klk view9

கீழக்கரை வரலாற்று குறிப்புகள்

கீழக்கரை வரலாற்று குறிப்புகள்
கீழக்கரை – ஓர் அறிமுகம் ஆக்கம் – எம்.எம்.எஸ்.செய்யது இபுறாகிம் – ஸ்டேசன் மாஸ்டர் (ஓய்வு)- உதவி செயலர்- இஸ்லாமி பைத்துல் மால்,

klk omarகீழக்கரை இராமநாதபுரம் – கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை, உப்பங்கழிகளுக்கிடையே ஊடுருவிப் பாய்கிறது. இராமநாதபுரத்திலிருந்து பதிமூன்று கிலோ மீட்டர் கடந்ததும் “ஜில்” என்ற தென்றல் காற்று மேனியைத் தழுவுகிறது. சாலை இருமருங்கும் அமைந்துள்ள தோப்புக்களிலிருந்து பச்சை பசரேன்ற தென்னை ஓலைகள் வருக வருக என்று வரவேற்கின்றன. சோலைத் தென்றல் தரும் மயக்கத்தில் மேலும் மூன்று கிலோ மீட்டர் தூரம் கணப்பொழுதில் மறைகிறது. வனப்பு மிக்க வள்ளல் சீதக்காதி சாலை கண்முன் விரிகிறது.

klkjumma
பழமையான நடுத்தெரு குத்பா பள்ளி

“தங்கரதம் வந்தது பூமியிலே, தளிர்மேனி வந்தது தேரினிலே” என இசை வாணர்கள் சிந்து பாட, மரகதத் தோரணம் அசைந்தாட, நல்ல மாணிக்க மாலைகள் ஒளி சிந்த , வள்ளல் சீதக்காதி வலம் வந்த சாலை இதுதானோ என்று எண்ணுவதற்குள்,பொன்னும் மணியும் முத்துக்களும், ரத்தினக் கற்களும், குதிரைகளும் நிறைந்து , வெளி நாட்டவர் உலாவந்த சரித்திர கால அங்காடிகளும், பண்டகசாலைகளும் காட்சி அளிக்கின்றன.. கலங்கரைவிளக்கு கண்சிமிட்டி வரவேற்க, ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஓயாது உறங்காது வந்தாரை வரவேற்றுவந்த கடல் அலைகள் விருந்தினர்களுக்கு முகமன் கூறும் காட்சி யாரைத்தான் கவரவில்லை? ஆம் இது தான் கீழக்கரை..

klk palaya
பழங்கால கடற்கரை பள்ளி

மன்னர்கள், மகுடாதிபதிகள் ஒருங்கே பாராட்ட, புரவலர்கள் போற்ற, புலவர்கள் பாட, காலத்தால் அழியாமல், மாசு படாமல் நல்லதோர் பாரம்பரியத்தை நாடெங்கும் அறியும் வண்ணம் திகழ்ந்து, வள்ளல்களால் வளம்பெற்று , வணிகர்களால் உரமேறி சேது நாட்டின் மாணிக்கமாய் ஒளிர்விடும் பட்டணம் தான் கீழக்கரை. வகுதை, நினைத்ததை முடித்தான் பட்டிணம், தென்காயல் போன்ற சிறப்புப்பெயர்களைத் தாங்கி சரித்திரப் பிரசித்தி பெற்ற கீழக்கரை பல கோணங்களில் ஆராயப்பட்டு , சரித்திர நாயகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது என்பதில் இரு கருத்துக்கள் இல்லைklk odakarai

ஓர் ஊரின் சிறப்பையும், தொன்மையையும் அகழ்வாராய்ச்சி, அரசு ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், நாணயங்கள், இலக்கியப் படைப்புகள், கர்ணபரம்பரைக் கதைகள், பாடல்கள் இவற்றின் மூலம் தான் நிர்ணயிக்க முடியும். அகழ்வாராய்ச்சி ஓர் ஊரின் புராதானத் தன்மையைத் தங்கு தடையின்றி வெளிப்படுத்தும் சான்று என்பதில் ஐயமில்லை . ஆனால் அகழ்வாராய்ச்சியின் மூலம் மட்டுமே ஓர் ஊரின் தொன்மையையும், சிறப்பையும் அறிய முடியும் என்ற வாதம் ஏற்புடையதல்ல. ஏனைய சான்றுகளையும், திறமையாகக் கையாண்டு ஓர் ஊரின் தொன்மையையும், சிறப்பையும் வெளிப்படுத்த முடியும். கீழக்கரை பற்றிய ஆய்வுக்கும் இது பொருந்தும். டாக்டர் ஹுசைன் நைனார் முதல் பல பேராசிரியர்களும், சரித்திர மேதைகளும் கீழக்கரையின் புகழ், புராதனத்தன்மை இவற்றை பல மேற்கோள்களைக் காட்டி விளக்கி எழுதியுள்ளனர்.

காய்தல் உவத்தலின்றிச் சொல்லின் கீழக்கரை வரலாறு வள்ளல் சீதக்காதி , மாமேதை சதக்கத்துல்லா அப்பா , கிழவன் இரகுநாத சேதுபதி காலத்திற்கு முன்பிருந்து தெளிவாக எழுதப்பட்டு வந்திருக்கிறதென்றே சொல்ல வேண்டும். இபின்பதூதா வஸாபு, மார்க்கோபோலோவின் குறிப்புகள், திருப்புல்லாணி கோயில் கல்வெட்டுகள், இதர அரசு ஆவணங்கள் நேரடியாகக் கீழக்கரையின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் இவை அனைத்திலும் காணப்படும் வர்ணனைகளும், சுட்டிக்காட்டுதலும் கீழக்கரையையே குறிக்கின்றன என்ற பிரசித்தி பெற்ற சரித்திர நாயகர்களின் கூற்றை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.klk top

old jumma pal9
பழங்கால ப்ழைய குத்பா பள்ளி

கீழக்கரையின் புராதனத் துறைமுகம், முத்து , சங்குகளைக் கடலுக்கடியில் சென்று தேடி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள கடல் தொழிலாளர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் சொல்லப்படும் கடற்கரைப் பள்ளிவாசல், வள்ளல் சீதக்காதியின் தாயாரைப் பெற்ற பாட்டனார் வாவாலி மரைக்காயர் (மறைவு கி.பி. 1614) மாமேதை சதக்கத்துல்லா அப்பா அவர்களின் ஆசிரியரான மக்தூம் சின்னினா (வலி) அவர்கள் அடக்கமாகியுள்ள 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதனமான பழைய கொத்பா பள்ளிவாசல், இஸ்லாம் பரவுவதற்கு முன்னே இங்கு வந்து போன அரபு குதிரை வியாபாரிகள் கீழக்கரையின் மரைக்காயர்கள் (மரக்கலராயர்கள்) பெரும் கப்பல்களில் கடல் வாணிபம் சேத சம்பவங்கள், இந்த வாணிபத்திற்காக அமைக்கப்பட்ட பெரும் பண்ட சேமிப்புக் கிடங்குகள் இவை அனைத்தும் கீழக்கரையின் சிறப்பையும் புராதனத் தன்மையையும் பறைசாற்றுகின்றன.

இது மாத்திரமன்று, கேரளாவில் கொடுங்கல்லூர் , சிராங்கனூர் , கோழிக்கோடு ஆகிய மலபார் பகுதிகளில் இஸ்லாம் மலர்ந்த ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய சமயப்பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்பதை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கேரள இஸ்லாமிய சமயப்பிரச்சாரக்காரர்கள், தமிழகத்தின் கீழ் பகுதியுலுள்ள கீழக்கரை போன்ற பட்டணங்களில் இதே காலகட்டத்தில் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபாடு கொண்டனர் என்பதற்கான சான்றுகளை இன்றும் கீழக்கரையில் காண முடியும். மலையாளப் பதங்களான “காக்கா” “வாப்பா” போன்றவையே
இங்கு வழக்கில் உள்ளன.klk view9

எனவே, கீழக்கரை பழமையானது, சிறப்பு வாய்ந்தது, வள்ளல் பெருமக்களையும், இறைநேசர்களையும், ஞானிகளையும், சன்மார்க்க மேதைகளையும் தன்னகத்தே கொண்டது. உன்னதமான, சிறப்பான பள்ளிவாசல்கள், மதரசாக்கள், கல்வி நிலையங்கள், கோவில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் இவ்வூரின் சிறப்புக்கு அணிசேர்க்கின்றன என்பதில் ஐயமில்லை.

நன்றி: கீழக்கரை இஸ்லாமி பைத்துல்மால் வெள்ளிவிழா மலர்.

இலக்கியங்களில் இடம் பெற்ற கீழக்கரையின் மறுபெயர்கள்: வகுதை, நினைத்ததை முடித்தான் பட்டிணம், பெளத்திர மாணிக்க பட்டிணம், வச்சிர நாடு, அணுத்தொகை மங்கலம், செம்பி நாடு, கேலிக்கரை, கிற்கிராப் பட்டிணம், கிர்க்கிரி , வலிமார் பட்டிணம், தென்காயல் , கொற்கை என்பன ஆகும்.

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *