வகுதை கரையினிலே…. பாகம் 14 வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா
வகுதை கரையினிலே…. பாகம் 14 வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா
கீழக்கரை கடலோரப் மணல் வெளியில் பல உக்கிர யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்களை அந்தப் பகுதிகளில் கிடைக்கும் மீஜான் கற்கள் நமக்கு அறிவிக்கிறது. ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் தொண்டர்களாக கேரளாவில் இருந்து வந்த பலர் போரில் கொல்லப்பட்டு இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

kulanகிழக்குத் தெரு குளங்கரை பள்ளியை ஒட்டிய குளத்து மேடு பகுதியில் அமைந்திருக்கும் முகம்மது காசீம் அப்பா தர்கா வளாகத்தில் போரில் மடிந்த பலரின் அடக்க ஸ்தலங்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. இன்றும் கேரளாவில் இருந்து ஏர்வாடிக்கு வரும் மலையாள யாத்ரீகர்கள், இங்கு அடங்கப்பட்டிருக்கும் தங்களது முன்னோர்களை ஜியாரத் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

குளத்து மேட்டுப் பகுதியை ஒட்டிய, குளங்கரை அப்பா பள்ளிக்கு எதிரே   தற்போது தலைநிமிர்ந்து நிமிர்ந்து நிற்கும் ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகமாக உருவாகி இருக்கிறது.

130 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளி, கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் தன் பாரிய கல்விச்சேவையை தொடர்ந்து செவ்வனே ஆற்றி வரும் கேந்திரமாக திகழ்கிறது. 1885 ஆம் ஆண்டில் ஹைராத்துல் ஜலாலியா பள்ளிக்கூடம், கிழக்குத்தெருவை சார்ந்த பெரிய தம்பி மரைக்காயர் என்ற தனவந்தரின் சீரிய முயற்சியால் குளத்துமேட்டை ஒட்டிய ஒரு தின்னைப்பள்ளியாக தொடக்க காலத்தில் துவக்கப்பட்டு, பின் ஆரம்பப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. தற்போது ஆரம்பபள்ளி கட்டடத்தில் கீழக்கரை மிஷன் வைத்திய சாலை இயங்கிவருகிறது.kulan554

அந்த தின்னைப்பள்ளியின் தொடக்க கால ஆசிரியராக, ஃபிக்ஹ் மாலை, மகுடி நாடகம், நாகூர் புகைரத ஒயிற் சிந்து போன்ற சீர்மிகு தமிழ் இலக்கியங்கள் பல படைத்த அதிராம்பட்டினம் அமிர்தகவி செய்யது முகம்மது அண்னாவியாரின் வழித்தோன்றலான அன்னாவியார் புலவர் ஒருவர் கல்வி கற்பித்து கொடுத்திருக்கிறார், அதிராம்பட்டினம் அன்னாவியார் அவர்களின் சந்ததிகள் இன்றும் கீழக்கரை கிழக்குத் தெருவில் சிறப்புடன் வாழ்ந்து வருவதை காணமுடிகிறது. நடுத்தெருவில் புலவர் வீடு என்ற குடும்ப பெயருடன் வசித்துவருபவர்களின் முந்தைய தலைமுறையில் அன்னாவியார் என்ற பெயரில் புலவர் ஒருவர் வாழ்ந்து மறைந்ததாகவும் , அவர் ஜின்களை வசியப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தார் என்றும் சொல்லிக் கேள்விபட்டிருக்கிறேன்.

 

அதிராம்பட்டினம் அன்னாவியார்களுக்கும் கீழக்கரைக்குமான தொடர்புகள் மேலும் ஆராயப்படவேண்டியது, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெருவில் அமைந்திருக்கும் புரதான கல்லுப்பள்ளியான, ஜும்மாப்பள்ளியை கட்டி முடித்த இமாம் மஹ்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்கள் அதிராம்பட்டினத்தில் இருந்து கீழக்கரைக்கு வந்து குடியேறிய 17 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் , அமிர்தகவி செய்யது முகம்மது அன்னாவியாரின் இளவல் ஒருவரும் அவருடனே வந்ததாகவே அறிய முடிகிறது.

பழைய குத்பா பள்ளியில் அடஙகப்பட்டிருக்கும் இமாம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்கள் கீழக்கரையில் வாழ்ந்து மார்க்க சேவையாற்றி மறைந்தவர். அவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் நடுத்தெருவில் ஆலிம்களாகவும், வணிக பெருமக்களாகவும் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த காலங்களில் நடுத்தெரு, ஏ.எம்.எஸ் மற்றும் எஸ்.வீ.எம். குடும்ப திருமண நிகழ்வுகளில் மாப்பிள்ளை பைத்தில், ஊர்வலமாக பழைய குத்பா பள்ளிக்கு சென்று மஹ்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் மற்றும் சீனி முகம்மது லெப்பை ஆலிம் ஆகியோரின் அடக்கஸ்தலத்தில் ஜியாரத் செய்வது ஒரு வழக்கமாகவே இருந்துவந்தது. இது போன்றே மேலத்தெருவை சேர்ந்த பலரது குடும்ப திருமன வைபவங்களில் நடுத்தெரு, ஜும்ஆ பள்ளி வளாகத்தில் வடக்குப்பகுதியில் இருக்கும் மாதிஹ் ரசூல் இமாம் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு சென்று ஜியாரத் செய்வது வழக்கம்.

அன்னாவியார் குலத்தோன்றலில், அதிராம்பட்டினம் மேலத்தெருவில் வாழ்ந்து தனது 90 ஆவது வயதில் கடந்த 1992 ஆம் ஆண்டு மறைந்த அமிர்தகவியின் பேரரான ஜீவரத்னகவி செய்யது முகம்மது அன்னாவியார் புலவர், தனது பூர்வீக சொந்தங்கள் இன்று கீழக்கரை, கிழக்குதெருவில் வசிக்கும் சன்சைன் குடும்பத்தினர் எனக் குறிப்பிட்டதாக அதிராம்பட்டினம் அன்னாவியார் குடும்பத்தை சேர்ந்த எனது நன்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.

கர்ம வீரர் காமராஜர் முதல்வராக இருந்த 1960 களில் ஹைராத்துல் ஜலாலியா ஆரம்ப பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு காமராஜரே வருகை தந்து சிறப்பித்ததாகவும், இன்றைய சத்துணவுத்திட்டத்துக்கு முன்னோடியாக மதிய உணவுடன் கூடிய ஆதார கல்வித் திட்டத்தை இந்தப் பள்ளியில் தொடங்கி வைத்ததாகவும் செய்திகள் உண்டு. இந்த பள்ளியின் நூற்றாண்டுவிழா கடந்த 1985 ஆம் ஆண்டு, ஆவனா. மூனா . மஹ்மூது கரீம் அவர்கள் தாளாளராக இருந்த காலகட்டத்தில் கிழக்குத்தெரு சேகப்பா பள்ளிக்கு அருகே பிரமாண்ட மேடை அமைத்து சிறப்புடன் நடைபெற்றது, முதலமைச்சராக இருந்த புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆரின் அன்றைய அமைச்சரவை சகாக்களான அரங்க நாயகம், காளிமுத்து, டி. ராமசாமி, திருச்சி சவுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர், அந்த விழாவில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியது இன்றும் மனதில் நிழலாடுகிறது.hairathul jalali

சமீப காலத்தில் ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் கட்டமைப்புகளை சீரமைத்து, கல்வித் தரத்தினை செம்மைப்படுத்தி , பள்ளியின் சிறப்பை புகழுச்சிக்கு கொண்டு சென்றவர் இதன் தற்போதைய தாளாளர் முனைவர் ஜே. சாதிக் அவர்கள், அரிதிலும் அரிதாகி விட்ட கீழக்கரையை பூர்வீமாக கொண்ட , ஆய்வுகள் செய்து டாகடர் பட்டம் பெற்றவர்களில் ஒருவராக திகழ்பவர், பி.எச்.டி. சாதிக் காக்கா என்றழைக்கப்படும் முனைவர் ஜே.சாதிக் அவர்கள். இந்த பள்ளியின் வகுப்பறை வசதிகளுக்கான புதிய கட்டடங்கள் மற்றும் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியை, பல சிரமங்களுக்கு இடையே தொடர் பயணங்கள் செய்து அரும்பாடுபட்டு திரட்டி இன்று குளத்துமேடு என அறியப்பட்ட இந்த பகுதியில் ஓங்கி நிற்கும் பள்ளி கட்டடங்களை உருவாக்கி, அரசிடம் தேவையான அனுமதியும், நிதி உதவியும் பெற்று , திறன் மிகுந்த ஆசிரியர்கள் பலரை பள்ளியில் நியமித்து, இன்று ஆகச்சிறந்த மாணவர்களை ஹைராத்துல் ஜலாலியாப் பள்ளி உருவாக்கும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்த வியக்கத்தகு கல்விச் சேவை ஆற்றியவர் முனைவர் ஜே. சாதிக் அவர்கள் என்றால் மிகையில்லை.

முனைவர் ஜே. சாதிக் , நுண்ணிய உயிரியல் பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, சித்தமருத்துவத்தில் எலும்பு நோய்களுக்கான சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். குவைத் அரசு வைத்தியசாலையில் சில காலம் ஆராய்ச்சி துறையில் பணியாற்றியவர் என கீழக்கரையின் முதல்தர கல்வியாளர் வரிசையில் இடம்பெறுபவர் இன்று ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளராக தொடர்ந்து தனது கல்விப்பணியை ஆற்றி வருவதை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

கீழக்கரையில் பருவமழைகள் பொய்த்து போனதற்கான காரணமாக காலம் காலமாக இருந்த நீர் நிலைகளை மணல் கொண்டி மூடியதும், அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களை சமகாலத்தில் வெட்டி வீசியதுமே காரணமாக சொல்லப்படுகிறது, ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு செழித்து வளர்ந்திருந்த மரங்களை சிறுக, சிறுக அழித்துவிட்டு, தற்போது சுந்தரமடையானில் கிடைக்கும் மரக்கன்றுகளை வாங்கி நட்டு பசுமையை காப்பதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். கடந்த நூற்றாண்டில் 1921 முதல் 1924 வரை கீழக்கரை நகர்மன்ற தலைவராக இருந்த ஏ.எம்.எஸ். அஹ்மது இப்ராஹீமை அறிவீர்களா?

kulan55

கீழக்கரை வரலாற்றின் தொடக்ககால பசுமை செழுமை திட்டத்துக்கான வித்தாக திகழ்ந்தவர், தற்போது 40 வயதை கடந்தவர்கள் தங்களது பதின்ம வயதில் கீழக்கரை பழைய பஸ் ஸ்டான்ட் பகுதி முதல் வண்ணாந்துறை வளைவு பகுதி வரை கிட்டத்தட்ட 4 கி.மீட்டர் தூரத்தில் நீண்ட சாலையின் இரு மருங்கிலும், ஆல, அரச, அத்தி மரங்கள் மற்றும் வேப்ப மரங்களும் வரிசையாக அமைந்திருக்கும். கீழக்கரையின் நுழைவு வாயிலை கடக்கும் போது, விழுதுகள் அடர்ந்த நிழல் தரும் அடர்ந்த சோலைக்குள் நுழையும் உணர்வை அணுபவித்திருக்கலாம். பாலையாறில் இருந்து கீழககரை வரும் சாலையில் முனீஷ்வரம் பகுதியை கடக்கும் பொழுது வரும் பள்ளமான , வளைவுப் பகுதியில் அடர்ந்து தொங்கும் ஆலமர விருதுகள், அதன் நிழல் ஆகியவை ஒரு குகைக்குள் நுழைந்து மேலெழுந்து வரும் உணர்வை அடைந்திருக்கிறேன். அந்தப்பகுதியே சிலு சிலு வென காற்று வீசி ரம்யமாக சூழலில் தோற்றமளிக்கும். இந்த செழித்த இயற்கை சூழலை உருவாக்கி கொடுத்தவர்தான்kilakarai
நடுத்தெருவை சேர்ந்த சேர்மன் ஏ.எம்.எஸ். அஹ்மது இப்ராஹீம் அவர்கள். பசுமை செழுமைக்கு வித்திட்ட அன்னாரின் சேவையை பறைசாற்றிய வழி நெடுகிலும் இருந்த மரங்களை, சாலை அகலப்படுத்தும் பணியின் போதும், மின்சார இனைப்புக்கான போஸ்டர்கள் அமைத்தபோதும், கீழக்கரை வழியே கிழக்கு கடற்கரை சாலை அமைத்தபோதும் நாம் முற்றிலுமாக இழந்துவிட்டோம், சேர்மன் ஏ.எம்.எஸ். அஹ்மது இப்ராஹீம் அவர்களின் தொலை நோக்கு பசுமைப் பார்வையை ஒரு 100 வருடங்களுக்குள் முடித்து வைத்த கதையை எழுதியது சமகாலத்திய நமது சமூகம்.⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *