IMG-20150205-WA0031

எங்கே செல்லும் இந்த பாதை ! அழும் மரங்களும்.. மனங்களும்…..

எங்கே செல்லும் இந்த பாதை

கீழைராஸா

உலகில் எந்த மூலைக்கு சென்றாலும், நம் மக்களுக்கு, சாயாக்கடைகளில் ஒன்று கூடும் பழக்கம் மட்டும் போகாது என்பதற்கு வெள்ளிக்கிழமை தோறும் துபாயில் முத்தீனா ஈகில் ரெஸ்டாரண்ட் அருகில் கூடும் கீழக்கரை இளைஞர்களே சாட்சி…!

Silver-Eagle-Restaurant-Deira-Dubia1

மாதத்தின் முதல் வாரம் என்பதால், இந்த       வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் அங்கே சென்றேன்…எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் தான்…காக்கா, தம்பி, மாமா, மச்சான், என்று நலம் விசாரிப்பில் நனைந்தபடி, நண்பர்களின் குழுவுடன் ஐக்கியமானேன்.

2113920

“என்ன மருவனே எப்படி இருக்கீங்க..?” எங்கேயோ கேட்ட குரல்., திரும்பினேன் அட நம்ம கருத்தமாமா.

“என்னமாமா எப்படி இருக்கீங்க..? நீங்க எப்ப இங்கே வந்தீங்க..? ஊருலே எல்லோரும் சவுக்கியமா…என்ன தோட்டம் துரவெல்லாம் விட்டுட்டு துபாய்க்கு வர உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு…?” ஆச்சரியமாக கேட்டேன்.

அட போ மருமவனே… தோட்டமெல்லாம்  இப்ப எங்கே இருக்கு அதைத்தான் ப்ளாட் போட்டு வித்தாச்சே… சிரித்தபடி கூறினாலும், சொல்ல முடியாத ஒரு சோக கீற்று அவர் கண்ணில் வந்து மறைந்தது…”

கருத்தமாமாவை எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே தெரியும்.. சின்ன வயசில் அலவாக்கார வாடியில் உள்ள நண்பன் வீட்டுத் தோட்டத்தில் குளிக்க போகும் போது, அவரை அடிக்கடி பார்த்திருக்கேன்.அவன் வீட்டு தோட்டம், வயல் போன்றவற்றை அவர் தான் பராமரித்து வந்தார். தோட்ட துறவு விசயங்களில் அவர் எடுப்பது தான் முடிவு, அந்த விசயத்தில் வேறு யாரும் தலையிட அவர் அனுமதிப்பதில்லை.

தோட்டங்களை பராமரிப்பது என்பது ஒரு கலை, அதை எல்லோராலும் செய்து விட முடியாது, கருத்தமாமா, செடி கொடிகளை தன் உறவுகளாகவே நினைத்து பழகுபவர்,அவருக்கென்று பெரிதாக சொந்த பந்தமெல்லாம் கிடையாது என்றாலும்,

”வேப்பன் மச்சானுக்கு(வேப்ப மரம்) என்னாச்சுன்னே தெரியலே, திடீருன்னு முடி கொட்டி நிற்கிறான், பார்க்கவே பரிதாபமா இருக்கு..!”

இந்தப்புள்ளே  மல்லிகா(மல்லிகைச்செடி) , வாசமும் மணமுமா இருக்கும்…இப்ப எவ கண்ணு பட்டுச்சோ..சோர்ந்து போயி கெடக்குது…!ன்னு அவர் உறவு கூறி சொந்தக்காரர்கள் போல செடி, கொடிகளுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, இவர் ஒரு ’மரை கலண்ட’ கேஸாக இருப்பாரோ.? என்று எண்ணிய நாட்கள் பல…

IMG-20150205-WA0031

ஒரு முறை நண்பனின் வாப்பா ஹாஜியார் மாமா, அந்த தோட்டத்தில் இறால் பண்ணை வைக்கலாம் என்ற திட்டத்துடன் ஒரு குழுவை அழைத்து வர, வந்தவர்கள் தோட்டத்தின் பாதி மரங்களை வெட்ட வேண்டுமென்று கூற, கருத்தமாமா கோபத்தில் அரிவாளை எடுத்துவந்து, நண்பனின் வாப்பாவிடம் கொடுத்து முதலில் என்னை வெட்டுங்கள், பிறகு மரங்களை வெட்டுங்கள்.. என்று வெறி கொண்டு கத்தியதை பார்த்து வந்தவர்கள் வெருண்டோடியதும் அதன் பின் அந்த தோட்டத்து பக்கமே ஹாஜியார் போகாததும் ஒரு பழைய கதை.

வழிப்போக்கர்கள் மரங்களின் இலையை பறித்தால் கூட,அடப்பாவி உன் பிள்ளைகளின் விரலை இப்படி ஒடிப்பியா..? என்று சீறிப்பாய்பவர்…

இன்று எப்படி எல்லாவற்றையும் விட்டு விட்டு துபாய்க்கு வந்து விட்டார்…?

ஈகிளில் டீ சொல்லி விட்டு, மீண்டும் பேச்சை தொடர்ந்தோம்…

ஏன் மாமா உங்களுக்கு என்னாச்சு…? எப்படி உங்க சொந்தகாரங்களை விட்டு விட்டு இங்கே வந்தீங்க, இப்ப இங்கே என்ன பண்ணுறீங்க..?

”அதை ஏன் மருமகனே கேட்குறே, ஊருலே மக்கள் தொகை ஜாஸ்தியா போச்சு, பொறக்குற ஒவ்வொரு பொம்பளை புள்ளைக்கும் வீடு கொடுக்கணுங்கற கட்டாயம் வேற..! 50 கோல் , 60 கோல்ன்னு இருந்த வீடு, புள்ளைங்களுக்கு கொடுத்து, கொடுத்து இப்ப 5 கோல்ன்னு வந்து நிற்குது, இனி ஊருக்குள்ளே இடமில்லைன்னு வர கொஞ்சம்,கொஞ்சமா வெளியே வர ஆரம்பிச்சாங்க, குளத்துமேடு, கொள்ளைகாடு, ஆவ்லியா குளம்,ன்னு எல்லாத்தையும் கட்டிடமா மாத்தினாங்க, வெளிநாட்டு பணத்தை குறி வச்சி, தோப்பு துறவு எல்லாத்தையும் ப்ளாட் போட, ரியல் எஸ்டேட் காரவங்க மாய வலையிலே ஊரே பின்னாலே போச்சு,

IMG-20150206-WA0001

ஹாஜியார் மட்டும் இதுக்கு விதிவிலக்கா என்ன..?அவங்க ஆசை வார்த்தையிலே தோட்டத்தை எல்லாம் வித்துட்டாரு…என் கண்ணு முன்னாலேயே எல்லா மரஞ்செடிகளை வெட்டி வீசிட்டாங்க…சின்ன வயசுலே இருந்து வெளிநாட்டுக்கு வான்னு எத்தனையோ பேரு என்னை கூப்பிட்டிருக்காங்க, ஆனா என் சொந்தங்களை விட்டுட்டு நான் வரலே, இன்னைக்கு என் சொந்தத்தை எல்லாம் வெட்டி வீசுனதுக்கப்புறம் எனக்கு அங்கே என்ன வேலை, அது தான் இங்கே வந்துட்டேன்…மாமாவின் கண்களில் கண்ணீர் திரையிட்டது…!

அவர் வேதனை எத்தனை பேருக்கு புரியுமென்று தெரிய வில்லை, ஆனால எனக்கு புரிந்தது…நேசித்தவைகள் அஃறிணையானாலும் வலி ஒன்று தான் என்பதை நான் நன்கறிவேன்…

”விடுங்க மாமா, எல்லாம் சரியாகிடும்…”

”எப்படி சரியாகும் மருமகனே..? பசுமைங்கறது சக்தி,மழை,தண்ணீர் அதை வெட்டி வீசிட்டு ஊருலே மழை வரமாட்டேங்குது, கிணத்துலே தண்ணீ வத்திப்போச்சு, கரண்டு காண மாட்டேன்றதுன்னு பொளம்பி என்ன புண்ணியம்..?”

“நீங்க சொல்றதை பார்த்தா, ஊரு டெவலப் ஆகவே கூடாதா..?” மச்சான் நச்சுன்னு ஒரு கேள்வி கேட்டான்…டீ வந்து விட்டதால் மூளை வேலை செய்ய ஆரம்பிடுச்சு போல..

“இல்லே தம்பி நான் அப்படி சொல்லை, ஒரு மரத்தை வெட்டினா, பத்து செடிகளை ஊண்டனும்னு தான் சொல்லுறேன்…நம்ம பிள்ளைங்களுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வச்சிட்டு போனோம்கிறதை விட, இன்றைக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச இயற்கையையும் அவங்களுக்கு இல்லாம ஆக்கிட்டு போகிடாதீங்கன்னு தான் சொல்லுறேன்…”

மாமா சொன்னதில் அர்த்தம் இருக்கத்தான் செய்தது…நாம் பார்த்த அந்த இயற்கை இப்போது இல்லை என்பது உண்மை தான்…

IMG-20150205-WA0033

”உங்களுக்குன்னு எந்த கமிட்மெண்டும் இல்லை… இந்த வயசுலே இங்கே வந்து வேலை செய்ய உங்க தலையெழுத்தா என்ன..?” மனதில் தோன்றியதை யோசிக்காமல் கேட்டேன்..

“என் பிள்ளைகளுக்கு இடமில்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை..?” அவரும் யோசிக்காமல் பதில் சொன்னார்.மேலும்

IMG-20150205-WA0032

“மருமவனே ’அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு சொல்லுவாங்க’ அங்கே,  கோடிகளை எடுக்க இயற்கையை அழிக்கிறாங்க, இங்கே கோடி கோடியா கொட்டி இயற்கையை கொடுக்கிறாங்க,இங்கே எனக்கு அல் அய்ன் zoo பார்க்குலே தண்ணீர் ஊற்றும் வேலை, அங்கே என்னை விட்டுப்போன  சொந்தங்களுடன் தான் இங்கே வாழ்கிறேன்… எனக்கு என்ன கஷ்டம் இருக்கிறது..?

download

எனக்கு சிலீரென்றது…உண்மையில் இவர் வரம் வாங்கி வந்தவர் தான்…! அன்று மரை கலண்டவரோ என்று நினைக்க வைத்தவர் என் மனதில் மலையளவு உயர்ந்து நின்றார்…

மொபைல் சிணுங்கியது…ஊரில் இருந்து உம்மா,

”வாப்பா எப்பூடி இருக்கே நல்லா இருக்கியா..? வர்ற வெள்ளிக்கிழமை உனக்கு ஏற்கனவே நேந்துக்கிட்ட நேத்திக்கடனை பண்ணிடலாம்னு இருக்கேன், அம்பது ஏழைகளுக்கு சாப்பாடு ஆக்கி போடணும், ஒரு பத்தாயிரம் கூட அனுப்பிடு…”

“அனுப்புறேம்மா, அதோட ஊருலே நூறு மரங்களை நடணும்னு நேந்துக்கிட்டேன்.. அந்த நேத்திக் கடனையும் நிறைவேற்றிடுங்க அதுக்கும் சேர்த்து அனுப்புறேன்…கரீம் காக்கா கிட்டே சொல்லி ஏற்பாடு பண்ணிடுங்க…”

“இது என்ன வாப்பா வித்தியாசமான நேத்திக்கடனா இருக்கு..? எது எப்படியோ, நேத்திக்கடனை செய்யாம விடக்கூடாது…கண்டிப்பா பண்ணிடுறேன் வாப்பா”

1986_Syrah_planting_at_Red_Willow

போன் கட்டானது…

கருத்தமாமா கண் கலங்க என் கரத்தை இருக்கப் பிடித்தார்…

”மருமவனே இந்த நேத்திக்கடன் போதும்… நம்ம ஊரு பிழைத்து கொள்ளும்…!”

சாலையோர மரங்கள் சருகுகளால் என்னை ஆசிர்வதித்தது…!   

– கீழைராஸா

உறவுகளே இது வெறும் கதையல்ல, இன்றைய உலகளவில் நிகழும் ஒர் உண்மைச் சூழல், செயற்கையாக சீரழிக்கப்படும் இயற்கையை காத்து, நம் எதிர்கால சந்ததியினருக்கு தாரை வார்க்க ஒரெ வழி நாம் பசுமையை நோக்கி பயணிப்பது தான்…இந்த கதையை வாசித்து விட்டு லைக் விடுகிறீகளோ இல்லையோ, ஒரு விதையை நடுங்கள்…அந்த விதை விருட்சமாகும் வேளை விடியல் பிறக்கும் இன்ஷா அல்லாஹ்….

கீழக்கரை நண்பர்களுக்கு…

பசுமை கீழக்கரை’ புதிய முயற்சி …

மரம் வளர்போம் .. மழை பெறுவோம் .. மனம் மகிழ்வோம்..

சிந்தும் மழையை சிதறாமல் காப்போம்..
இயற்கை பாசத்துடன் இணைவோம் “பசுமை கீழக்கரை “

புதிய பேஸ்புக் பக்கத்தில் இணைத்து கொள்ளhttps://www.facebook.com/greenkilakarai?fref=photo

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *