பாலை தேசத்து கீழைவாசிகள்…. வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு.. 3 கட்டுரையாளர் :ராஜாக்கான் என்ற கீழை ராஸா

raza-articleபாலை தேசத்து கீழைவாசிகள்
வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல்
ஆய்வு.. 3
கட்டுரையாளர் :ராஜாக்கான் என்ற கீழை ராஸா

மீள் பதிவு

கப்பலுக்கு போன மச்சான்…
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுஎனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக் கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும் போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருந்தும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

வைரமுத்துவின் “பூக்களும் காயம் செய்யும்” என்ற இந்த கவிதையை வாசிக்கும் போதெல்லாம், என்னையறியாமல், எங்கள் ஊரின் பெண்கள் தான் என் நினைவுகளில் வந்து செல்வார்கள்.

பொதுவாகவே பெண்கள் கல்நெஞ்சக்காரிகள் தான்… அதிலும் எங்க பகுதி பெண்கள் சற்று கூடியவர்கள்.. என்றே சொல்ல வேண்டும்.,ஆம் தன் குடும்ப நலனுக்காக எத்தனையோ ஆசாபாசங்களை தன் இதயத்துள் போட்டு புதைத்து விட்டு புன் சிரிப்புடன் நம் ஹீரோக்களை வெளிநாடுகளுக்கு வழியனுப்பும் கல்நெஞ்சக்காரிகள்…

இன்றைய கலாச்சாரத்தில் காதல் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்ட நிலையில் இந்த அத்தியாயம் வயசுப் பிள்ளைகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தால் அது மிகையில்லை…

அப்போதெல்லாம் பொதுவாக வயசுக்கு வந்த பெண்களை வெளியே பார்க்கவே முடியாது. வயசானவங்க கூட வெளியே வந்தால் ஒரு வெள்ளை புடவையை மேலே சுற்றிக் கொண்டு வருவார்கள்.இது இன்றைய பிள்ளைகளுக்கு தெரிய வாய்பில்லை.பர்தாவெல்லாம் இல்லாத அந்த காலத்தில் வீட்டில் உள்ள எட்டுமுழ வேஷ்டியை உடலில் சுத்திக் கொண்டு தான் வெளியூரெல்லாம் செல்வார்கள்.அந்த பழக்கத்தை மாற்றி, அரேபியாவில் உள்ளது போல் பர்தா, அபயாக்களை ஊருக்கு அறிமுகம் செய்தது நம்ம ஹீரோக்கள் தான்.

அன்று காதல் என்பது இன்று போல் இலகுவானதாக இல்லை.. அதிக பட்ச காதல் என்பதெ ஒரு நொடி தரிசனம் தான்…தெருவில் நடக்கும் போது சலாத்தி* வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளின் ஒரு நொடி தரிசனம் கிடைத்து விட்டாலே…பசங்க காற்றில் பறக்க ஆரம்பித்து விடுவார்கள்…திரும்ப அது போன்ற தரிசனத்திற்கு நாள் கணக்கில் காத்திருந்தாலும் வெறும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

அடுத்து வாய்ப்பு பள்ளிக்கூடம் செல்லும் வழி, அப்போதெல்லாம் பெரும்பாலோனோர் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே செல்வார்கள், சிலர் சைக்கிளில் வருவார்கள்…பெண் பிள்ளைகள் மாட்டு வண்டிகளில் பயணிப்பார்கள். திரைகளால் சூழப்பட்ட மாட்டுவண்டிகள்…பல்லக்கு போல் நகர்ந்து செல்ல, பசங்க.. எங்கேயாவது கேப்பு கிடைக்காதா என்று ஏங்கிய படி வண்டியை பின் தொடர்வார்கள்.
வண்டிக்காரர் சாட்டையால் மாட்டை அடித்து

”எருமை மாடுமாதிரி நிற்காமே ரோட்டை பார்த்து போ”ன்னு

மாட்டை சொல்வது போல் பசங்களை சொல்ல, வண்டிக்குள் இருந்து…சில்லரை சிந்தப்பட்டதை போல ”கொல்”லென்ற சிரிப்பு சிதறும் சிரிப்பொலியுடன் அந்த திரை மறைவில் ஒளிரும் கண்களை கண்டு விட்டு, இரண்டு நாட்கள் வானத்தை பார்த்தபடி நம்ம பசங்க கிறுக்குப் பிடித்து திரிவார்களே…அது தாங்க எங்க பகுதியின் காதல்.

எங்கள் பகுதியை பொறுத்த வரை வெளிநாடு என்பது, பாவமன்னிப்பு வழங்கப்படும் ஒரு புனிதஸ்தலமாகவே கருதபடுகிறது.

ஒருவன் என்ன தான் பொறுக்கித்தனம் பண்ணிக்கொண்டு, ஒன்றுக்கும் உதவாதவனாக, யாராலும் மதிக்கப்படாமல், திரிந்தாலும் வெளிநாடு போயிட்டு வந்தால் அவர் நிலையே வேறு…அவர் என்ன சொன்னாலும் ஆமோதிக்க அவரை சுற்றி ஒரு கூட்டம்…அவர் சொல்வதே வீட்டில் சட்டம், அவர் போல வருமா..? என்ற புத்திசாலி பட்டம், என அவர் புனிதராகி விடுவார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவரை மாப்பிள்ளை கேட்க கூட்டம் அலை மோதும்…அவரை சூடு சுரணை இல்லாதவனென்று திட்டியோரெல்லாம் சூடு சுரணையற்று அவர் வீட்டில் அவரை மாப்பிள்ளை கேட்டு கூடுவர்.என்றாலும் அது சொத்தை, இது நொள்ளை என்று ஹீரோ உட்பட குடும்பத்தினர் அனைவரும் பாரபட்சம் இல்லாமல், ஆளாளுக்கு தட்டி கழிக்க, ஆறுமாத விடுமுறையில், ஐந்து மாதங்கள் இதுலேயே முடிஞ்சி, கடைசி ஒரு மாதத்தில் அரக்கப்பறக்க* ஒரு பெண்ணை பேசி முடிக்கும் போது இன்னும் 15 நாள் விடுமுறையே பாக்கியிருக்கும் என்பது தான் மிகப்பெரிய சோகம்.

ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டு, அதே தருணத்தில் சபிக்கப் பட்டவர்கள் என்று சொல்வார்களே..அது நம்ம ஹீரோக்களுக்குத்தான் மிகச்சரியாகப் பொருந்தும்.என்னதான் பகட்டு பந்தாக்களுடன் நம்ம ஹீரோ வாழ்ந்தாலும், காதல் வாழ்க்கையில் அவர்கள் சபிக்கப் பட்டவர்களே…!

வெளிநாடு சென்று, தொடர்ந்து ஐந்து வருடங்கள் உழைத்து ஒடாகி, தன் தங்கச்சி கல்யாணம், லாத்தாவிற்கு வீடுகட்டுவதென்று பல கடமைகளை முடித்து, தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற கனவுகளுடன், ஊருக்கு வந்து, ஐந்துமாதங்களை பிரம்மச்சாரியாக கழித்து விட்டு கடைசி பதினைந்து நாட்களில் திருமணம் முடித்து, எஞ்சிய பத்துநாட்கள் எக்ஸ்பிரஸ் வாழ்க்கை வாழ்ந்து விட்டு, தன் மனைவியின் வாயால் ஐ லவ் யூ என்ற வார்த்தையை கூட கேட்காமல், அழுதபடி ஊர் செல்வார்களே.., அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் தானே…?

அந்த காலகட்டத்தில் நம்ம ஹீரோக்களின் காதல் களமென்றால் அது கடிதம் மட்டுமே…செவியில் விழுந்து இதயம் நுழைய எப்படி வார்த்தைகளுக்கு சக்தி உள்ளதோ அப்படித்தான் விழியில் விழுந்து இதயம் நுழைய வரிகளுக்கு பெரும் சக்தி உண்டென்று கடிதத்தை யார் நம்பினார்களோ இல்லையோ நம்ம ஹீரோக்கள் நம்பினார்கள்…

பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவது, நாள் கணக்காக எழுதுவது இப்படி எழுதி, எழுதி, ஒரு டைரியையே கடிதமாக அனுப்பும், ஹீரோக்கள் ஏராளம். அன்றெல்லாம் ஒருவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு கிளம்பினால், ஊரில் பட்டுவாடா செய்வதற்கு அவரிடம் ஒரு பெட்டியளவு கடிதங்கள் சேரும் என்பது கூடுதல் செய்தி.

தலைவன் இல்லாத வேளையில் தலையணை தான் துணை என்று வாழும் பெண்கள் சற்றே ஆறுதல் அடைந்ததும் இந்த கடிதத்தில் தான்.ஒரு முறை வந்த கடிதத்தை அந்த காகிதம் கிழியும் வரை வைத்து படிப்பது…அன்றைய காதலர்களின் வழக்கம்.

கடிதங்களை படித்த படி கணவனும் மனைவியும் கற்பனையில் மிதக்க, தாங்கள் சேர்ந்து வாழ்ந்த அந்த நிமிட சந்தோச கணங்களுக்கு பயணிப்பார்கள்…இந்த எண்ணங்களுக்குத்தான் எத்தனை சக்தி..!?, விசா இல்லாமல், டிக்கெட் இல்லாமல் நினைத்த மறு நொடியே நினைத்த இடத்திற்கு செல்லும், மாபெரும் சக்தி…!

எல்லாம் வல்ல இறைவன் மிகவும் மகத்தானவன். அவனின் இது போன்ற சின்னச் சின்ன மாற்று ஏற்பாடுகளால் தான், மனிதன் பெரிய பெரிய துன்பங்களை சகித்துக் கொள்ள இயலுகிறது.

காதில் கேட்கும், கண்ணில் பார்க்கும் எல்லா பொருளும் அவள் ஞாபகத்தை அதிகரிக்க, நம்ம ஹீரோ நிலை கொள்ளாது தவிப்பார்…அந்த தவிப்பின் உச்ச கட்டத்தில் அவர்கள் பயன் படுத்தும் பிரம்மாஸ்திரம் தான் எமர்ஜன்ஸி லீவு என்றழைக்கப்படும் அவசரகால விடுப்பு…இதற்கும் பல சட்டதிட்டங்கள் உண்டு. இது வீட்டில் நடக்கும் முக்கிய நபர்களின் திருமணம், இறப்பு போன்ற சுப துக்க காரியங்களுக்கு மனசாட்சியின் அடிப்படையில் வழங்கப்படும் ஒரு விடுமுறை. இது மூலம் அதிகப்பட்சம் பத்துநாட்கள் விடுமுறை எடுக்கலாம். சம்பளம் இல்லாத, இந்த விடுமுறையில் அனைத்து செலவுகளும் நம் ஹீரோக்களையே சாரும். இதில் கொடுமை என்ன வென்றால்,இத்தனை தவிப்புகளை இதயத்துள் உள்ளடக்கி, அவர் ஓடி வரும் போது, அவருக்கு உம்மா வீட்டு வகையில் தடப்புடலான வரவேற்பு இருக்காது.

”ஏண்டா இப்பதானே போனே..இப்படி பொசுக் பொசுக்குன்னு ஓடி வந்துட்டா, உன் தங்கச்சிவொலே குமராகவே இருக்க வேண்டியது தான்…”என்று கண்ணைக் கசக்கியபடி உம்மாவின் புலம்பத் தொடங்க…ஹீரோவிற்கு வாழ்க்கையே வெறுத்து விடும்..

‘சே என்ன உலகம் இது, பெண்களை மட்டுமே குமருகளாக சித்தரிக்கும் உலகம்..ஆண்களுக்கு ஆசாபாசம் இல்லையா…? நாங்கள் என்ன வெறும் சம்பாதிக்கும் இயந்திரங்கள் தானா…?’

இந்த வேதனைக்கு மத்தியில் நம்ம ஹீரோக்களின் ஒரே ஆறுதல்..அவர்கள் மனைவி தான்.சில நாட்களில் மீண்டும் கண்ணீருடன் பிரிவு…வழியனுப்பும் போது மனைவி கூறுவாள்…

”இப்படி அடிக்கடி எல்லாம் வராதீங்க…மாமி தப்பா எடுத்துக்க போறாக, நம்மளும் நாளு பேருக்கு மத்தியில் நல்லா இருக்கணும் அதை ஞாபகம் வச்சிக்கிருங்க…இப்படி பணத்தை போட்டு கண்ணா பின்னான்னு செலவழிக்காதீக..”

உம்மா சொன்னதில் கோபப்பட்ட நம்ம ஹீரோ, பொஞ்சாதியின் தேன் தடவப்பட்ட தலையணை மந்திரங்களில் மயங்கிப்போவார்..

அதன் பின் அவருக்கு ஊருக்கு செல்லும் அனைத்து கதவுகளும் அடைக்கப் பட்டு விடும்.நாளாடைவில் வேலைப்பளுவில் சிக்குண்டு, ஊரிலிருந்து வந்த போதிருந்த பிரிவின் வேதனையை படிப்படியாக குறைத்து விடும்.

காயத்திற்கு மருந்திடுவதில் காலத்தைப் போல் ஒரு சிறந்த மருத்துவம் வேறில்லை…இந்த நொடியே செத்து விடலாம் என்று தோன்றிய எத்தனையோ தருணங்கள் இன்று ஒரு பெருமூச்சில் நம்மை கடந்து செல்கிறது..! ஆம் இந்த மறதி தான் நம் ஹீரோக்களின் மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் நம் ஹீரோக்களின் காதல் என்பது,

விடுமுறையை நோக்கி காத்திருப்பது…,
அவளின் கடிதங்களுடன் தனித்திருப்பது…,
வெட்கம் விலகிய அவளின் வார்த்தைகள் கேட்க ஏங்கி தவித்திருப்பது…

அவ்வளவே…!
பெரும்பாலான நம் ஹீரோக்களின் இளமைகாலங்கள் இப்படி காத்திருப்பதிலேயே கழிந்து விடுவது தான் மாபெரும் சோகம்.உணர்வுகளை, உணர்ச்சிகளை, அழுது வெளி காட்டுவது பெண்களின் பலம். ஆனால் ஆண்கள் அழுவதில்லை…அடக்கிக் கொள்கிறார்கள்… அது அழுது வடிப்பதை விட மிகவும் கொடியது….
என்ன மக்களே, ரொமாண்டிக்காக எதிர்பார்த்த காதல் சோகத்தில் முடிந்து விட்டதா…? இதுவரை நம்ம ஹீரோக்களின் உள்ளூர் வாழ்க்கையை பார்த்தீர்கள்…வெளிநாட்டில் அவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா…? ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு….

மீண்டும் பேசுவோம்…

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *