வகுதை கரையினிலே 11வது பாகம்.. கீழக்கரை வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

வகுதை கரையினிலே 11வது பாகம்.. கீழக்கரை வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

11 வது பாகம்…
கடந்த ரமலான் மாதம் ஓர் இரவில் நித்திரை வராமல் ஷஹர் நேரத்து நைட் கால் ஆக பள்ளிவாசல் ஒலிப்பெருக்கியில் ” அன்பார்ந்த நோன்பாளிகளே.. எனத் தொடங்கும் அறிவிப்பை எதிர்பார்த்து படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்… செல் போன்களும், அலார கடிகாரங்களும் பெருகி மலிந்தவிட்ட இந்த காலத்தில் நகர் புறங்களில் இந்த ஒலிப்பெருக்கி அறிவிப்புகள் எல்லாம் புதைந்துவிட்ட நிலை, தன்னை அறியாமலேயே, இயல்பாகவே கீழக்கரை போன்ற சில ஊர்கள் ரமலான் இரவில் இறைவசனம் ஓதுவதை ஒலிபரப்பி இடைக்கிடையே ஷஹர் முடிவடையும் நேரத்துக்கான நேரத்தை அறிவிப்பதன் மூலம் இன்றும் தான் கடந்து வந்த பண்பாட்டின் தொண்மையை பாதுகாத்து வருவதாக நினைத்துக் கொள்வேன்.

நினைவுகள் பின்னோக்கியே செல்கிறது…

vagu90கடந்த நூற்றாண்டுகளில், மின்சார இணைப்பெல்லாம் இல்லாத காலத்தில், மறை நாள் இரவான நோன்புகாலங்களில் பள்ளிவாசல்களில் நகரா என்ற முரசு கொட்டி ஒலி எழுப்பி மக்களை நோன்பு பிடிக்க தூக்கத்திலிருந்து எழுப்பவும், நோன்பு திறக்கும் நேரத்தை அறிவிக்கவும் செய்வார்கள், என் பால்ய பருவத்தில் நடுத்தெரு குத்பா பள்ளியில் மோலியாரப்பா (மோதினார்) கஸ்டடியில் இருக்கும் நகராவை நான் உட்பட மச்சான் அப்துல் மஜீது போன்ற நன்பர்கள் எதிர்பாராத நேரத்தில் தட.. தட வென இரண்டு மரக்குச்சிகளை கொன்டு ட்ரம்ஸ் சிவமணி ரேஞ்சுக்கு முழங்கி முரசை மட்டுமல்ல மோலியாரப்பாவையும் சேர்த்தேதான் தெறிக்கவிடுவோம்….அலறி அடித்து அவர் வரும் முன்பே ஏரியாவை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகி ஓடிவிடுவதும் வழக்கமாக இருந்த அந்த நாட்களை அசை போட்டால் இன்றும் இனிமை தரத்தக்கது.

ஷஹர் நேர நகரா கொட்டுவதை தவிர்த்து, தூக்கத்திலிருந்து எழுப்பிவிட நைட் காலர்களும் இருக்கிறார்கள்… யார் அவர்கள்?…..பல நூற்றாண்டுகளாய் உலகில் பேராதிக்கம் செலுத்தி, தனது பாரசீக, மற்றும் துருக்கிய சங்கீத மொழிகளின் வாயிலாக வெகுஜனங்களை கட்டி வைத்திருந்த சூபி வாய்வழி பாடல்கள் அரிதாகிவிட்ட இந்த வேளையில், இதன் எச்சங்களாய் மிஞ்சிய பக்கீர்ஷாக்களின் கரகரத்த குரலுடன் கூடிய தாளம் இந்த ரமலானில் ஷஹர் நேரங்களில் ஒலிக்கவில்லை என்பதை பல இரவுகள் என்னால் சென்ற நோன்பு கால இரவுகளில் கவனிக்க முடிந்தது… கீழக்கரையின் இன்னொரு பண்பாட்டு கோலமும் சமாதியாகிவிட்டது என்ற கவலை உணர்வு கொண்ட அந்த வினாடி.. இருளில் மெலிதாக நைட் லாம்பின் ஒளி கசிந்த நேரத்தில் நிசப்தம் கலைந்து எங்கிருந்தோ பச்சை முண்டாசு கட்டி வந்த பக்கீர்ஷா ஒருவரின் ஷஹர் நேர தப்ஸ் பாடல் ஒலி காதில் வந்து ஆனந்தமாய் மோதி தன் நிலையை தக்கவைத்து, என்னையும் ஷஹர் உணவுக்கு எழுப்பிவிட்டது… சாதாரணமாக கொட்டப்பா … வர்ராஹ… என்றாலே எட்டடிக்கு குறுக்கே பாய்ந்து பயந்து ஓடும் குட்டி மகள் ஆயிஷா…அந்த சமயம் சலனமற்று ஆழ்ந்த நித்திரை கொண்டிருந்தாள் …

vagu2

கொட்டப்பா தப்ஸ் அடித்து எழுப்புவது எங்கிருந்து தொடங்கியது. அப்பாசிய கலீபாக்களின் ஆட்சி காலத்தில் கெய்ரோவிலும், பாக்தாத்திலும் நோன்பு காலங்களில் அல் மெஷ்ஹராத்தி என அழைக்கப்படும் அரேபிய பக்கீர் ஷாக்கள் கையில் லாந்தர் அல்லது அரிக்கேன் விளக்குடன் , கொட்டடித்து, பாடல் பாடி நோன்பு காலங்களில் ஷஹர் நேரத்தில் மக்களை எழுப்பி வந்தனர்,

1000 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கெய்ரோ, துருக்கி ஏமன், பாக்தாத், மொரோக்கோ நகரங்களில் சில பகுதிகளில் ரமலான் இரவுகளில் இந்த மெஷ்ஹராத்திகள் நடந்தோ, கோவேறு கழுதைகள் மேலேறி நகர் வலம் வந்தோ தமது பண்பாட்டினை பறைசாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாத்திமூத் மற்றும் அப்பாசிய கலீபாக்களின் ஆட்சியில் நோன்பு பிறை 27 மற்றும், ஈத் திரு நாட்களில் இரவில் கலீபாக்கள் தனது படை பரிவாரங்கள், யானைகள், குதிரை, ஒட்டகங்கள் சகிதமாக பட்டாடை அனிந்து, முரசு அறைந்தும் நகர் வலம் வருவதை வரலாறு மூலம் அறிய முடிகிறது, பாக்தாத்திலும், ஏமனிலும், கெய்ரோவிலும் இது அரச வழக்கமாக இருந்து வந்தது.

கி.பி.9 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அப்பாசிய கலீபாவான அல்வாத்திக் என்பவரின் கொள்கையை எதிர்த்து இஸ்லாமியர்களின் முதல் கலீபாவும் நபித் தோழருமான கலீபா அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகன் ஹஸரத் அப்துல் ரஹ்மான் (ரலி) அவர்களின் சந்ததிகளும், அரபு நாட்டில் வாழ்ந்த பல் வேறு அரேபிய கோத்திரத்தவர்களும் தங்களது குடும்பங்களுடன் அஹ்மது கல்ஜி என்பவரின் தலைமையில் நாடுவிட்டு தென்பாண்டி நாட்டு துறைமுகப்பகுதிக்கு வந்தடைந்தனர், இவர்கள் காயல்பட்டினம் மற்றும் கீழக்கரை பகுதிக்கு வந்து பாண்டிய மன்னர்களிடம் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ஆள அதிகாரம் பெற்றிருந்தனர். அவ்வாறு வந்த அஞ்சு வண்னத்தார்கள் சிந்திக்கி, பக்ரி, எமனி என்ற குலப்பெயர்களுடன் அறியப்பட்டார்கள், அவர்களின் சந்ததிகள் மலேசியா, ஏமன், இந்தியா, ஓமன், ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பரவி வாழ்ந்து வருவைதை அந்தந்த நாடுகளில் தற்போது கிடைக்கப்பெறும் சில்சிலா (வம்சாவழி ஜாபிதா) க்கள் மூலம் அறிய முடிகிறது

கடந்த நூற்றாண்டில் கீழக்கரையின் பாரம்பரிய டவுன் காஜியாக 40 வருடங்களுக்கு மேல் பணியாற்றி , அரபி, பார்ஷி, மற்றும் தமிழில் பைத்துக்கள் பல படைத்தவர்களும், நடுத்தெரு ஜும்மாஆப் பள்ளியின் முத்தவல்லியுமாக இருந்து சீரிய மார்க்க சேவை புரிந்து, கடந்த 1992 ஆம் ஆண்டு தனது 80 வயதில் காலமாகி, நடுத்தெரு குத்பா பள்ளியில் வள்ளல் சீதக்காதி மரைக்காயருக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மர்ஹூம் அல்லாமா காஜி முகம்மது இப்ராஹீம் பாஜில் நூரிய்யி சித்திக்கி அவர்களிடமும், அதே போல் கீழக்கரை, மேலத்தெரு அருஷியா காதரியா தரீக்காவின் ஞான குருவும், செரந்தீப் மற்றும் தமிழகத்தில் ஆர்வி,அரபு மற்றும் பார்சி மொழி என்ற ஆய்வுக் கோர்வை எழுதி முனைவர் பட்டம் பெற்று தந்து 87 ஆவது வயதிலுல் மார்க்கப்பனி ஆற்றி வரும் சேகு நாயகம் அப்சலுல் உலமா டாக்டர் தைக்கா சுஹைப் ஆலிம் அவர்களிடமும் கலீபா அபூபக்கர் சிந்திக் ரலி அவர்கள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் 39 ஆவது வாரிசு வம்சா வழி ஜாபிதா (சில்சிலா) இருப்பதாக அறிய முடிகிறது. இவர்கள் இருவரும் சிந்திக்கி வம்சாவளி வந்தவர்கள் என்றும் அந்த ஜாபிதா மூலம் அறியலாம்…⁠⁠⁠⁠  தொடரும்…

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *