வகுதை கரையினிலே (…கீழக்கரை வரலாற்று தொகுப்பு)….பாகம்6 .. எழுத்தாளர்.மஹ்மூத் நெய்னா

mahmood naina
வகுதை என்பது 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப்பகுதியில் ஆறாம் பாண்டியனாக அறியப்பட்ட பாரசீக கிஸ் தீவில் இருந்து குதிரை, மிளகு, முத்து வர்த்தகம் நாடி இங்கே வந்து அரசியல் செல்வாக்கு பெற்று கறுப்பாறு காவலர் என பெயர் சூடிய சுல்த்தான் தகியுதீன் வகையறாக்களுக்கு ஆட்சி நடத்த பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவரால் இந்த பாண்டி நாட்டு கிழக்கு கடல்பகுதி வகுத்து வழங்கப்பட்டதால் வகுதை என்று பெயர் தாங்கியது என்கிறார் சமூக மற்றும் வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளரும், தனது 90 ஆவது வயதிலும் நகர் நலப்பனிகளில் தன்னை இனைத்து ஆக்கமுடன் செயல்பட்டு வரும் ஸ்டேசன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எம்.எம்.எஸ். செய்யது இப்ராஹீம்.kilakarai2

இவர்களை சமீபத்தில் ஒரு ஜும்மா அன்று கிழக்குத்தெரு சேகப்பா பள்ளியில் சந்தித்த வேளை, பல்சந்தமாலையை நமது முன்னோர்கள் இழந்துவிட்டார்கள், அதன் முழுக் கண்னிகள் கிடைத்து இருந்தால் 9 ஆம் நூற்றாண்டு கீழக்கரையின் வாழ்வியலை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கும் என வருந்தினார், 1960 களில் தொடங்கி வகுதை எம். எம். எஸ். என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகள் படைத்தவர், இந்தியன் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கீழக்கரை வட்டாரத்தில் பல நல்ல அரசு திட்டங்கள் கொண்டுவர உறு துனையாக இருந்தவர் , 1990 இல் கீழக்கரையில் நடைபெற்ற உலகத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய 5 ஆம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியை செவ்வனே நடத்திக்காட்டிய செயல் வீரர். தனது புனைப்பெயரிலும் வகுதையை புகுத்தி இருப்பதும்கூட வரலாற்றில் கீழக்கரைதான் வகுதாபுரி என்பதற்கான சான்றாக பிற்காலத்தில் அறியப்படலாம். பல்சந்தமாலை குறித்து எம். எம்.எஸ். செய்யது இப்ராஹீம் அவர்களின் கவலையில் எனக்குள் கீற்றுகளாய் கேள்விகள் பிறக்கிறது. பல்சந்தமாலையை இயற்றியவர் யார்? இதில் கூறப்படும் வச்சிர நாட்டு இறையவன் கலுபதி என்ற கலீபா யார்? என பல வினாக்கள் எழுகிறது

கொற்கை

கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுக்கு வருகை தந்த கிரேக்க கடல்ப்பயனி தாலமியின் குறிப்பில் கொல்கய் என்ற கொற்கை ஒரு வணிக கேந்திரம் எனக் குறிப்பிடுகிறார், அவரின் வரைப்படத்தின் மூலம் அது கீழக்கரைதான் என்பதை அறிந்து கொள்ளலாம். அதே நூற்றாண்டில் ரோம கடற்பயன குறிப்பான பர்புளுசில் கோல்ச்சோஸ் (கொற்கை) என்ற கிழக்கு கரை துறைமுகம் பாண்டிய முத்து வர்த்தகத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது, பர்ப்புளுஸ் கோடிடும் கொற்கை என்பது கீழக்கரை துறைமுகம்தான் என்பதை ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் எச்.எச். வில்சனும், டச்சு ஆய்வாளர் கிருஷ்டியன் லேசனும் உறுதிப்படுத்துகின்றனர்.

குண்டாறு கடலில் கடக்கும் முகத்துவாரமான கீழக்கரைதான் பண்டைய கொற்கை துறைமுகம் என்றும் பர்ப்புளுஸில் சுட்டிக்காட்டப்படும் கொற்கை எனவும் உறுதிப்பட கூறுகிறார் எச்.எச்.வில்சன். தாமிரபனி ஆறு கடலில் கடக்கும் முகத்துவாரமான பழைய காயல், இன்றைய கொற்கை ( இது கடலில்லாத நிலப்பகுதியில் இருக்கிறது) ,புன்னைக்காயல் மற்றும் காயல்பட்டினம் பகுதிதான் கொற்கை எனத் திருநெல்வேலி வரலாறு எழுதிய பேராயர் கால்டுவெல் பதிவு செய்கிறார், அவருக்கு முன்பே , தாமிரபரணி ஆற்றுக்கு வெகுமேலே வடக்கே குண்டாறு முகத்துவாரத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் கீழக்கரைதான் பண்டைய கொற்கை என்பதை எச்.எச். வில்சன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சொக்கநாதர் கோவில்

கீழக்கரை சொக்க நாதர் கோயில் கட்டிடகலை அமைப்பு மூலம் அதனை 2000 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் எனக்கொள்ளலாம் என்கிறார் சேது நாட்டு பெரியதம்பி நூலின் ஆசிரியர் கவிஞர் அப்துல் ஹக்கீம், சங்க கால பாண்டியர்களுக்கு பின் கி.பி 1 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை சமன, புத்த சமயத்தை ஒத்த களப்பிரார்கள் பாண்டிய நாட்டை ஆண்டதாகவும், வரலாற்றில் இது இருண்ட காலம் எனவும் கூறப்படுகிறது, களப்பிரார்களை 7 ஆம் நூற்றாண்டில் வென்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் என்பவன் இடைக்கால பாண்டியர் கோத்திரத்தை தோற்றுவித்தான்,

இவனது வரிசையில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த வரகுன பாண்டியனின் காலத்தில் சைவம் தலைத்தோங்கியது, பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் இடம்பெற்ற சைவ சமய வேதாந்திகள் நால்வரில் ஒருவரும், திருவாசகம், மற்றும் திருக்கோவையர் அருளியவருமான மாணிக்கவாசகர் வெகு மும்முரமாய் சைவ சமயத்தை வளர்த்த காலம், கீழக்கரையில் இருந்து 8 மைல் தொலைவில் இருந்த திரு உத்தரகோசமங்கையில் ஆதி சிதம்பரேசர் என்ற மரகத நடராஜர் ஆலயத்தில் சில காலம் மாணிக்கவாகர் தங்கி இருந்து சமயப்பணி ஆற்றிய வேளை, பாண்டியர்களின் வர்த்தக கடல்துறையான கீழக்கரையில் மாணிக்கவாசகரின் முயற்சியால் மன்னன் வரகுண பாண்டியனால் 9 நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது தான் கீழக்கரை சொக்கநாதர் கோவில் என்ற மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயம் என்பதாக அறிய முடிகிறது, சொக்க நாதர்கோவில் தளவரலாற்றை அறிவது மூலமும், இந்த ஆலய கட்டட கலை அமைப்பும் அதனை சான்று பகிர்கிறது,

கிருஷ்ண தேவராயர் ஆட்சிகாலமான கி.பி.1517 இல் கீழக்கரை வந்த போர்த்திகீய பயனி துவார்தே பர்போஷா கீழக்கரையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வந்ததாகவும், அங்கே இருந்த பிரசித்திப்பெற்ற ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை புதிய மடாதிபதி பதவியேற்கும் வைபவம் கண்டதாகவும், அதில் பழைய மடத்தலைவர் தன்னை நவகண்டம் கொடுத்து இறைவணுக்கு காணிக்கை ஆக்குவதை பார்த்ததாகவும் தெரிவுக்கிறான். அவ்வாறு நடந்த கோயில் சொக்கனாதர் கோயிலா? ஆய்வுக்கு உட்படுத்தினால் வரலாறு மீட்கப்படலாம் கேரள சாமுத்திரிய நம்பூதிரிகளின் வழக்கத்தை ஒத்த இந்த வைபவமும், நவ்கண்டமும் பற்றி கீழக்கரையில் நடந்ததாக பர்போசா குறிப்பிடுவதை ஏற்பது கொஞ்சம் கடிணமாகத்தான் இருக்கிறது. இந்த குறிப்புகளை எழுதும்பொழுது அவன் நிதானமாக இருந்திருப்பானா?

பள்ளிக் குப்பாயத்தார்

கி.பி 9 ஆம் நூற்றாண்டில் பள்ளிக் குப்பாயத்தார் என்றழைக்கப்பட்ட இஸ்லாமியர்கள், அரேபியர்கள் சோழ மற்றும் பாண்டிய நாட்டில் வாழ்ந்தது குறித்தும் , குதிரை வர்த்தகம் இந்த பகுதியில் நடந்துவந்ததை குறித்தும் மாணிக்கவாசகர் நரியை பரியாக்கிய பாடலின் ஊடாகவும். சிவபெருமான் இஸ்லாமியர்கள் உபயோகப்படுத்துவது போன்ற ஒரு குப்பாயம் அணிந்து வருவதாக குறிப்பிட்டு திருவாசகத்தில் இடம்பெறும் கீழ்காணும் பள்ளிக் குப்பாயத்தார் வென்பா மூலமும் மாணிக்கவாசகர் வாழ்ந்த 8-9 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்கள் பரவி வாழ்ந்த காலத்தை கணக்கிட முடியும்

வெள்ளைக் கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர்

பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும்

பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற் கொண்டு

என் உள்ளம் கவர்வரால் அன்னே என்னும் ….

மாணிக்கவாசகர்

மேலும், பல்சந்த மாலையை ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது அதில் இடம் பெரும் பெரும்பாலான தமிழ் சொற்கள், மாணிக்கவாசகரின் திருக்கோவையர் நூலிலும் இடம்பெறுகிறது, கீழக்கரையான வகுதபுரியின் வாழ்வியலை காதல் உரையாக களவியல் பாடலாக பல்சந்தமாலை தருவதை பார்க்கலாம், சைவம் தழைத் தோங்கிய அந்த காலக்கட்டத்தில், முன்னர் அப்பர், சுந்தரர் எவரும் இஸ்லாமியர்களை குறிப்பிட்டு பாடாத நிலையில் மாணிக்கவாசகர் மட்டுமே பள்ளிக் குப்பாயத்தார் குறித்தும், வென்னிற ஆடை, குதிரை வணிகம் ஆகியவற்றை கோடிடுகிறார், களவியல் குறித்த நூலான திருக்கோவையரை படைத்திருக்கிறார், செங்காரத்தெரு குளக்கரை அருகே கீழக்கரை சொக்கனாதர் கோயிலை கட்டி முடித்திருக்கிறார், கீழக்கரைக்கு வெகு சமீபமாக உள்ள உத்தரகோசமங்கையில் வாழ்ந்து, மன்னன் வரகுன பாண்டியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஆக பல்சந்த மாலையை ஒப்பீட்டளவில் மாணிக்கவாசகர் வாழ்ந்த காலக்கட்டத்தில் இயற்றப்பட்டது என்பதுடன், திருக்கோவையர் மற்றும் திருவாசக தமிழ் இலக்கிய வழக்கு இதனுடன் பொருந்துகிறது. காதல் உரை எழுதுவதிலும் மாணிக்கவாசகர் வித்தகர் என்பதை திருக்கோவையரில் அவரின் பாடல்கள் மூலம் அறியமுடிவதால், அதே போன்ற நூலான களவியற் காரிகை என்ற நூலில் இடம் பெறும், அதே போன்ற பாடலை ஏன் மாணிக்க வாசகர் எழுதியிருக்க கூடாது?

முத்து வர்த்தகம் பற்றியும், சொக்கநாதர் கோயிலுக்கு கொடையாக வழங்கப்பட்ட மாயாகுளம் கிராமப் பகுதிகளையும் அதன் எல்கைகள் குறித்தும் சொக்கனாதர் கோயிலில் இருக்கும் கி.பி. 1525 இல் வி்ஜய நகர பேரரசின் சக்கரவர்த்தி கிருஷ்ன தேவராயருக்கு பின் பதவியேற்ற மன்னன் அச்சுத நாயக்கர் காலத்திய கல்வெட்டின் மூலம் அறிய முடியும். கோயிலின் தொன்மை குறித்து ஆராய்ந்தால் இது களப்பிரார்கள் காலத்தில் இங்கு வாழ்ந்த சமன, மற்றும் புத்த சமய மக்களுக்கான குளக் கரையோர வேதாந்த மடமாகவும் 2000 வருட பாரம்பரியம் கொண்டதாகவும் இருக்க வாய்ப்புள்ளது, சமன அல்லது புத்த சமயத்தாரான சகரர் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் மரித்தார் என்பதற்கு சான்றான இவரின் கல்லறை கல்வெட்டு இந்த கோயிலுக்கு பின் பகுதியில் எஸ்.வி.எம் காட்டுப்பள்ளி தோட்டத்திற்கு அருகே இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. புத்தரின் தாயாரான மாயாதேவியின் பெயரில் அமைந்த மாயாகுளம் இந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ளதாலும், மாயாகுளத்தை ஒட்டிய கிராமங்கள் இக்கோயிலுக்கு கொடையாக வழங்கப்பட்டதை கோயில் கல்வெட்டு குறிப்பிடுவதால் அவ்வாறு எண்ன முடிகிறது, மேலும் போர்ச்சிகீயர்கள் இந்தப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கீழக்கரை கடல் பகுதியில் சங்கு குளிப்பவர்கள் வசிக்க சேதுபதி அரசரால் இந்த மாயா குளம் கிராமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும்டச்சு ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.

பல்சந்த மாலையில் இஸ்லாமியர்களையும், கீழக்கரையையும் பின்னனியாக கொண்டு காதலர் உரை எழுதியவர், அதே காலக்கட்டத்தில் பாண்டி நாட்டில் வாழ்ந்த இஸ்லாமியர்களை குறிப்பிடும் பள்ளிக் குப்பாயத்தார் பாடலை தந்த இஸ்லாமியரல்லாத சைவ சமய குரவரில் ஒருவரான மாணிக்க வாசகரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? இல்லையெனில் அவரை போன்ற புலமை பெற்ற ஒருவராக இருக்கலாம் அல்லது பல்சந்த மாலை முற்காலத்தில் வகுதை என்றழைக்கப்பட்ட பாக்தாத் மற்றும் தமிழர்களால் வச்சிர நாடு என்று கூறப்பட்ட மொசபடோமியாவின் சிறப்பை கூறுகிறதா?

தொடரும்…..

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *