keelakarai

கீழக்கரை நகராட்சி… வருமா நல்லாட்சி .. கட்டுரையாளர்கள்: முஹைதீன் இப்ராஹிம் மற்றும் கீழை ராஸா

கட்டுரையாளர் ராஜாக்கான் என்ற கீழை ராஸா 2011ம் ஆண்டு எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி

பெண்களுக்கு ஆட்சி அதிகாரம் என்பது கீழக்கரைக்கு புதிதில்லை, 11 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கீழக்கரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டுள்ளது என்பது வரலாற்று உண்மை.

ஆம் 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய சகோதர்கள் மூவர் தங்களின் கருத்து வேறுபாடு காரணமாக, பாண்டிய தேசத்தை மூன்று பாகங்களாக பங்கிட்டு, கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தென் மதுரையை விக்கிரபாண்டியன் ஆண்டு கொண்டிருந்த வேளை, அது சோழ மன்னர் ராஜராஜ சோழனால் கைப்பற்றப்பட்டு அவர் மனைவியரில் ஒருவரான செம்பிமாதேவியிடம் அதை ஒப்படைத்து, செம்பிமாதேவியே கீழக்கரையை சில வருடங்கள் ஆண்டு வந்தார் என்பது வரலாறு. அதனாலேயே கீழக்கரைக்கு ”செம்பி நாடு” என்றொரு பெயரும் உண்டு என்பது நம்மில் பலர் அறிவர்.

இப்படி வரலாறு முதல் கொண்டே கீழக்கரையில் பெண்கள் ராஜ்யம் நிகழ்ந்தாலேயோ என்னவோ இன்றும் அது விட்டகுறை தொட்ட குறையாக தொடரத்தான் செய்கிறது…
கீழக்கரை சுற்று வட்டாரத்தை பொருத்த மட்டும் பெரும்பாலான வீடுகளில் பெண்களின் ராஜ்யம் தான். அதற்கு காரணம் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடு வேலைகளுக்கு சென்று விடுவதால், பெண்களே வீட்டை நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தம். பெரும்பாலானோர் அந்தப் பொறுப்பை சிறப்பாகவே செய்கின்றனர்.

வீட்டை சிறப்பாக ஆட்சி செய்யும் எங்களால் ஊரை ஆட்சி செ முடியாதா என்ன? என்பது தான், இன்றைய இளம் பெண்களின் விவாதம்.

முடியும்..! கண்டிப்பாக முடியும்..! அவர்கள் சுயமாக செயல்படும் பட்சத்த்தில் அது முடியும் …!ஆனால் நமதூரில் நடப்பது என்ன? உதவி சேர்மனாக இருந்து கொண்டு சேர்மனை இயக்கும் எண்ணத்தில் தான் ஆண் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள்.இந்த நிலை மாற வேண்டும். தன்னிச்சையாக, துணிச்சலுடன் திறம்பட செயல்படும் தகுதியுள்ள ஒரு பெண்மணியை நாம் முன்னிருத்த வேண்டும்.

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு ஏவல் விடுவதை விட, களத்தில் சென்று பணியாற்றும் திறம் படைத்த பெண்ணை இனம் காண வேண்டும்.

ஒரு அன்னையாக, ஆசிரியையாக, அன்னை தெரசாவாக, கனிவான, கண்ணியமான, ஒழுக்கமான, ஊரின் நடப்பறிந்தவராக, பொதுவாழ்க்கையில் கணவனின் இடையூறு இல்லாதவராக, தேவைப்பட்டால் சில விசயங்களில் அல்லிராணியாக செயல்படக் கூடிய ஒருவரை அடையாளம். காண ஆண்களில் செயல் படுத்த முயலாத , முடியாத “பொது வேட்பாளர்” முறையை பெண்களிலாவது செயல்படுத்துவோமா..? என்ற கேள்வியுடன்…

கட்டுரையாளர் இஸ்லாமியா பள்ளிகளில் தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் எழுதியுள்ள ஆக்கத்தில்..

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நேரிடையாக சேர்மனை தேர்ந்தெடுக்காமல் கவுன்சிலர்களே சேர்மனை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்ற படுகிறது இந்த நடைமுறை நமக்கு புதிதல்ல, ஏற்கனவே 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறையே என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பலர் போட்டி போட தயாராகி விட்டனர். சிலர் இயக்கங்கள் சார்பாகவும், சுயேச்சையாகவும் களம் இறங்க உள்ளனர், பொது தொண்டு என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் போட்டியிட ஆசை படுகின்றனர். ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் போட்டியிட உரிமை உள்ளது ஆனால் அதேசமயம் கடந்த காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு மக்களுக்காக பணியாற்றினார்கள் என்பதை நாம் சிறிது ஆராய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தங்களது வார்டுகளில் ஒரு நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்டும், பணத்திற்கு ஆசைபட்டு விலை போகக் கூடியவராக இல்லாதவராகவும், பொது நலன் மிக்கவராகவும் வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுத்தாலே போதும் நாம் ஒரு நல்ல தலைவரை பெற முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் சேர்மன் பதவிக்கு போட்டியிட உள்ளவர்கள் கோடி கணக்கில் செலவு செய்ய தயாராகி விட்டனர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திலும், தங்களது கடன்களை ஒரே மாதத்தில் அடைத்து விடலாம் என்ற கனவில் நிறைய பேர் களத்தில் இறங்கி உள்ளனர், இதை மக்கள் உணர்ந்து தான் வாக்களிக்கும்

கவுன்சிலர் உண்மையான உள்ளத்தில் போட்டியிடுகிறாறா என அறிந்து வாக்களிக்க வேண்டும், ஒவ்வொரு வார்டுகளுக்கும் அந்தந்த வார்டு உறுப்பினர்களே பொறுப்பாளர்கள் ஆவார். மக்கள் தங்களது பிரச்சனைகளை கவுன்சிலர்களிடம் முறையிட்டு தீர்வு காண வேண்டுமே தவிர எதற்கெடுத்தாலும் சேர்மனை எதிர்பார்த்து கிடப்பதால் கவுன்சிலர்கள் தங்களது கடமைகளை தட்டி கழித்து கமிஷன் வாங்கிட்டு சும்மா இருந்து விடுகிறார்கள். நகராட்சி தலைவர் செய்யும் ஊழல்களுக்கு உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பதால் தான் நகராட்சித் தலைவரால் தான்தோன்றித்தனமாக செயல்பட முடிகிறது. மக்களும் கவுன்சிலரை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு நகராட்சி நிர்வாகத்தை குறை சொல்லி திரிவார்கள்.

மக்கள் பணி செய்வதற்கு அரசியல் கட்சி சார்ந்தவர், இயக்கம் சார்ந்தவர், சுயேச்சை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது, நல்லது செய்பவர் எந்த கட்சியில் இருந்தாலும் செய்வார் ஆனால் அவர் நல்லவராக இருந்தால் போதும். கடந்த காலங்களில் இதை நாம் அனுபவித்து இருக்கிறோம்.

தற்போது நகராட்சி பதவியை கைப்பற்றி பல கோடி சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பரவலாக பலர் மத்தியில் உள்ளது அதனால் பல லட்சம் செலவு செய்து பல கோடி சுருட்டலாம் என்று சிலர் தயாராகி விட்டனர். மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதை முதலில் நிறுத்த வேண்டும், தங்களது வார்டு கவுன்சிலர் பணம் வாங்கிக் கொண்டு சேர்மனை தேர்ந்தெடுப்பதை தடுக்க வேண்டும், தமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று பாகுபாடு பார்க்காமல் ஊருக்கு நல்லது செய்பவர் யாராக இருந்தாலும் ஆதரிக்க முன் வர வேண்டும். கடந்த காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் யார் மக்கள் பணியாற்றினார்கள், யார் மக்கள் பணி செய்யாமல் ஊழல் பணத்தை பங்கு போட்டு கமிஷன் வாங்கி மக்களுக்கு துரோகம் செய்து ஊர் சுற்றினார்கள், என்பதை உணர்ந்து, இனி படித்தவர்கள் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,

அதே சமயம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பட்சத்தில் அரசு நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கும் மற்றும் அரசாங்க ஆதரவோடு மக்களுக்கு பயன்படும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது நிதர்சனம். இவ்வாறு எழுதியுள்ளார்

நஜீம் மரிக்கா என்பவர் எழுதியுள்ள ஆக்கத்தில்,,

கீழக்கரை நகரத்தில் முக்கிய பிரச்சனையாக திகழ்வது குடிநீரும்,சுகாதாரமும்தான் இன்றுவரை இதற்குநிரந்தரமான‌ தீர்வு காணப்படவில்லை.இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் திமுக ஆட்சிகாலத்தில் அனுமதிக்கப்பட்ட‌ பாதாள சாக்கடைதிட்டம் , கடல்நீரை குடிநீராக்கும் தீட்டம்,உள்ளிட்ட கிடப்பில் கிடக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

அதோடு மக்கள் இம்முறை தாங்கள் தேர்ந்தெடுக்கும் கவுன்சிலர்களில் சரியான தலைவரை தேர்ந்தெடுப்பவர்களுக்க்கு ஓட்டளிக்க வேண்டும்.

சென்ற முறை ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை சேர்ந்தவரை மக்கள் சேர்மனாக தேர்ந்தெடுத்தார்கள் ஆனாலும் பாதாள சாக்கடைதிட்டம் , கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை நிறைவேற்றப்படவில்லை எனவே

எதிர்கட்சியா ஆளுங்கட்சியா சுயேட்சை என்பதை காட்டிலும் எந்த கட்சியாக இருந்தாலும் யார் செயல்படகூடிய தலைவர் என்பதை அடையாளம் கண்டு அவரை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய வேண்டும். எனவே மக்கள் தகுயான கவுன்சிலர்களை தேர்வு செய்வதில்தான் கீழக்கரை நகராட்சியின் எதிர்காலம் அமைந்துள்ளது இவ்வாறு எழுதியுள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *