வகுதை கரையினிலே.. பாகம் 10 எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

10 ஆம் பாகம்…. கீழக்கரை வரலாற்று ஆய்வு

வைகையம்பதி என்பதுதான் வகுதை என்று மருவியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்படி மருவியதற்கான வாய்ப்பு தெளிவாகத்தான் இருக்கிறது… மேற்குத் தொடர்ச்சி மலையில் ஊற்றெடுக்கும் வைகை நதி தேனி, மதுரை மாவட்டங்களை கடந்து, முகவை பெரிய கம்மாய் மற்றும் சக்கர கோட்டை கம்மாய்களில் நிரம்பி,ததும்பி ஆற்றுக்கிளைகளாக பிரிந்து , பால்கரை , திருப்புல்லானி, கோரைக்குளம், மேலப்புதுக்குடி, வழியாக , இன்று சிதிலடைந்த நிலையில் இருக்கும் ஆயிரம் ஆண்டு பழமைமிக்க வைனவத் தளமான சேதுகரை அகஸ்தீஸ்வரம் ஸ்ரீனிவாச பெருமாள் சின்னக் கோயிலுக்கு மேற்கே 1 கி.மி. தூரத்தில் அலைவாயிலில், முகத்துவாரம் ஊடாக மன்னார் வளைகுடாக் கடலில் கடக்கிறது. இந்த நதிக்கரை ஒட்டிய கீழக்கரை பகுதி வைகையம்பதி என்று அழைக்கப்பட்டு பின் வகுதாபுரி என உருமாறி இருக்கலாம்.

9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சோழர்களிடம் வசம் இருந்த பாண்டிய நாட்டை இலங்கை மன்னன் 5 ஆம் காசிபனின் உதவியுடன் மீண்டும் மீட்ட பாண்டிய மண்னன் 3 ஆம் இராசசிம்மன் ஆட்சிக்கு பின்பு பாண்டிய நாட்டில் பதவியில் அமர்ந்த அவனின் மகன் முதலாம் வீரபாண்டியனை வீழ்த்த விரும்பிய சோழப் பேரரசன் முதலாம் இராஜ இராஜ சோழனின் தந்தையான மண்னன் சுந்தர சோழன் தனது மூத்தமகனும், பட்டத்து இளவரசனுமான ஆதித்த கரிகாலனுடன் சேர்ந்து வீரபாண்டியனுடன் கடும் யுத்தத்தை தொடங்கினான்.

சிவக்ங்கை மாவட்டம் , சேவூர் பகுதியில் நடந்த இந்த போரில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு, குற்றுயிரும், குலையுயிருமான வீரபாண்டியன் , பிரான் மலைப்பகுதி வழியே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்குள் சென்று ஒளிந்து கொண்டான். பின் தனக்கு யானைப்படைகள் தந்து உதவிய காசிப மன்னனின் இலங்கை தேசத்துக்கு கடல் வழியே தப்பிக்க விரும்பி நமது சேதுகரை பகுதியை ஒட்டிய, வைகை நதிக்கரையோரம், அடர்ந்த மான்குரோவ் காடுகள் நிறைந்த பிச்சாவலசை பகுதிக்கு வந்து காத்திருந்த வீரபாண்டியனை , கி.பி. 962 ஆம் ஆண்டு ஒரு இரவில் , இராஜ இராஜ சோழனின் சகோதரனும், சிங்கம் போல் போர் புரியும் ஆற்றல் மிக்கவனுமான ஆதித்த கரிகாலன் வெட்டி வீழ்த்தியதாக ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

சோழர்கள் வரலாறு , சேவூர் போர் மற்றும் வீரபாண்டியன் வீழ்ந்த வைகை கரைப் பகுதியை பற்றி விவரிக்கும் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினம் அடையாளமிடும் இடஙகள் இந்தப் பகுதியாகத்தான் இருக்கலாம் என ஆய்வின் மூலம் கருதமுடிகிறது.

pakkirappசேதுகரைக்கும்,கீழக்கரைக்கும் இடையே அமைந்திருக்கும் அசல், வென்னை, நெய் மற்றும் கலப்பிடமில்லாத கெட்டித் தயிருக்கு பிரசித்தி பெற்ற காஞ்சிரங்குடி கிராமத்தின் பெயரில் இருக்கும் காஞ்சி என்ற சொல் கூட சோழர்கள் மிகவும் விரும்பும் பெயரிலேயே இருப்பதும் ஆராய்ச்சிக்கு உரியது, சோழர்களின் தலை நகர்களில் ஒன்றான காஞ்சிபுரமும், சோழர்கள் வசம் இருந்த கேரளாவின் காஞ்சிரப்பள்ளி நகரமும், கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட பேரரசன் இராஜேந்திர சோழன் காலத்தில் ஷியாம் தேசம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்தை தன் வசம் கொண்டு வந்து அங்கே காஞ்சனபுரி என பகுதிக்கு பெயரிட்டதலிலும் , வீரபாண்டியனை தலை வாங்கிய கீழக்கரை பகுதியில் காஞ்சிரங்குடி என்று ஒரு ஊரின் பெயர் அமைந்திருபதில் சோழர்களின் ஆதிக்கம் இந்த பெயரில் எங்கோ இருப்பதாகத்தான் தோன்றுகிறது, காஞ்சிர மரங்கள் அடர்ந்து இருந்ததால்தான் இந்தப்பெயர் வந்ததாக காஞ்சிரங்குடி மக்கள் சொல்கிறார்கள்… ஆனால் நான் அங்கு சென்று காஞ்சிர மரத்தை தேடி அலைந்ததில் ஒன்று கூட சிக்கவில்லை, களைத்துப்போய் அங்கிருந்த ஒரு 200 வருட பழைமயான ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து சீனிகாக்காவுடன் சூடான பஜ்ஜியும், ஸ்ட்ராங்கான டிக்காஷனுடன் கூடிய தேனீரும் குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வீரபாண்டியனுக்குப்பிறகு சோழர்கள் வசம் முழுமையாக வந்த கீழக்கரைப்பகுதி கீழச் செம்பி நாடு என அழைக்கப்பட்டது, அதன் பிறகு பாண்டியர்கள் சோழர்களின் கண்காணிப்பில் திறை செலுத்தி பேருக்கு தம் பெருமையை காத்து பாண்டி நாட்டை அடிமை ஆட்சி புரிந்து வந்தனர். அதற்கு பின்புதான் கீழக்கரையில் செம்பிக் கோட்டை கட்டப்பட்டதாக அறியமுடிகிறது.

vagu667

செம்பிக்கோட்டை கீழக்கரை மீன்கடைத்தெருவை ஒட்டிய கடலோரத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் , இன்றைய கடற்கரை பள்ளிக்கு அருகில் பழைய குத்பா பள்ளியை ஒட்டிய பகுதியில் பிரதானக் கோட்டை அமைந்திருக்கலாம், சிதிலடைந்த கோட்டையின் எச்சங்கள் மூலம் இதனை கண்டறிய முடிகிறது, 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த அரேபிய சோணகர்களின் விரும்பியதற்கினங்க செம்பியன் மாதேவியார் தனது கோட்டையை ஒட்டிய பகுதியில் இன்றைய பழைய குத்பா பள்ளியை அமைக்க நிலம் வழங்கி இருக்கலாம் என கணக்கிட முடிகிறது, ஆக பழைய குத்பா பள்ளி 9 ஆம் நூற்றாண்டில் மத்தியப்பகுதியில், சோழ மன்னன் சுந்தர சோழன் ஆட்சியில், செம்பியன் மாதேவியின் அனுசரணையுடன் இங்கு வாழ்ந்த சோனகர்கள் என அழைக்கப்பட்ட அரேபிய, எமனிய இஸ்லாமியர்களால் கட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.vagu775vagu

சோழர் காலத்து செம்பியன் மாதேவியாரின் கடற்கோட்டை இருந்த செம்பி நாடான கீழக்கரையில் , ஏர்வாடி பகுதியிலிருந்து செங்கழல் நீரோடை பகுதி வரை நீண்ட மலை போல் கோட்டை சுவர் எழுப்பபட்டு , பின் ஏற்பட்ட கடற் கோளினால் கடற்கோட்டையின் சில பகுதிகளுடன் சேர்ந்து கோட்டை சுவரும் கடலில் மூழ்கி இருக்கலாம் , கிட்டத்தட்ட 300 மீட்டர் வரை கடல் நிலத்துக்குள் உள் வாங்கியதால் கோட்டையின் பிரதான வாயில் உள்பட நீண்ட கோட்டை சுவரையும் காவு கொண்டிருப்பதாக இன்று கடலுக்குள் புதைந்திருக்கும் பாறைகள், படகுகளின் போக்குவரத்து தடங்கள், குறைந்த ஆழம் கொண்ட கடல், கடந்த காலங்களில் கடலுக்குள் வளர்ந்திருந்த தென்னை மரங்கள், கடல் அரிப்பினால் அருகி வரும் கரையோர தென்னந்த்தோட்டங்களின் நிலப்பகுதி ஆகியவற்றை வைத்து அளவிட முடியும், 19 ஆம் நூற்றாண்டில் கீழக்கரையில் பிறந்த மூத்தவர்கள் சிலர், செம்பிக் கோட்டை கடல் சீற்றத்தால் கடலுக்குள் புதைந்த கதையை செவி வழியாக தம் முன்னோர் கேட்டு சொன்னதாக இன்றும் செய்திகள் இருக்கிறது.vagu966

சோழர்கள் பாண்டிய நாட்டை கைப்பற்றி 300 ஆண்டுகள் கடந்து கி.பி.1220 களில் பாண்டிய குலத்தில் உதித்த முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், பலவீனமான முடிவுகள் எடுக்கும் சோழப் பேரரசன் மூன்றாம் ராஜராஜனை தனது சிறிய படைகளை வைத்து துவம்சம் செய்து மதுரையை மீட்டது மட்டுமின்றி, சேர நாடு, சோழ நாடு, போசாளர் தேசம் என்ற (ஆந்திரா, கர்ணாடகா பகுதியை உள்ளடக்கியது) என அனைத்தையும் வெற்றி கொண்டான், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பிரமாண்டமாக்கினான், கோயிலின் கிழக்கு கோபுரம் இவன் காலத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது. 1978 இல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இயக்கத்தில் , அவரே கதா நாயகனாக, மாறவர்மன் சுந்தர பாண்டியன் கதாப்பாத்திரத்தில் நடித்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது, பிறகு அரசியலில் கவனம் செலுத்தி தமிழக முதல்வர் ஆனதால் அதுவே அவரின் கடைசிப்ப்படமாகவும் அமைந்து விட்டது..⁠⁠⁠⁠   தொடரும்…..

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *