளர் எம். இத்ரீஸ் மரைக்காயர், தமிழகத்தில் மார்க்கோபோலோ, கீர்த்திமிகும் கீழக்கரை போன்ற ஆய்வுக் கோர்வை நூல்களை எழுதியவர், தனது 90 ஆவது வயதிலும் எழுத்துப்பனிகளிலும், வரலாற்று ஆய்விலும் தன்னை அற்பணித்தவர், எனது 15 வது வயதில் கீர்த்திமிகு கீழக்கரை நூலை எனக்கு அனுப்பச்சொல்லி அவருடைய சென்னை, நுங்கம்பாக்கம், ரட்லண்ட் கேட் இல்லத்துக்கு ஒரு போஸ்ட் கார்டில் எழுதிக்கேட்டதற்கு, உடனே பதிலளித்து எனக்கு நூலையும் அனுப்பி வைத்த அந்த நிகழ்வு இன்றும் மனதில் நிழலாடுகிறது. கடந்த 1990 ஆண்டு கீழக்கரையில் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய 5 ஆம் மாநாடு சீரோடு நடைபெற முக்கிய பனி ஆற்றியவர், கீழக்கரை வரலாற்றை ஆய்வு செய்ய விரும்பும் எவரும் இவரின் நூல்களை சாண்றாதாரமாக கொள்ளாமல் அடுத்தக் கட்டத்துக்கு நகரவே முடியாது என்றால் மிகையில்லை, எனக்குத் தெரிந்து தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியவர் கீழக்கரையில் எம். இத்ரீஸ் மரைக்காயர் அவர்களை தவிர வேறு யாரும் இல்லை என்பதாக தெரிகிறது.

suaib

தான் வாழும் பிரதேச வரலாறினை, தங்களின் பேசும் மொழியினை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர் சேகு நாயகம் டாக்டர் தைக்கா சுஹைப் ஆலிம் அவர்கள், இவரது ஆய்வை அங்கீகரித்து, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
கொளரவ டாக்டர் பட்டங்கள் மலிந்துவிட்ட சம காலத்தில், கீழக்கரையை சேர்ந்தவர்களில் ஆய்வு செய்து, பி.எச்.டி முனைவர்கள் பட்டம் பெற்றவர்கள் வெகு சிலரைத்தான் குறிப்பிட முடிகிறது. வரலாறை தவிர்த்து மற்ற துறைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களும் கீழக்கரையில் வாழ்ந்து மறைந்தும், வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

bahrueenகீழக்கரையை சார்ந்த வெகு அரிதான முதல் தர கல்வியாளர்கள் வரிசையில் மறைந்த முனைவர் செய்யது எம். பஹ்ருதீன் அவர்கள் முன்னோடியானவர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் , கீழக்கரை அம்பலக்காரர் தெருவில் புகழுடன் வாழ்ந்த வணிகப் பெருமகனார் கருத்த சதக்குத் தம்பி மரைக்காயர் அவர்களின் வம்சவழியில் தோன்றிய முனைவர் பஹ்ருதீன் அவர்கள் ஒரு தலை சிறந்த கணித மேதை, அல்ஜீப்ரா யாப்பு கணித ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். ஹவாய் பல்கலை கழகத்தின் கணித துறை பேராசிரியராக பல காலம் பணி ஆற்றியவர், கடந்த 1971 ஆம் ஆண்டு, நோத்தேரியன் வளைய சமன்பாட்டின் துல்லிய நேர்கோட்டு தொகுதிகள் ( LINEARLY COMPACT MODULES OVER NOETHERIAN RINGS. ) குறித்த இவரது திறனாய்வு கட்டுரை, அல்ஜிப்ரா கணித இதழில் வெளியிடப்பட்டது. கடினமான அல்ஜீப்ரா கணித சிக்கல்களை தீர்க்க இவரின் அல்ஜீப்ரா மெய்ப்பாட்டு விளக்கங்கள் இன்றும் உலகம் முழுவதும் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் சூத்திரமாக இருப்பதாகவும் அறிய முடிகிறது. இது முனைவர் பக்ருதீன் அவர்களின் அபார கணிதத்திறமைக்கு எடுத்துக்காட்டாகும். மேலும் அமெரிக்கா, பிரேசில், சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பேராசிரியராக பணி ஆற்றியவர், கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் நிர்வாக குழு அங்கத்தினராக செயல்பட்டவர், மட்டுமின்றி கீழக்கரை சமூக நலனில் பெரும் அக்கரை கொண்டவராகவும் இருந்தவர். வரலாற்று ஆய்வுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர், இவரது இல்லத்தில் அமைத்திருந்த நூலாகத்தில் காலத்தால் மறக்கப்பட்ட அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்ததாகவும், 1950 களில் டாக்டர் ஹூசைன் நைனார் ஆய்வு செய்து எழுதிய , வள்ளல் சீதக்காதி என்ற வரலாற்று நூலை முனைவர் ஃபஹ்ருதீன் அவர்களின் நூலகத்தில் இருந்தே பலர் படி எடுத்தார்கள் என அறிய முடிகிறது,

முனைவர் ஃபஹ்ருதீன் அவர்கள் அன்றைய பெரும் வணிகரும், தலை சிறந்த இஸ்லாமிய அறிஞரும், மதுரை நாலாம் தமிழ் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமான ஹாபிலுல் குர்ஆன் அல்லாமா செய்யது முகம்மது ஆலிம் புலவர் அவர்களின் மகள் வயிற்று பேரரும். கடந்த நூற்றாண்டில் கீழக்கரையை சார்ந்த முதல் முதுகலை பட்டதாரி, எம்.எஸ்.ஸி வேதியல் பிரிவு பட்டம் பெற்று , அலிகார் பல்கலை கழக்த்தில் பேராசிரியராக பல காலம் பணியாற்றி, கல்வி பணியின் காரனமாக லாகூர் சென்ற பொழுது மறைந்த பேராசிரியர் எஸ்.எம். முகம்மது மஹ்தூம் முகைதீன் அவர்களின் மகனும் ஆவார். முனைவர் பக்ருதீன் அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் காலமானார்கள். அன்னாரின் மறைவால் அரிதிலும் அரிதாக காலம் நமக்கு தந்த ஒரு கல்வியாளரை கீழக்கரை இழந்தது எனில் அது மிகையில்லை – தொடரும்⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *