298 பேருடன் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்!

malaysian-airlines-wreckage-rebels-jpegகடந்த மார்ச் 8-ம் தேதி  239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவிற்கு புறப்பட்ட  எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போய், இன்று வரை அதன் விபரம் தெரியாமல் மலேசியா அரசாங்கமும் பயணிகளின் குடும்பங்களும் தவித்திருக்கும் நிலைமையில் வியாழன் அன்று ஹாலந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், ரஷ்ய எல்லையில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது.இது, ஏவுகணைத் தாக்குதல் என்று உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கேராஷென்கோ தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்யும் விதமாக, எம்.எச்.17 விமானத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு மலேசிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கோலாலம்பூருக்குப் புறப்பட்ட போயிங் 777 ரக விமானத்தில் 3 குழந்தைகள் உட்பட 283 பயணிகளும், விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த 15 பேரும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசிய விமானம் விழுந்ததாக மாஸ்கோவில் உள்ள ரஷ்ய விமானத் துறை வட்டாரங்கள், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும், மலேசிய விமானத்தின் நிலை குறித்து அறிய, துரித நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.கடைசியாக கிடைத்த தகவலின்படி, மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் அரசு உறுதி செய்தது.

malaysian airlinesமலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய கிழக்கு உக்ரைன் பகுதி, கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் ஷக்டார்ஸ்க் நகருக்கு அருகில் இருக்கிறது.ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டுகிறது.ஆனால் மலேசிய விமானத்தை ஏவுகணையால் தாக்கி வீழ்த்தியது உக்ரைன் விமானப் படைதான் என்று உக்ரைன் பிரிவினைவாதத் தலைவர் அலெக்ஸாண்டர் பரோடாய் குற்றம்சாட்டியுள்ளார்.இதன் தொடர்ச்சியாக, பிரிவினைவாதிகளின் குற்றச்சாட்டை மறுத்த உக்ரைன் அதிபர் பெட்ரோ, இத்தகைய செயலை தமது நாட்டு ராணுவம் ஒருபோதும் செய்யாது என்றார்.

கடந்த சில வாரங்களாக, உக்ரைன் ராணுவ விமானங்களை, கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சுட்டு வீழ்த்தி வந்ததாகவும், அவர்களுக்கு ரஷ்ய ராணுவம் ஆயுதங்களை வழங்கி வந்ததாகவும் உக்ரைன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு தாங்கள் உதவவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *