nikkah40

கீழக்கரையில் சீதனமாக‌ பெண்ணுக்கு ஒரு வீடு … பெற்றோர் நிலை பெரும் பாடு

கட்டுரையாளர்கள்.  கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் mmk mohidee

கீழக்கரை என்றாலே கோடீஸ்வரர்கள் வாழும் பூமி என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

வெளியூர் நண்பர்கள் நம்மிடம் கீழக்கரையில் அந்த தொழிலதிபரை தெரியுமா? இந்த குடும்பத்தை தெரியுமா என்று பணக்காரர்களை பற்றியே விசாரிப்பார்கள்!! உலகம் அவர்களை தான் நம்புகிறது!!! கீழக்கரைக்கு அவர்களால் எந்த நன்மையும் இல்லை என்று நான் சொல்ல வில்லை, பாமரன் புலம்புகின்றான்!

அன்று முதல் இன்று வரை கீழக்கரையில் பெண்கள் குடி தண்ணீருக்காக அல்லாடும் சூழ்நிலை தான் உள்ளது!! இதை போக்க எந்த சீமானும் முன் வர வில்லை!!!

ஊரில் பாதி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் என்பது வெளி உலகம் அறியாத ஒன்று, இதில் கணவரால் கைவிடப்பட்டோரும் அடங்கும். கொடுமை என்னவென்றால் தன மனைவி மக்களை பற்றி கவலைப்படாமல்,பொறுப்பில்லாத‌ கணவன்மார்களால் சிரமபடும் பெண்களின் நிலைமை அந்தோ பரிதாபம்!!!

இவைகள் அனைத்தும் நான் கற்பனையாக‌ சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம்.. ஒரு பள்ளியின் தாளாளர் என்ற முறையில் என் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு சிரமப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர், எத்தனை பேர் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் உதவி கேட்கின்றனர் என்பது வேதனையான விஷயம்.. எங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கும் வசதியற்ற ஏழை மாணாக்கர்களுக்கும், தகப்பன் இல்லாத குழந்தைகள் மற்றும் தந்தை நோய்வாய்பட்டு சிரமப்படும் குழந்தைகளுக்கும் கல்வி உதவி வழங்கி வருகிறோம்.

ஆனால் இதையும் தாண்டி, பெற்ற குழந்தைக்காக கூட சம்பாதிக்காமல் திரியும் கணவன்மார்களின் நிலையறிந்து கடன் வாங்கியாவது பிள்ளைகளை படிக்க வைக்க தவிக்கும் தாய்மார்கள் நிலை சொல்லில் அடங்காது.
பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கவே இவ்வளவு பாடாக உள்ளது, இதில் உயர்கல்வி வேறு படிக்க வைக்க முடியுமா? என்ற பெற்றோரின் வேதனைகளாலே பெண் கல்வி பாதியில் நின்று போனது…!

அடுத்தபடியாக, பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களின் தலையில் இடியாக விழுவது மகளுக்கு சீதனமாக கொடுக்க வேண்டிய வீடு ! அதுவும் இரண்டு மாடிக்கு குறைவு இல்லாமல் கட்டப்பட வேண்டும்!! வீடு என்பது கண்டிப்பாக எல்லாருக்கும் வேண்டும் தான். அது கணவன் வீட்டில் மனைவி தங்கினாலும், மனைவி வீட்டில் கணவன் தங்கினாலும் வீடு அவசியமே! ஆனால் பெண் வீட்டில் கணவர் இருப்பதால் பெண்ணின் பெற்றோர் மூலம் அப்பெண் பாதுகாப்பு பெறுகிறாள் என்று காரணம் காட்டி வீடு கொடுக்க வேண்டியது பெண் வீட்டாரின் கடமை என்று பொறுப்பு சாட்டுகின்றனர்.

ஆனால், இன்று சில பெண்கள் கல்யாணம் ஆகி புது வீடு கிடைத்தவுடன் முதல் வேளையாக தாய் தந்தையரை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார்கள் என்பது வேறு கதை!!! ஓசி வீட்டில் வாழ்கிறோம் என்பதை மறந்து மானங்கெட்ட மருமகன் அந்த வீட்டில் செய்யும் அதிகாரமும் ஆதிக்கமும்… அம்மாடியோ ! எல்லையே இல்லை…!! இவ்வளவு தொந்தரவுகளை தரும் மணமகன் இக்காலத்திலும் வீட்டிற்கு மாத செலவுக்கு இன்னும் ரூ 2000ம் தருபவர்கள் உண்டு இவர்களின் மாத சம்பளம் ரூ50 ஆயிரத்தை தாண்டும் குழந்தை பிறந்தவுடன் மனைவிக்கு இன்கிரிமெண்ட் போன்று ரூ 1000 அதிகபடுத்தி ரூ3000 தருபவர்களும் உண்டு. தன் மனைவிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை என்றாலும் இன்றைய உலகின் வாழ தேவையான பொருளாதரத்தை மனைவிக்கு அளிக்க வேண்டியது கடமையாகும்

ஊரில் ஓட்டு வீட்டில் வசிக்கும் வரை கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தவர்கள் லட்ச கணக்கில் செலவு செய்து மாடி வீடு கட்டியவுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விடுகின்றனர், இன்னும் சில பேர் பெருமைக்காக மூன்று மாடி கட்டி ஒரு மாடிக்கு கூட வசிப்பதற்கு உறவுகள் இல்லாமல் பாழடைந்த நிலையில் வாழ்கின்றனர், சிலரின் பங்களாக்களில் வேலை ஆட்களே ஆண்டு முழுவதும் அனுபவிக்கின்றனர் ! இதற்காகவா இவர்கள் கஷ்டப்பட்டார்கள் ? இந்த நிலைமைக்கா அவசர அவசரமா திருமணம் செய்து வைத்தார்கள் !!

மணப்பெண்ணிடம் வரதட்சனை பணத்துக்கு பதில் நகையாகவும், வீடாகவும் வாங்கி பாவத்தை சம்பாதிக்கும் ஆண்களே! சற்று சிந்தியுங்கள் நீங்கள் மன்னிக்க முடியாத பெரும் பாவம் செய்கிறீர்கள் என்று!! அதேசமயம் மணப்பெண் மணமகனிடம் தான் விரும்புவதை திருமண மஹராக பெறுவதற்கு உரிமை உள்ளது, அந்த உரிமையை வீடாக கேட்டு பெறலாம்..! என்னுடைய கருத்துப்படி ஒரு ஆண்மகன் தன் பணத்தில் வீடு கட்டி அந்த வீட்டையும் மனைவி பெயரில் பதிந்து மனைவியுடன் வாழ்வதே சிறந்தது என கூறுவேன்.

பெற்றோர்கள் படும் துன்பத்திற்காக தங்கள் வாழ்வை இழந்த வலி மிக்க இளம்பெண்கள் இன்று அதிகம். திறமை மிக்க பெண்கள் “கட்டாயக்கடமை” என்ற பெற்றோர்களுக்கு சுமையாக இருப்பதை விட தங்கள் அணைத்து சந்தோசங்களை தியாகம் செய்துவிட்டு திருமண என்ற பந்தத்தை சுமையாக சுமப்பவர்கள் தான் எத்தனை எத்தனை …. என்ன காரணம் ?? 18வருடம் வளர்த்த பெற்றோர்களுக்கு கூடுதலாக 3 ஆண்டுகள் வளர்ப்பதற்கு என்ன கஷ்டம் வந்துவிட போகிறது ???

திருமணம் என்பது பெற்றோர்களின் கடமைதான் சுமை இல்லை பள்ளி முடிப்பை நிறைவு செய்யும் முன் மணப்பெண் மனம் அறியாமலே திருமணம் செய்யலாமா ??? ஏன் இந்த தண்டனை அதுவும் பெண்களுக்கு மட்டும் ??? ஆணும் பெண்ணும் சமம் என்று இஸ்லாம் சொல்லி தந்ததை மீறும் சமுதாயம் எதை நோக்கி செல்லுகிறோம் …. தண்டனை பெண்ணுக்கு தானா ??

ஆண் அனுபவிக்கவா ?? பெண் என்ன பலிக்கடாவா !! இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நம்மை எதிரியாக பார்க்கும் ஆணாதிக்க சமூகம்!!!

அதே சமயம் பெண்களின் இந்த நிலைக்கு சமுதாயம் தமக்கு அளித்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திய சில பெண்களின் செயல்பாடே காரணம் என்று கூறலாம்! அதே போன்று ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றனர் என்று கூறவில்லை, ஒரு சிலர் செய்யும் தவறுகளாலும் அந்த தவறுகளை வேடிக்கை பார்க்கும் சமுதாய பொறுப்பாளர்களும் இதற்க்கு காரணம் என்று மட்டும் கூற முடியும்.

இந்த இழி நிலையை மாற்ற இளைஞர்கள் முன் வர வேண்டும், எத்தனையோ இளைஞர்கள் தம் குடும்பத்திற்காகவும்,தமது சகோதரிகளின் வாழ்க்கைக்காகவும் அயல் நாட்டில் கஷ்டப்படுகிறீர்கள், இனியும் இந்த துன்பம் உங்கள் வாழ்க்கையில் தொடர வேண்டுமா ? சிந்திப்போம் ! சீர்படுத்துவோம் !!

தீனியா மெட்ரிக் பள்ளி தாளாளர் அத்தீக் இது பற்றி கருத்துathik

கீழக்கரையில் மணமுடிக்கும் பெண் சார்பாக பெறப்படும் வரதட்சனையின் மற்றொரு பரிமாணமாக உருவெடுத்திருக்கும் மணப்பெண் வீட்டார் வீடு கட்டி தர வேண்டும் என்று மணமகன் தரப்பில் நிபந்தனையாக வைக்கப்படும் நிலை கீழக்கரையில் உள்ள இஸ்லாமிய சமூகத்தில் அதிகளவில் உள்ளது.

இந்நிலை மாற்ற இது பற்றிய விவாதத்தை முதலில் தொடங்க வேண்டும். இதனை உடனடியாக மாற்ற முடியாது. பல ஆண்டுகள் பிடிக்காலம் எப்படி வரதட்சனை வாங்குவது படி படியாக‌ கீழக்கரையில் கணிசமாக குறைந்துள்ளதோ அது போன்று இதற்கும் தீர்வு ஏற்படும்.

 

அதற்கு முதலில் நாம் அனைவரும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கான கல்வியை அனைவருக்கும் பரவலாக்க வேண்டும். இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெற்றாலே இவை குறைந்து விடும். இடம் வாங்கி வீடு கட்டி தருவது என்பது எதிர்காலத்தில் கீழக்கரை நகரில் பெரும் சிக்கலாக உருவெடுக்கும் எனவெ இந்நிலை மாற ஜமாத்தார்கள்,சமூக ஆர்வலர்கள் அனைவரும் விவாதத்தை தொடங்கி நல்லதொரு தீர்வு காண வேண்டும் .

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *